புதிய சிறுகதை. டிசம்பர் 30
அம்மா சமையலறையின் விளக்கை போட்டிருந்தார்.

அது ஹாலில் படுத்திருந்த வள்ளியின் கண்களைக் கூசியது. கலைந்த உறக்கத்தினுடாக அவள் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டாள். மணி நாலாக இருக்ககூடும். அலாரம் வைக்காமலே அம்மா தினமும் நான்குமணிக்கு எழுந்து கொள்கிறாள். சமையலறையினுள் கிரைண்டரை ஒட்டிய சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனது பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பாள். உதடு அசையாமல் கண்கள் வரிகளைக் கடந்து செல்லும். ஊசியால் எம்பிராய்டரி வேலை செய்வது போலப் பாடங்களை மனதில் தைப்பதாகவே தோன்றும்.
பக்கத்து வீட்டிற்குப் பால் கொண்டுவருகிறவரின் சைக்கிள் சப்தம் கேட்கும் ஆறு மணி வரைக்கும் படிப்பாள். பிறகு டீக்குத் தண்ணீர் வைத்து கொதிக்க விடுவாள். பால் இல்லாத டீயை தனியே குடிப்பாள். ஆறரை மணிக்கு தான் வள்ளியை எழுப்புவாள். ஞாயிற்றுகிழமையாக இருந்தாலும் இந்த வழக்கம் மாறாது.
நாற்பத்தியெட்டாவது வயதில் அம்மா ஐந்தாவது எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறாள். அதுவும் தொலைதூர கல்வியின் மூலம். தமிழ் இலக்கியம். ஆங்கில இலக்கியம். வரலாறு பொருளாதாரம் என நான்கு எம்.ஏக்களை முடித்துவிட்டுத் தற்போது அரசியல் விஞ்ஞானத்தில் ஐந்தாவது எம்.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். இது மட்டுமின்றி யோகா, கம்ப்யூட்டர் சயின்ஸ். சைவ சித்தாந்தம் என மூன்று சர்டிபிகேட் படிப்புகளையும் படித்து முடித்திருக்கிறாள்.
வீட்டுவாசலில் ஜெயலட்சுமி எம்.ஏ.எம்.ஏ.எம்.ஏ.எம்.ஏ சிஎஸ்சி. சிஎஸ்பி வொய்சிபி எனப் பெயர்பலகை மாட்டி வைக்க வேண்டும் என வள்ளி ஒருமுறை சொன்ன போது அம்மா கோவித்துக் கொண்டாள்
“நான் படிச்சிருக்கேனு ஊர் பூரா தண்டோரா போடணுமா.. அதெல்லாம் செய்யக்கூடாது“
“உன் அளவுக்கு யாரும்மா படிச்சிருக்கா“ என வள்ளி திரும்பக் கேட்ட போது அம்மா சொன்னாள்
“விருப்பமிருந்து சந்தர்ப்பமும் கிடைச்சா யார் வேணும்னாலும் படிக்கலாம். என்னை யாரும் படிக்க வைக்கலே. நானே படிக்க வச்சிகிட்டேன்“.
அது தான் உண்மை. தனக்குத் தானே வழங்கிக் கொண்ட மகிழ்ச்சி தான் அவளது படிப்பு.

வருகிற திங்கள்கிழமை அவளுக்கு எம்.ஏ பரிட்சை துவங்குகிறது. இந்த முறை சென்டரை மாற்றியிருந்தார்கள். கோரிப்பாளையத்திலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் பரிட்சை நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்கள் வைத்திருப்பது போலவே அம்மாவும் ஒரு துணிப்பை வைத்திருக்கிறாள். அதற்குள் தபாலில் வரும் பாடங்கள், நோட்டு. பேனா, மாதிரி கேள்விதாட்கள் வைத்திருப்பாள். அம்மாவின் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும்
பரிட்சை எழுதப் போகும் நாளில் அம்மா காலையில் சாப்பிட மாட்டாள். வள்ளி துணைக்குக் கூட வருவதை விரும்ப மாட்டாள். பரிட்சை நடக்கும் சென்டருக்கு தனியே போய் எழுதிவிட்டு வருவாள். பரிட்சை எப்படியிருந்தது என்பதைப் பற்றி எதையும் சொல்ல மாட்டாள். ரிசல்ட் வரும் போது மட்டும் வள்ளியிடம் தனது மதிப்பெண்களைச் சொல்வாள். அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். எல்லாப் பாடங்களிலும் 90 மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கியிருப்பாள்.
