நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.
எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம்.
பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர்.
இமயத்தின் அழகை கண்டு நம் அகம் விழித்துக் கொள்ளத் துவங்குகிறது. பனிமலையின் மீது பறக்கும் பறவை போல காற்றில் மிதக்க துவங்குகிறோம்.
ஒவ்வொரு நிலையாக மலையேற்றம் எப்படி அமைகிறது என்பதை விரிவாகக் காட்டுகிறது திரைப்படம்.
1966 மே மாதம் Adventure Consultants , Mountain Madness என்ற இரண்டு நிறுவனங்கள் எவரெஸ்ட் பயணத்தை ஒருங்கிணைப்புச் செய்கின்றன. இதற்கு வழிகாட்டுபவராக இருக்கிறார் ராப். எட்டுப் பயணிகள் மலையேற்றதிற்காக வந்து சேர்கிறார்கள்.
ராப்பின் மனைவி ஜேன் கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தை பிறப்பதற்குள் தான் வீடு வந்து சேர்ந்துவிடுவேன் என அவளிடம் உறுதிமொழி தந்திருக்கிறார் ராப்.
பேஸ் கேம்பிற்கு அவர்கள் வந்து சேர்ந்த போது ஜேன் தன் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்ற தகவலைத் தெரிவிக்கிறாள், அதற்கு சாரா எனப் பெயர் வைக்கலாம் என்கிறார் ராப்.
மே 7 ம் தேதி அவர்கள் கேம்ப் II நோக்கி மலையேற ஆரம்பிக்கிறார்கள்.
உடற்தகுதியும் மனவலிமையும் ஷெர்பாக்களின் வழிகாட்டுதலுமே பயணத்தின் ஆதாரங்கள். பேஸ் கேம்பில் அவர்கள் எதற்காக எவரெஸ்டிற்கு ஏற விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுப்பபடுகிறது. யாரும் நேரடியாகப் பதில் தருவதில்லை, ஆனால் ஒருவர் மட்டும் தன்னால் உலகின் மிகப்பெரிய சிகரத்தைத் தொட முடியும் என நிரூபிக்கவே பயணம் மேற்கொள்வதாகச் சொல்கிறார்.
இந்தப் பயணத்தில் வரும் ஜப்பானியப் பெண் ஆறு சிகரங்களைத் தொட்டவர், ஏழாவதாக எவரெஸ்டை எப்படியாவது தான் தொட்டுவிடுவேன் என்கிறார்,
அவர்கள் ஒன்று கூடி பேஸ் கேம்பில் இரவைக் கழிக்கிறார்கள், எவரெஸ்டை;j தொட்டு திரும்பிய முந்தைய சாதனையாளர்களை நினைத்துக் கொள்கிறார்கள்.
எவரெஸ்டைத் தொடுவது என்பது அவர்களின் ஒற்றைக் கனவு. அதை நனவாக்க பனிப்பாதையில் மலையேறத் துவங்குகிறார்கள். எவரெஸ்ட்டை தொடுவது எவ்வளவு கடினமாகச் சவால் என்பதை நாம் முழுவதுமாக உணரமுடிகிறது என்பதே படத்தின் தனிச்சிறப்பு.
பயணக்குழுவினர் நள்ளிரவில் எழுந்து நடக்கிறார்கள், விடிகாலையில் பனியில் அவர்கள் வரிசையாக நடந்து செல்லும் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது, மிக அற்புதமான காட்சியது. எப்படி இதை எல்லாம் படமாக்கினார்கள் என வியந்து பாராட்ட வேண்டியிருக்கிறது.
இயற்கை மனிதர்களை எளிதல் அனுமதிப்பதில்லை, பனிப் பாறைகள் சரிந்து விழுகின்றன, தாங்க முடியாத குளிர்காற்று. நடுக்கம், ஆனால் மனஉறுதியோடு அவர்கள் மலையேறுகிறார்கள்.
ஒரு இடத்தில் மலையைக் கடக்கப் போடப்பட்ட ஏணி நழுவுகிறது, அதில் சிக்கி உயிருக்குப் போராடுகிறான் ஒருவன்.அவனைக் குழுவினர் மீட்கிறார்கள், அடிவாரத்திலிருந்தபடியே அவர்களுக்கு வழிகாட்டும் குழு மருத்துவ உதவியும், சீதோஷ்ண நிலை பற்றிய அறிவிப்பையும் வழங்கியபடி இருக்கிறது.
