
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது செயல்பாட்டில் தானிருக்கிறது. சுயலாபங்களுக்காக சகமனிதர்களை ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் தயங்காத மனநிலை வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள சூழலில் எளிய மனிதர்களின் முக்கியத்துவத்தை மறுபடி மறுபடி எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது.
குறிப்பாக சரித்திரம் பற்றிய நமது பொதுகருத்தில் தலைவர்களும், சாதனையாளர்களும், மகாராஜாக்களும், சர்வாதிகாரிகளும் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான உயிர் துறந்த சாதாரண மனிதர்கள் எவரும் அடையாளப்படுத்தபடவேயில்லை. சமூகமாற்றங்கள் அடித்தட்டு மகக்ளின் நம்பிக்கையும் உறுதுணையும் இன்றி ஒரு போதும் சாத்தியமாவதேயில்லை . அந்த உண்மையை அழுத்தமாக சொல்லும் திரைப்படம் எல் வயலின்.
Francisco Vargas இயக்கியுள்ள இப்படம் சமகால லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில் தனித்துவமானது. 1970களில் நடைபெற்ற மெக்சிக புரட்சியே கதையின் பின்புலம். கான்ஸ் திரைப்பட விருது உள்ளிட்ட 46 முக்கிய விருதுகளை பெற்றுள்ள இப்படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படமாக விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது.
மெக்சிகோவில் விவசாய நில சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஏகபோக முதலாளித்துவம் உருவான சூழலில் அதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் எளிய மக்கள் போராட துவங்கினார்கள். அதை அரசு கடுமையாக ஒடுக்கியது. அரசை எதிர்த்து போரிட கொரில்லா போராளிகள் உருவானார்கள். சமூக மாற்றத்திற்காக போரிடும் போராளிகளுக்கு கிராமப்புற எளிய மக்கள் அதிகம் உதவி செய்தார்கள். சியாரா மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கொரில்லா போராளிகளுக்கு உதவி செய்வதன் வழியே தங்களது வசிப்பிடம் இழந்து, மனைவி மக்களை பறிகொடுத்து ராணுவத்தின் வன்கொடுமைக்கு உள்ளானதை படம் மிக உண்மையாக விவரிக்கிறது.
இது கதையின் பின்புலம் ஆனால் கதையின் மையநாயகன் டான் புளுடார்கோ ஒரு இசைக்கலைஞர். ஊர் ஊராக சென்று வயலின் வாசிக்கும் நாடோடி இசைஞர். அடிப்படையில் ஒரு விவசாயி. பதிமூன்று வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு கையை இழுந்த அவர் ஒற்றை கையால் வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். அவரது மகன் பேரன் என மூன்று தலைமுறையும் இசையில் அதிக நாட்டம் கொண்டவர்களே.
ப்ளுடார்கோ அவரது மகனும் கொரில்லா போராளிகளுக்கு நேரடியாக உதவி செய்து வருகிறார்கள். சோளம் விளைந்துள்ள நிலத்தில் கொரில்லாக்களின் ஆயுதங்களை ஒளித்து வைப்பதற்கும் அடிப்படையான உணவு தேவைகளுக்கும் உதவி செய்கிறார்கள். இவை தொடர்ந்து நடைபெற்று வந்ததாக படத்தின் துவக்கத்திலே சொல்லப்பட்டுவிடுகிறது.
ஒரு நாள் கொரில்லா போராளிகளை அடக்க முயன்ற ராணுவம் அந்த மலைக்கிராமத்தை சுற்றிவளைத்து அங்குள்ளவர்களை சித்ரவதை செய்கிறது. பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள். எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். தானிய வயல் சிதைக்கபடுகிறது. கூக்குரல் அவலம் மனித வதைகள் கண்முன்னே அரங்கேறுகின்றன. கறுப்பு வெள்ளையில் படமாக்கபட்ட இக்காட்சிகள் நேரடியாக நாம் அந்த சூழலின் வெக்கைக்குள் வலிக்குள் இருப்பது போன்ற நெருக்கத்தை உருவாக்குகிறது. .
Martín Boege Paré யின் கவித்துவமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. ஹேண்ட் டில்ட்டாகவே கேமிரா பயன்படுத்தபட்டுள்ளதால் காட்சிகள் வன்முறையின் ஊடாக கூடவே நகர்கின்றன .இடைவெட்டி நெருக்கமாக முகத்தில் அறைவது போன்றி தோன்றி மறைகின்றன. ராணுவத்தின் வன்முறையால் மக்களின் அவலக்குரல் நம் மனதை உலுக்குகிறது. இந்த அடக்குமுறை காட்சிகளின் பிறகு கேமிரா நிலை கொண்டுவிடுகிறது.
சலனமற்ற கண்களால் பார்க்கபடுவது போன்றே கேமிரா காட்சிகளை பதிவு செய்கிறது. முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடுகளின் போது கூட கேமிரா அதிகம் சலனம் கொள்வதில்லை. அடங்கிய வலி போன்று கேமிரா செயல்பட்டிருக்கிறது
இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அருகாமை நகரம் ஒன்றில் தனது பேரனுடன் ப்ளுடார்கோ இசைநிகழ்ச்சி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வாங்கி கொண்டிருக்கிறார். அவர்கள் ஊர் திரும்புகிறார்கள். ஆனால் தங்கள் கிராமம் தாக்குதலுக்கு உள்ளானதையும், சந்தேகப்படுகின்றவர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்து போவதையும் வழியில் காண்கிறார்கள். வேறுவழியில்லாமல் இருப்பிடம் இல்லாமல் அலைந்து திரியும் கிராமவாசிகளுடன் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். ப்ளுடார்கோவிற்கு இந்த சம்பவம் ஆழமான மனவேதனையை உருவாக்குகிறது. அவரது மகன் நேரடியாக ஆத்திரம் கொள்கிறான். சாவை பற்றி பயமின்றி ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தபட வேண்டும் என்கிறான்.