சில சமயம் வள்ளி தனது அம்மாவிடம் “இன்னும் எவ்வளவு படிப்பே“ என்று கேலியாகக் கேட்டிருக்கிறாள்
“கணக்கு வச்சிக்கிட கூடாது. சாகுற வரைக்கும் படிக்கணும்“ என்பாள் அம்மா. அப்படிச் சொல்லும் போது ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட வீட்டை பற்றிக் கனவு காணும் பெண்ணைப் போல அவளது முகமிருக்கும்.
திருமணத்திற்கு முன்பு அம்மா விருதுநகர் மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்திருந்தாள். மேலே படிப்பதற்குள் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். வள்ளியின் அப்பா ஆறுமுகம் பெரியார் அணைக்கட்டுப் பராமரிப்புப் பிரிவில் ஜீப் ஒட்டினார் என்பதால் அவர்கள் குமுளிக்கு வந்து விட்டார்கள்.
தனது ஆறு ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையின் நினைவுகளாக அம்மா மனதில் மிஞ்சியிருப்பது மூன்று வடுக்களே. அவற்றை இத்தனை வருஷங்கள் கடந்தும் அம்மாவால் மறக்க முடியவில்லை. வள்ளியிடம் அதனைப் பலமுறை சொல்லியிருக்கிறாள்.
••
“எங்களுக்குக் கல்யாணமாகி பத்து நாள் தான் இருக்கும்.. உங்கப்பா கூட வேலை செய்றவரு.. பேரு சேகரன்.. அவரு வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் ஜீப்பிலே போனோம். ஜீப்பில முன்னாடி உட்கார்ந்துட்டு போக ரொம்பக் கூச்சமா இருந்துச்சி.. மலைப்பாதை வழியா போனா.. ஒரு சின்னக் கிராமம்.. அங்கே பலாமரம் உள்ள கேரளா டைப் வீடு அது முன்னாடி ஜீப் போயி நின்னுச்சி.. சேகரன் பொண்டாட்டி மலையாளத்துக்காரி.. பேரு சொப்னா.. ஆளு நல்ல சிவப்பு. கருகருனு அடர்த்தியான கூந்தல். அவளுக்கு வலது காதுல மச்சம் இருந்துச்சி .அவங்க வீட்டில மீனும். இறைச்சியும் சிவப்பரிசி சோறும் சமைச்சாங்க. நானும் சமையல்ல கூட ஒத்தசை செய்துட்டு இருந்தேன்.
சமையல் முடியுற வரைக்கும் வெளியே போயிட்டு வர்றோம்னு உங்கப்பாவும் சேகரனும் ஜீப்ல வெளியே கிளம்பி போனாங்க.
மதியம் மூணுமணியாகியும் அவங்க திரும்பி வரலை. வாசல்ல உட்கார்ந்து ரோட்டையே பாத்துகிட்டு இருந்தேன். வயிற்றுல பசியாப்பசி.. பழக்கம் இல்லாத வீடு. தனியா சாப்பிட பயம். தயக்கம்.. உங்கப்பா மேல கோவமான கோவம் வந்துச்சி. அப்பே சேகரன் பொண்டாட்டி சொன்னாள்
“நீங்க சாப்பிடுங்க. அவங்க வந்துருவாங்க “
“எனக்கு பசிக்கலை. அவுக வந்துரட்டும்“
“எங்க போய்த் தொலைஞ்சாரோ“ எனத் தனது கணவனைத் திட்டிக் கொண்டிருந்தாள் சேகரனின் மனைவி
நாலு மணிக்கு ஜீப்பை ஒட்டிக் கொண்டு வந்தார் சேகரன். பக்கத்துச் சீட்டில் ஆறுமுகம் போதையில் சுருண்டு படுத்திருந்தார்
“போதை ஓவராகிருச்சி… ஜீப் புல்லா வாந்தி. வீட்டுக்குள்ளே தூக்கி கொண்டு வந்து படுக்க வைப்போம். ஒரு கை பிடிங்க“
ஜெயலட்சுமி தனது கணவனின் வாந்தி வழிந்த வாயை தனது சேலையால் துடைத்துவிட்டாள். பேண்ட். சட்டையெல்லாம் வாந்திபடிந்திருந்தது. ஆளுக்கு ஒருகையாக வீட்டிற்குள் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள்.