எங்கோ தொலைவில் வசிக்கும் குடும்பம் கண்ணுக்கு தெரியாத கயிறாக மலையேறுபவர்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. வீடு திரும்புதல் தான் இந்தப் பயணத்தின் முடிவு, அங்கே நம்பிக்கையோடு மனைவியும் பிள்ளைகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த எண்ணம் தான் அவர்களை இயக்கும் உந்துசக்தி.
அவர்கள் ஒவ்வொரு நிலையாகப் போராடி பயணித்து முடிவில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் காட்சியில் எனக்கு மெய் சிலிர்த்துப் போனது.
எவரெஸ்டைத் தொட்ட சந்தோஷத்தில் கண்ணீர் விடுகிறார்கள், கூச்சலிடுகிறார்கள், கட்டி அணைத்துக் கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். ஜப்பானிய பெண் உணர்ச்சிவசப்பட்டு நன்றி நன்றி நன்றி என ஜப்பானிய மொழியில் சொல்கிறாள்,
யாருக்கு அவள் நன்றி தெரிவிக்கிறாள், தனக்கு, தனது பயணத்தைச் சாத்தியப்படுத்தியவர்களுக்கு. இமயமலைக்கு, இந்த உலகிற்கு, கடவுளின் கருணைக்கு என அந்த நன்றி பெரிய வார்த்தையாக விரிந்து கொண்டே போகிறது. முடிவில் அச்சொல் ஒட்டுமொத்த மனிதர்களின் குரலாக உருமாறிவிடுகிறது. அவள் சிறிய கொடி ஒன்றை எடுத்து பனியில் நட்டு வைக்கிறாள். அக்காட்சியில் அவளது வயது கரைந்து சிறுமியாகிவிட்டது போலவே தோன்றியது.
பயணம் எவரெஸ்டை தொடுவதுடன் நிறைவு பெறவில்லை.மலையை விட்டு கிழே இறங்கும் போது பருவநிலை மாறிவிடுகிறது, கடுமையான பனிக்காற்று. பாதை தெரியவில்லை, ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து போய்விடுகிறது, பனி அவர்களை வேட்டையாடத் துவங்குகிறது உண்மையில் அது ஒரு யுத்தம். பிரம்மாண்டமான போர். பனி தான் அதன் ஆயுதம்.
ஒவ்வொருவராக பனியில் வீழ்ந்து போகிறார்கள், யுத்தகளத்தில் மாவீரர்கள் வீழ்ந்து கிடப்பது போலவே அக்காட்சி தோன்றுகிறது. இயற்கை அவர்களை வெற்றி கொள்கிறது. எளிதாக வீடு திரும்ப முடியாது என்பதை உணர்த்துகிறது.
வீழ்ந்தவர்களில் சிலர் உடனே இறந்துவிடுகிறார்கள், சிலர் உயிருக்குப் போராடுகிறார்கள், மனித உயிர்போராட்டம் எளிதில் தோற்பதில்லை, பேஸ் கேம்பில் இருந்தபடி அவர்களை மீட்கும் முயற்சி தொடர்கிறது, ஆனால் ஒவ்வொருவராகப் பனியில் சிக்கிக் கொண்டு இறந்து போக ஆரம்பிக்கிறார்கள்.
ராப் பனியில் சிக்கிக் கொண்டு உயிர்பிழைக்கப் போராடும் போது அவரது வயர்லெஸ் வழியாக ஒரு தகவல் பேஸ் கேம்பிற்குக் கிடைக்கிறது அவரை எப்படி மீட்கிறார்கள் என்பதே படத்தின் இறுதி நிகழ்வு.
இரண்டு மணிநேரம் நாமும் இந்த உலகை மறந்து எவரெஸ்ட் மலையில் சஞ்சரிக்கிறோம், பனி நம் நரம்பிற்குள் ஊடுருவுகிறது. கைகள் உறைந்து போகின்றன, பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சினிமா என்பதை மறந்து மலையேற்ற குழுவில் நாமும் ஒருவராகிவிடுகிறோம்.
இப்படத்தை 3D யில் காண்பது சிறப்பான அனுபவத்தைத் தருகிறது
அவசியம் குழந்தைகளுடன் பார்க்க வேண்டி படம். தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்
•••