சீனாவைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பகிரும் செய்திகள். காட்சிகள் பெரிதும் எதிர்மறையான பிம்பத்தைத் தரக்கூடியது. இது போலவே சீன அரசு தன்னைப் பற்றியும் சீன மக்களின் வாழ்க்கை பற்றியும் பகிரும் காட்சிகளும் நம்பகத்தன்மையில்லாதவை. பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டவை.

உண்மையான சீனாவின் நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து சில ஆய்வாளர்கள். பத்திரிக்கையாளர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். அது போன்ற ஒரு ஆவணப்படமே Ascension (2021)
ஜெசிகா கிங்டன் இயக்கிய இந்த ஆவணப்படம் இன்றைய சீனாவின் வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சியினை உண்மையாக விவரிக்கிறது
இந்த வகை ஆவணப்படத்தை Direct cinema என்கிறார்கள். இப்படங்கள் யதார்த்தத்தை நேரடியாகப் படம்பிடித்து உண்மையாகப் பதிவு செய்கின்றன.
நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை. தொழிலாளர்களின் வாழ்க்கை. வசதிபடைத்தவர்களின் வாழ்க்கை என மூன்று தளங்களில் படம் இன்றைய சீனாவை ஆவணப்படுத்துகிறது
சீனாவின் பெரிய தொழிற்சாலைகள் இயங்கும் விதம். அங்கிருந்து மின்னணு பொருட்கள் துவங்கி ஆயுத்த ஆடைகள் வரை பல்வேறு பொருட்கள் உலகெங்கும் ஏற்றுமதியாகும் முறை குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஜோங்ஹான் நகரில், சிலிக்கான் பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் பெண்கள் எப்படித் தத்ரூபமாகச் செக்ஸ் டால் எனப்படும் பெண் பொம்மைகளைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண் பொம்மைகள் நிஜப் பெண்ணின் உடலமைப்பில் பெரிய மார்பகங்களுடன் உருவாக்கப்படுகின்றன. இந்த சிலிகான் பொம்மைகளைப் பெண்களே வடிவமைக்கிறார்கள். வண்ணம் தீட்டுகிறார்கள். உடல் என்பதும் நுகர்வு பொருள் தான் என்பது போலவே அந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.
படத்தின் மற்றொரு பகுதியில் விற்பனை பிரதிநிதிகளாக உள்ள பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் அவர்கள் எப்படிச் சிரிக்க வேண்டும். எப்படி ஒருவரை வரவேற்க வேண்டும். உணவு மேஜையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கிறார்கள்.

சிரிப்பதற்கு உதட்டை எவ்வளவு விரிக்க வேண்டும், எப்படி எட்டுப் பற்களைக் காட்ட வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள். அதன்படியே அத்தனை பெண்களும் சிரித்துக் காட்டுகிறார்கள்.
குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதம் மற்றும் அதற்கென இயங்கும் சந்தையினைக் காட்டுகிறார்கள். அங்கே கூவிக்கூவி ஆள் பிடிக்கிறார்கள். நவீன கொத்தடிமை முறை செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது.

வேலை செய்யும் இடத்தில் No tatoos, No Hair dye என ஒரு விளம்பரம் சொல்கிறது. நின்றபடியே செய்யும் வேலைக்கு மாற்றாக உட்கார்ந்து செய்யும் வேலை காத்திருக்கிறது என்கிறது மற்றொரு விளம்பரம். ஒரு மணி நேரத்திற்குச் சம்பளம் 2.99 டாலர் என ஒருவன் மைக்கில் அறிவித்தபடியே இருக்கிறான்.
ஆவணப்படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கேளிக்கை மையங்கள் செயல்படும் விதம். பணக்காரர்களின் ஆடம்பர விளையாட்டு மைதானங்கள், இரவு வாழ்க்கை போன்றவை சித்தரிக்கப்படுகிறது.
ஒரிடத்தில் சைக்கிள்கள் மலையாகக் குவிந்து கிடக்கும் காட்சி. சாலையோரம் மக்கள் வேலைக்காகத் திரண்டு காத்திருப்பது. பிரம்மாண்டமான நீச்சல்குளத்தின் காட்சி. ரோபோக்களைப் போல மனிதர்கள் பணியாற்றும் விதம். பெருநகரம் சிறுநகரம் என பேதமின்றி நுகர்வு கலாச்சாரம் பரவியுள்ள விதம் போன்றவற்றை படம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது
வெளியுலகம் சீனாவைப் பற்றி அறிந்துள்ள பிம்பத்திற்கு மாற்றாக உண்மையான சீனா எப்படி இயங்குகிறது என்பதைக் காட்டுகிறார்கள். பொதுவாக ஆவணப்படங்களில் வாய்ஸ் ஒவர் வழியே தான் செய்திகள் விவரிக்கப்படுவது வழக்கம். இப்படத்தில் வாய்ஸ் ஒவர் கிடையாது. நாமே காட்சிகளைப் பின்தொடருகிறோம். புரிந்து கொள்கிறோம்.