சேகரன் தனது ஆடைகளை மாற்றிவிட்டுக் குளிக்கப் போனார். ஜெயலட்சுமி சாப்பிடவில்லை. சேகரனும் அவரது மனைவி பிள்ளைகளும் அடுப்படியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மீன் முள்ளிற்காக ஒரு பூனை காத்துக் கொண்டிருந்தது.
இரும்பு வாளி ஒன்றில் குழாயில் தண்ணீர் பிடித்து ஜெயலட்சுமி ஜீப்பை கழுவி விட்டாள். நாற்றம் சகிக்கமுடியவில்லை. அழுகையாக வந்தது. எதற்காக இப்படி யாரோ எடுத்த வாந்தியை கழுவிவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. பத்து வாளி தண்ணீரை கொண்டு ஜீப்பை நன்றாகக் கழுவினாள். மரத்திலிருந்து ஒரு குருவி அவளைப் பார்த்து சப்தமிட்டது. அது அவளது வேதனையை மேலும் அதிகப்படுத்தியது.
ஆறுமுகம் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை மூடிவிட்டுத் தரையில் சுருண்டு படுத்து ஜெயலட்சுமி சப்தம் வெளியே கேட்காமல் அழுதாள். இரவு ஏழு மணிக்கு போதை கலைந்து எழுந்த ஆறுமுகம் கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு “பசிக்குது.. சோறு கொண்டா“ என்று சப்தமாகச் சொன்னான்.
ஜெயலட்சுமி எழுந்து போய் ஒரு தட்டில் சோறும் மீனும் கொண்டு வந்து வைத்தாள். அவசர அவசரமாக ஆறுமுகம் சாப்பிட்டான்.
“நீ சாப்பிட்டாயா“ என ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. பிறகு தட்டிலே கைகழுவிவிட்டு “வீட்டுக்கு போவமா“ என்று கேட்டான்
“நான் வரலை“.என்று சொன்னாள் ஜெயலட்சுமி
“அப்போ இரு.. நான் கிளம்புறேன்“ என ஆறுமுகம் கிளம்பிய போது மனதில் பொங்கும் அழுகையை அடக்கிக் கொண்டு குளியலறைக்குள் போய் முகத்தில் தண்ணீரை வாறி வாறி அடித்தாள். தண்ணீரால் அவளை அமைதிப்படுத்த முடியவில்லை. பூச்சிகள் சப்தமிடும் இருண்ட பாதையில் ஜீப்பில் வீடு திரும்பிய அந்த நாளை அவளால் மறக்கவே முடியவில்லை. ஜீப்பைக் காணும் போதெல்லாம் வாந்தியின் நாற்றம் மனதில் வந்து போனது.
இரண்டாவது நிகழ்வு அவள் கர்ப்பமாக இருந்த போது குமுளியில் டாக்டரைப் பார்க்க போயிருந்தார்கள். பெண் மருத்துவரிடம் காட்டிவிட்டு சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குப் போயிருந்தார்கள்.
மரபெஞ்சில் அமர்ந்து அவர்கள் தேக்கிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சுருள் முடி கொண்ட ஆரஞ்சுவண்ண சேலை அணிந்த ஒரு பெண் ஆறுமுகத்தின் அருகில் வந்து “என்ன ஆளையே காணோம். இது யாரு உன் பொண்டாட்டியா“. எனக்கேட்டாள்.
ஆமாம் என ஆறுமுகம் தலையாட்டினாள்
“பல்லி மாதிரி இருக்கா“ என அந்தப் பெண் கேலி செய்தாள்
ஜெயலட்சுமி அவளை முறைத்துப் பார்த்தாள்.
