எழுத்தாளனின் உலகம்

THE FRAGRANCE OF GUAVA கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. 120 பக்கங்கள் கொண்டது. கொலம்பிய பத்திரிக்கையாளர் Plinio Apuleyo Mendoza எடுத்த நேர்காணலது. மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதில் தான் எவ்வாறு எழுத்தாளராக உருவானேன் என்பதில் துவங்கி தனது நம்பிக்கைகள். எழுத்துமுறை, நட்பு. குடும்பம். அரசியல் என மார்க்வெஸ் விரிவாக உரையாடியிருக்கிறார்.

நான் அடிக்கடி வாசிக்கும் நூலிது. இதன் சில பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளராக உலகமே கொண்டாடும் மார்க்வெஸ் தனது புகழ்பெற்ற தனிமையின் நூற்றாண்டுகள் நாவலை எழுதும் நாட்களில் கையில் காசில்லாமல் நெருக்கடியில் வாழ்ந்த விதத்தை வெளிப்படையாக நினைவு கொண்டிருக்கிறார்.

மார்க்வெஸ் எழுதும் அறையில் எப்போதும் ஒரு மஞ்சள் ரோஜா பூ இருக்க வேண்டும். அது அவரது நம்பிக்கை. கரீபியர்கள் கண்திருஷ்டிக்காக இது போல மஞ்சள் மலர்களை வைப்பது வழக்கம். ஒருவேளை அந்தப் பழக்கம் மார்க்வெஸிடமும் தொடர்ந்திருக்கக் கூடும். அவர் நோபல் பரிசு பெறச் சென்ற போதும் மஞ்சள் மலரை கோட்டில் அணிந்திருந்தார். அவர் மட்டுமின்றி அவருடன் வந்திருந்தவர்களும் மஞ்சள் மலர்களை அணிந்திருந்தார்கள். அதை ஊடகங்கள் கேலி செய்தன.

இருபது வயதிலிருந்தே தனக்குக் கம்யூனிசத்தின் மீது விருப்பம் இருந்து வந்தது. காஸ்ட்ரோவுடன் நட்பு கொள்வதற்கு அது முதற்காரணம். காஸ்ட்ரோ ஒரு தீவிர இலக்கிய வாசகர். தன்னைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் அரசியலை விடவும் இலக்கியமே அதிகம் பேசுவார் என்கிறார் மார்க்வெஸ். கையெழுத்துப்பிரதியில் தனது Chronicle of a Death Foretold கதையை வாசித்துத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் காஸ்ட்ரோ என்றும் மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். ஒருமுறை காஸ்ட்ரோவிற்குப் பரிசாக ஒரு புத்தகத்தை மார்க்வெஸ் கொடுத்தார். ஆசையாகப் பிரித்துப் பார்த்த காஸ்ட்ரோ திகைத்துப் போனார். காரணம் மார்க்வெஸ் கொடுத்த புத்தகம் டிராகுலா நாவல்.

சிறுவயதில் தன் வீட்டிற்கு வரும் எலக்ட்ரிசன் ஒருவரை தன்னால் மறக்கவே முடியாது. அவர் எப்போதும் வந்தாலும் அவரைப் பின்தொடர்ந்து ஒரு மஞ்சள் வண்ணத்துப்பூச்சி உடன் வரும். அந்த நினைவே பின்னாளில் தனது நாவலில் மஞ்சள் வண்ணத்துப்பூச்சி பின்தொடர்வதாக இடம்பெற்றது என்கிறார் மார்க்வெஸ்.

மாயமும் யதார்த்தமும் வேறு வேறானதில்லை. மாயம் யதார்த்தத்தின் ஒரு பகுதியே. யதார்த்தம் என்பதைத் தட்டையாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் யதார்த்தம் நாம் அறிந்து வைத்திருப்பதை விடவும் பன்முகத்தன்மை கொண்டது என்கிறார் மார்க்வெஸ்.

தனது எழுத்து எப்படி உருவாகிறது என்கிற கேள்விக்கு அவரது பதில் இதுவே

“For other writers, I think, a book is born out of an idea, a concept. I always start with an image. “

தன்னுடைய சிறுவயதில் பனிக்கட்டியைக் காண்பிப்பதற்காகத் தாத்தா தன்னைப் பழக் கம்பெனியின் காப்பறைக்கு அழைத்துச் சென்றார். பனிக்கட்டியில் கைவைத்த நிமிஷம் தான் தனிமையின் நூற்றாண்டுகள் நாவல் துவங்குவதற்கான புள்ளி. அந்தப் படிமத்திலிருந்தே பின்பு நாவலை எழுத ஆரம்பித்தேன் என்கிறார் மார்க்வெஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு The Last Interview Gabriel Garcia Marquez என்ற அவரது இன்னொரு நேர்காணல்களின் தொகுப்பு வெளியாகியுள்ளது. இவரது அவரது வாழ்வின் இரண்டாம் பகுதியை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

••

0Shares
0