நேற்று ஷேக்ஸ்பியர் பற்றிய எனது உரையைக் கேட்பதற்கு நிறையப் பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர், பல்வேறு கல்விப்புலம் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள், அரங்கு நிரம்பி இருக்கை கிடைக்காமல் பலரும் தரையில் அமர்ந்து உரையைக் கேட்டார்கள்.
டெல்லி. பெங்களுர். மும்பை, இலங்கை, மதுரை, கோவை என்று பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு இந்த உரைகளைக் கேட்பதற்காகவே வந்து அறை எடுத்து தங்கியிருப்பதாக சில நண்பர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டார்கள், இந்த ஆதரவு மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கிறது
••
உலக இலக்கியம் குறித்த எனது தொடர் சொற்பொழிவின் காணொளி சென்னை புத்தகக் கண்காட்சியில் தனி டிவிடியாகவே வெளியாக இருக்கிறது.
எனது உரையோடு கூடுதலாக ஒவ்வொரு எழுத்தாளரையும் பற்றி எளிய அறிமுகமும் அவர் தொடர்பான உண்மையான காட்சிப்பதிவுகளும். திரைப்படமாக்கபட்ட நாவலின் சிறிய காட்சித் தொகுப்பும் அந்த டிவிடியில் இடம் பெறும்.
ஆகவே அயலில் வசிக்கும் நண்பர்கள் அந்த டிவிடியின் வழியே எனது உரையைக் காண இயலும்.
உரையின் எழுத்துவடிவமும் தனிப்புத்தகமாக வெளியாக உள்ளது.
ஜனவரியில் உயிர்மை பதிப்பகத்தோடு தொடர்பு கொண்டு இந்த டிவிடி மற்றும் புதிய புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்
••