“ நீ முதலையாச்சே.. எப்படி உனக்கு ஈடு கொடுக்கிறாளா“ என மறுபடியும் கேலியாகக் கேட்டாள். ஜெயலட்சுமியால் சோற்றை அள்ளி சாப்பிட முடியவில்லை
“உன்னை ஆளை பாக்கவே முடியலை. கல்யாணம் பண்ணிட்டு போயிட்டயா“ என ஆறுமுகம் அவளிடம் கேட்டான்
“என்னை எவன் கட்டிகிடுவான். நான் கொச்சிக்குப் போயிட்டேன். எப்போவாது இங்க வர்றதுண்டு“ என்று கண்ணைச் சிமிட்டினாள். பிறகு ஆறுமுகத்தின் இலையில் இருந்த ஒரு மீன்துண்டை எடுத்து சாப்பிட்டாள். இலையில் இருந்த சோற்றில் கை அள்ளி அவனுக்கு ஊட்டிவிட்டாள். அதை ஆசையாக ஆறுமுகம் சாப்பிட்டான்.
“உனக்கும் ஊட்டிவிடவா“ என அவள் ஒரு கை சோற்றை ஜெயலட்சுமியை நோக்கி கொண்டு வந்த போது ஜெயலட்சுமி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை மூடிவிட்டுக் கை கழுவ அவசரமாக எழுந்து போனாள்
“உன் பொண்டாட்டி கோவிச்சிகிடுறா“ என அவள் சப்தமாகச் சொல்லி சிரித்தாள். ஆறுமுகமும் கூடச் சேர்ந்து சிரித்தான். அந்தப் பெண் யார் என அவள் கேட்கவேயில்லை. ஆறுமுகமும் அதைப்பற்றிச் சொல்லவேயில்லை.
மூன்றாம் நிகழ்ச்சி அவர்கள் பழனிக்கு சாமி கும்பிடச் சென்றபோது நடந்தது. அவர்கள் அறை எடுத்துக் கொண்ட லாட்ஜின் வாசலில் ஒரு நியூஸ் பேப்பர் கடை இருந்தது. அங்கே விகடன் இதழ் ஒன்றை படிப்பதற்காக ஜெயலட்சுமி வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். கட்டிலில் அமர்ந்து அவள் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஆறுமுகம் கேட்டான்
“இது ஏது. “
“கடைல வாங்கினேன்“
“அதான் எதுக்கு வாங்கினே“
“படிக்கிறதுக்கு.. ரூம்ல சும்மா இருக்கிறது போரடிக்குது“
“கடைல கொண்டு போய்க் குடுத்துட்டுக் காசைத் திருப்பி வாங்கிட்டு வா“
“ஏன் நான் புக் படிக்கக் கூடாதா“
“சொன்னதைக் கேளு.. இல்லை செவுளை பேத்துருவேன். “
“கடைல வாங்க மாட்டாங்க “என்றாள்
“நானும் வர்றேன்… எந்த மயிரு வாங்கமாட்டானு பார்ப்போம்“
அவள் எவ்வளவோ தடுத்தும் பேப்பர்கடைக்காரனிடம் ஆறுமுகம் சண்டை போட்டான். மோசமான வசைகளைப் பொழிந்தான். கடைக்காரனிடம் பணத்தைத் திருப்ப பெற்றுக் கொண்டுவந்தான். பேருந்தில் ஊர் திரும்பிய போது குமுளி பேருந்து நிலையத்தில் வைத்து அந்தப் பணத்தில் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி அவளிடம் கொடுத்து “உன் அதிர்ஷ்டம் லட்சம் ரூவா விழுகுதா பார்ப்போம்“ என்றான். அந்த லாட்டரி விழுந்துவிடக்கூடாது என்று ஜெயலட்சுமி மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
இந்த மூன்று வடுக்களையும் அவளால் மறக்கமுடியவேயில்லை. அதனால் தான் ஆறுமுகம் சாலைவிபத்தில் இறந்து போய் மருத்துவமனையில் உடலை பெறுவதற்காகப் போன போது அவளுக்கு அழுகை வரவேயில்லை. அப்படியொரு திருமணமே நடக்கவில்லை என்பது போலிருந்தது. ஆறுமுகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கச் செய்ய வேண்டும் என மருதங்குளம் கொண்டு சென்றார்கள். அதன்பிறகு ஜெயலட்சுமிக்கு அணைக்கட்டு நிர்வாக அலுவலகத்திலே வேலை பெற்றுதருவதற்கு முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
கைக்குழந்தையோடு பெற்றோர் வீடு திரும்பிய ஜெயலட்சுமி தனது அய்யாவிடம் “நான் படிக்கப் போகட்டுமா“ என்று கேட்டாள்
“இனிமே படிச்சி என்ன செய்யப்போறே.. ஏதாவது வேலைக்குப் போனா.. இந்தப் பிள்ளையை வளர்க்கிறதுக்கு உதவும்“ என்றார் அவளது அய்யா.
