உலகம் சுற்றிய மனிதர்.


அறிவியல் மேதை ஜி டி நாயுடு எழுதிய நான் கண்ட உலகம் என்ற பயணக்கட்டுரை நூலை வாசித்தேன். இணையத்தில் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது.

இலங்கையிலிருந்து கிளம்பி ஒராண்டு காலம் உலகம் முழுவதையும் சுற்றிவந்திருக்கிறார் ஜி.டி நாயுடு. இது போல நான்கு முறை வேறுவேறு பயணங்கள். ஒவ்வொன்றும் பலமாத காலங்கள். இந்தப் பயணத்தில் தனக்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பயணநூல்.

குறிப்பாக அவர் இலங்கையிலிருந்து பயணம் செய்த பிரெஞ்சு கப்பல் பாதிக்கடலில் தீப்பிடித்துக் கொண்டது. உயிர்பிழைக்கக் கடலில் குதித்து நீந்தி மிதவை ஒன்றின் துணையோடு ரஷ்ய எண்ணெய் கப்பலில் போய்ச் சேர்ந்திருக்கிறார். இந்த விபத்தில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு அவர் இரண்டு பெண்களைக் காப்பாற்றி ரஷ்யக்கப்பலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

லண்டனின் வாழ்க்கைப் பற்றிச் சொல்லும் நாயுடு அங்கே உள்ள காவலர்களைச் சோதனை செய்து பார்த்த விதமும் தனக்குத் தானே தபால் போட்டுக் கொண்டு முகவரியில்லாமல் எப்படிக் கடிதம் வந்து சேரும் எனப் பரிசோதித்த விதமும் கையில் காசில்லாதவர் போல நடித்து உதவி பெற்ற வேடிக்கையானவை.

தனது 16 எம் எம் கேமிராவை வைத்துக் கொண்டு மிக முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாம் ஜார் மன்னர் இறந்த போது பக்கிம்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்.

அது போலவே 1936ல் ஜெர்மனிக்குச் சென்று ஹிட்லரைச் சந்தித்து அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஹிட்லர் கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். முசோலினியை படம் எடுத்த அனுபவத்தையும் எழுதியிருக்கிறார்

கமலா நேரு நோயுற்ற காரணத்தால் அவரை சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அந்த நாட்களில் அங்கே துணையிருந்த நேருவைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.. அந்தப் புகைப்படத்திலும் நேருவின் கையெழுத்து உள்ளது. இது போல மகாத்மா காந்தி அவர்களைப் புகைப்படம் எடுத்த நிகழ்வையும் குறிப்பிடுகிறார். தான் செல்லுமிடத்திலுள்ள முக்கிய மனிதர்கள், கலைக்கூடங்களைக் கேமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஜிடி நாயுடு

அந்தப் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் என்னவானது என்று தெரியவில்லை.

ஒருமுறை சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொள்ளையர்களிடம் சிக்கி மீண்டிருக்கிறார். நோஞ்சான் போலிருந்த அவரைக் கொள்ளையர்கள் விட்டுவிட்டார்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வெளியான அவரைப் பற்றிய செய்திகள். அமெரிக்காவில் இயந்திர தொழில்நுட்பம் பயின்ற தகவல்கள். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் என அபூர்வமான ஆவணங்களின் தொகுப்பாக உள்ளது

வெளிநாடுகளில் பயணம் செய்த போதும் முழுமையான சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்ட தனது உணவுப்பழக்கம் பற்றியும் வேறுவேறு நாடுகளில் தான் எதிர்கொண்ட பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றியும் வேடிக்கையாக எழுதியிருக்கிறார்

குறிப்பாகச் சிகாகோவில் ஒரு நாளிரவு அவரது அறையில் நாலைந்து பெண்கள் போதையில் உள்ளே நுழைந்து வெளியேற முடியாது எனச் சண்டையிட்டு அங்கேயே உறங்கிவிட்டார்கள். அவர்களுக்குத் தான் பாதுகாப்பு அளித்தபடியே இரவெல்லாம் விழித்திருந்தேன் என்கிறார் ஜிடி நாயுடு

ஜிடிநாயுடு உருவாக்கிய மின்சாரச் சேவிங் ரேஷர் பற்றியும் அதுசெயல்படும் விதம் குறித்தும் அவர் விளக்கிக் காட்டிய நிகழ்வும், 16 எம் எம் கேமிராவை கண்டுபிடித்தவருடன் அவர் செய்த நேர்காணலும் வியப்பளிக்கிறது

உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு கொச்சி துறைமுகத்தில் கப்பலில் வந்து இறங்கிய போது அவரை ஜெர்மன் உளவாளி என நினைத்து ஐந்து நாட்கள் சோதனை செய்திருக்கிறார்கள். காரணம் அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான கடிதங்கள். புகைப்படங்கள். முடிவில் சந்தேகப்படும்படி ஒன்றும் கிடைக்கவில்லை என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மோட்டார் கார் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள மேற்கொண்ட பயணத்தில் எத்தனை வேறுபட்ட அனுபவங்களைப் பெற்றிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது

••

0Shares
0