கடினமாக உழைத்தால் பெரிய கனவினை அடையலாம் என்ற சீனாவின் முழக்கம் உண்மை தானா என்பதைப் படம் ஆராய்கிறது.
வேலை செய்யும் இடத்தில் அதிகாரி உன்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பணிந்து போவது போல நடித்துவிடு. உன் கோபத்தைக் காட்டிக் கொள்ளாதே என்று ஒரு காட்சியில் அறிவுரை சொல்கிறார்கள். பல காட்சிகளில் உழைப்பாளர்களிடம் அந்த நடிப்பு எப்படி வெளிப்படுகிறது என்பதை நாமே காணமுடிகிறது.
ஹைனானில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு வெளியே, ஒரு இளம் மாடல் வெள்ளை நிற ஆடையுடன், பெரிய தொப்பியுடன் வெயிலில் நின்றபடியே போஸ் கொடுக்கிறாள். அவளைப் புகைப்படம் எடுப்பவன் அவசரமாகப் படம் எடுக்கிறான். அவள் சலிப்போடு நான் சூரிய வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்துவிடுவேன் என்கிறாள். அதே இடத்தில் ஒரு நடுத்தர வயது தொழிலாளி மௌனமாக தோட்டவேலை செய்து கொண்டிருக்கிறான். கேமிரா அவனை நோக்கிச் செல்கிறது. இந்த இரண்டு வாழ்க்கையும் இணைந்தது தான் இன்றைய சீனா என்கிறது ஆவணப்படம்.
தொழிற்சாலைகள், சந்தைகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பயிற்சி கருத்தரங்குகள், மறுசுழற்சி ஆலைகள், வணிகக் கூட்டங்கள். மற்றும் பொழுதுபோக்குப் பூங்காக்கள் ஆகியவற்றின் காட்சிகளை நேர்த்தியாக இடைவெட்டி பதிவு செய்துள்ள கிங்டன் 95 நிமிடங்களுக்குள் 50க்கும் மேற்பட்ட இடங்களை வியப்பூட்டும் கோணங்களுடன் பதிவு செய்திருக்கிறார்

விதவிதமான செல்போன்கள். கார்கள். அதிநவீன தொடர்பு சாதனங்கள். ஒளிரும் பிரம்மாண்டமான தொலைக்காட்சி திரைகள். விண்முட்டும் கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் எனச் சீனா அசுர வளர்ச்சியை அடைந்தாலும் அங்குள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்படவில்லை. அவர்கள் மனித இயந்திரங்களைப் போலவே வாழுகிறார்கள். பெருநகரமும் அதன் சகல சுகபோகங்களும் வசதியானவர்களுக்கு மட்டுமே கிட்டுகின்றன என்பதை படம் சுட்டுகிறது.
கொரோனா பரவலுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தைச் சீனாவில் படமாக்கியிருக்கிறார்கள். கொரோனாவிற்குப் பின்பு சீனாவைப் பற்றிய உலகின் பார்வை மாறிவிட்டது. அது இந்தப் படத்திற்குப் புதிய பரிமாணத்தைத் தந்திருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் பீட்டர் என்டெல். அது உண்மை என்பதை நாமும் உணரமுடிகிறது.
••