ஜெயலட்சுமி அதை மறுக்கவில்லை. மறுநாளே பக்கத்திலிருந்த எக்ஸ்ரே சென்டரில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். மூன்று மாதம். ஆறு மாதம் என வேலை மாறிக் கொண்டேயிருந்தாள். எதற்காக இப்படி வேலை மாறிக் கொண்டேயிருக்கிறாள் என அய்யா கோவித்துக் கொண்டபோது “அங்க என்ன நடக்குனு உங்களுக்குத் தெரியுமா“ எனக் கோபமாகக் கேட்டாள். அய்யாவிடம் அதற்குப் பதில் இல்லை.
வள்ளியைப் பள்ளியில் சேர்க்கும் வயது வந்தபோது ஜெயலட்சுமி தான் மதுரையில் வீடு பார்த்து தனியே குடியிருக்கப் போவதாகச் சொன்னாள்.
“அங்கே யாரு இருக்கா. எதுக்குடி அங்கே போகணும்கிறே“ என ஜெயலட்சுமியின் அம்மா திட்டினாள்.
“உங்க யாரு உதவியும் எனக்கு வேணாம். நானா என் பிள்ளையை வளர்த்துகிடுறேன். “
“ஏன் இங்கே என்ன கொறச்சல். நாங்க உன் பிள்ளையைப் படிக்க வைக்கமாட்டமா“
“நீங்க என்னைய படிக்கவச்ச லட்சணத்தைத் தான் பாத்தேன்லே. “.என்று கோபமாகச் சொல்லியபடி வள்ளியைக் கூட்டிக்குக் கொண்டு மதுரைக்குப் போய் விட்டாள்
அங்கே அவர்களுக்கு உறவினர் என்று யாருமில்லை. பெருமாள் கோவில் தெருவில் சிறியதொரு வீட்டின் மாடி வாடகைக்குக் கிடைத்தது. சுகந்தா ரெடிமேட்ஸ் என்ற ஐவுளிக்கடையில் வேலைக்குப் போகத் துவங்கினாள். குறைவான சம்பளம். நிறையத் தேவைகள்.
வள்ளியை வளர்ப்பது எளிதாகயில்லை. அதுவும் வள்ளிக்கு உடல்நலமில்லாத நாட்களில் உதவிக்கு யாருமின்றிப் போராட வேண்டியிருந்தது. பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பொதுமருத்துவமனை வரிசையில் கால்கடுக்க நின்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறாள்.
பெருமாள் கோவில்வாசலில் பூகட்டி விற்கும் பாக்கியத்தின் உதவி இல்லாமல் போயிருந்தால் வள்ளியை வளர்த்திருக்க முடியாது. எத்தனையோ நாட்கள் பாக்கியம் வீட்டில் மகளை விட்டுவிட்டுத் துணிக்கடை வேலைக்குப் போயிருக்கிறாள். தனது மகளோடு வள்ளிக்கும் சாப்பாடு போட்டுக் கவனித்துக் கொண்டாள் பாக்கியம். ஜெயலட்சுமிக்கு உடல் நலமில்லாமல் போன நாட்களில் அவளே வீட்டிற்கு வைத்து சமைத்துப் போட்டு துணிகளைத் துவைத்துப் போட்டு உதவி செய்திருக்கிறாள்.
ஜவுளிக்கடை முதலாளி வெங்கட்ராமனுக்கு ஜெயலட்சுமியின் கஷ்டங்கள் புரிந்திருந்தன. அவர் ஒரு முறை கூட அவளைக் கோவித்துக் கொண்டது கிடையாது. கேட்கும் போது முன்பணம் தரவும் மறுக்கவில்லை. ஐந்து பேர் வேலை பார்த்த அந்த ஐவுளிக்கடை கால ஒட்டத்தில் முப்பது பேர் வேலை செய்யும் இரண்டு மாடி கடையாக வளர்ந்து நின்றது.
இன்றைக்கும் ஜெயலட்சுமி அதே கடையில் தான் வேலை பார்க்கிறாள். அங்கே எவருக்கும் அவள் இத்தனை எம்.ஏ படித்தவள் என்று தெரியாது. அவளாகச் சொல்லிக் கொள்ளவும் மாட்டாள். ஐவுளிக்கடையில் வேலை செய்யும் இருபது பெண்களில் ஒருத்தியாகவே தன்னைக் காட்டிக் கொண்டாள்.