காட்டிற்குள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கொரில்லா போராளிகள் மலைகிராம விவசாயிகளுக்காக வருத்தபடுகிறார்கள். அவர்களை காப்பாற்ற தாங்கள் போராடுவதாக உறுதி சொல்கிறார்கள். ராணுவம் சுற்றி வளைத்துள்ள கிராமத்தில் தாங்கள் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எப்படி வெளியே எடுப்பது என்பதே கொரில்லாவின் அப்போதைய முக்கிய பிரச்சனை. ப்ளுடார்கோ தான் அதை எப்படியாவது வெளியே எடுத்து கொண்டுவர முயற்சிப்பதாக கூறுகிறார். மாட்டிக் கொண்டால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும் அவர் போராளிகளுக்காக ஆயுதங்களை எடுத்துவர தனது சொந்த ஊருக்கு ஒரு கோவேறு கழுதையில் ஏறி விவசாயி போல செல்கிறார்.
ராணுவ முகாம் அமைத்துள்ள தடுப்பில் அவரை விசாரணை செய்கிறார்கள். தான் ஒரு வயலின் இசைக்கலைஞர் என்று சொல்லி தனது சோளக்காட்டை பார்வையிட போவதாக சொல்கிறார். அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். ஒற்றை கையால் எப்படி வயலின் வாசிக்க முடியும் என்று ராணுவ உயர் அதிகாரி சந்தேகம் கொள்கிறான். அவனுக்காக ப்ளுடார்கோ வயலின் வாசித்து காட்டுகிறார்.
அந்த இசையில் மயங்கிய ராணுவ அதிகாரி தனக்கு அவர் வயலின் கற்று தர வேண்டும் என்று சொல்லி அவரை கிராமத்திற்குள் அனுமதிக்கிறான். சோளக்காட்டின் ஊடே ஆயுதங்கள் புதைக்கபட்டிருப்பதை அடையாளம் கண்டு கொள்கிறார். ப்ளுடார்கோவிற்கு எப்படி அதை வெளியே எடுப்பது என்று தெரியவில்லை. இதற்காக அடுத்த முறை வருகிறார். இப்போது ராணுவஅதிகாரி அவரது இசைத்திறனை கண்டு தன்னோடு கூடவே இருக்கும்படி கேட்கிறான். அவர் மறுக்கவே அவரது வயலினை பிடுங்கி வைத்து கொள்கிறான். வயலினை இழப்பதில் அவருக்கு மனதேயில்லை. போராடி அதை மீண்டும் பெறுகிறார். இந்த நிலையில் அவரது மகனை ராணுவம் கைது செய்துவிடுகிறது. அவன் இழுத்து செல்லப்படுவதை கண்ட போதும் ப்ளுடார்கோ சலனம் கொள்வதேயில்லை.
முடிவில் அவர் தனது வயலின் பெட்டியில் ஆயுதங்களை மறைத்து கொண்டுவருவது என்று முடிவு செய்து தனது கிராமத்திற்கு செல்கிறார். அவரது கடைசி முயற்சியே படத்தின் உச்சநிலை.ஒற்றை கையுடன் வயலின் வாசிக்கும் இசைக்கலைஞரான நடித்திருப்பவர் Ángel Tavira . 78 வயதான இசைக்கலைஞரான அவர் பராம்பரியமான இசைக்குடும்பத்தை சேர்ந்தவர். நிஜமாகவே விபத்தில் ஒரு கையை இழுந்த வயலின் இசைக்கலைஞர். பள்ளி ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். முதன்முறையாக சினிமாவில் நடித்திருக்கிறார்.
அவரது கண்களும் முகபாவங்களும் அற்புதமாக மனஉணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்த படத்திற்காக கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிப்பிற்காக விருதை பெற்ற அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார்.முழுப்படமும் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டதால் ஒரு டாக்குமெண்டரி போன்ற நிஜமான உணர்வை தருகிறது.
படமெங்கும் மெக்சிகோவின் நாட்டார் மரபிசை வெகு சிறப்பாக பயன்படுத்தபட்டிருக்கிறது. இயக்குனர் பிரான்சிகோ வர்கஸ் முன்னதாக மெக்சிகோவின் பராம்பரிய இசை பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கியிருக்கிறார். அந்த தூண்டுதலில் இருந்தே எல் வயலின் உருவானதாக குறிப்பிடுகிறார்
ப்ளுடார்கோ போன்ற எண்ணிக்கையற்ற கலைஞர்களின் அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் மெக்சிகோவின் சரித்திரம் கண்டு கொள்ளவேயில்லை. அந்த உண்மையை எடுத்து சொல்வதே தனது படத்தின் பிரதான நோக்கமாக இருந்தது என்கிறார் வர்கஸ். இசை மொழியில்லாமலே அக உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடியது. இப்படத்திலும் அதுவே சாத்தியமாகியிருக்கிறது.
*