ஒரேயொருமுறை அவள் அழகர்கோவில் சென்டருக்குப் பரிட்சை எழுதப் போன போது அவளது கடை வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்த மகுடபதி அடையாளம் கண்டு கொண்டவராக “யார் பரிட்சை எழுதப் போறது உங்க பொண்ணா“ என்று கேட்டார்
“இல்லை நான் தான்“ வெட்கத்துடன் சொன்னாள் ஜெயலட்சுமி
“என்ன படிக்கிறீங்க“
“எம்.ஏ. இங்கிலீஷ். “
“என் மகளும் அதான் படிக்கிறா.. இதை முடிச்சிட்டுப் பிஎட் படிக்க வைக்கணும்.. ஏதாவது பிரைவேட் ஸ்கூல்ல வேலைக்குப் போகலாம் “
“இது நான் படிக்கிற மூணாவது எம்.ஏ“ என்றாள் ஜெயலட்சுமி
“அப்புறம் ஏன் ஜவுளிகடைல வேலை பாக்குறீங்க“ என வியப்போடு கேட்டார் மகுடபதி
“உங்க சட்டைல பேனா வச்சிருக்கிறது. உங்களுக்கு எழுத தெரியும்கிறதுக்குத் தானே தவிர உலகத்துக்குக் காட்டிகிடுறதுக்கு இல்லேயே. நான் படிக்கிறதும் அப்படித் தான்“
“நல்லா பேசுறீங்க. என் மக கிட்டயும் நாலு வார்த்தை பேசுங்க. தைரியம் வரட்டும்“ என்றார் மகுடபதி
“நான் பரிட்சை எழுதறதை பற்றிக் கடைல சொல்லிர வேண்டாம்“ என்றாள் ஜெயலட்சுமி
அவர் சரியெனத் தலையாட்டிக் கொண்டார். மகுடபதியின் மகள் கைக்குழந்தையோடு பரிட்சை எழுத வந்திருந்தாள். அந்தக் குழந்தையைத் தந்தையிடம் கொடுத்துவிட்டுப் பரிட்சை ஹாலை நோக்கி நடந்த போது தன்னையே பார்ப்பது போல உணர்ந்தாள் ஜெயலட்சுமி. அந்த நிமிஷம் தன்னை இப்படித் தனது தந்தை படிக்க வைக்கவில்லையே என ஆதங்கமாக இருந்தது.
••
டீக்கடையில் இருந்து உளுந்தவடை வாங்கி வந்த செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியிருந்த விளம்பரம் தான் ஜெயலட்சுமி மனதில் எம்.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது. அது தொலைதூரக் கல்வியின் மூலம் எவரும் உயர்கல்வி படிக்கலாம் என்பதற்காக மதுரை பல்கலைகழகம் வெளியிட்டிருந்த விளம்பரம்.
அந்த விளம்பரத்தில் படிப்பதற்கான கட்டணம் எவ்வளவு. எப்படி வகுப்பு நடைபெறும் என்பது போன்ற விபரங்கள் இடம்பெறவில்லை. ஆகவே மறுநாள் முதலாளியிடம் மருத்துவமனைக்குப் போகவேண்டும் எனப் பொய்சொல்லி அரைநாள் லீவு கேட்டு வாங்கிக் கொண்டு டவுன் பஸ் பிடித்து மதுரை பல்கலைகழகத்திற்குப் போய் இறங்கினாள்.
நூற்றுக்கணக்கில் ஆணும்பெண்ணும் கையில் புத்தகங்களுடன் நடந்து செல்வதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. தொலைதூர கல்விக்கான அலுவலகத்தைத் தேடி விசாரித்து விபரங்கள் அறிந்து கொண்டு ஜவுளிக்கடைக்குத் திரும்பிய போது எப்படியாவது எம்.ஏ படிக்கச் சேர்ந்துவிட வேண்டும் என மனதில் துடிப்பு உருவானது
அன்றிரவு வள்ளியிடம் சொன்னாள்
“பாப்பா நானும் படிக்கப்போறேன்“
“காலேஜ்லயா“ எனக்கேட்டாள் வள்ளி
“இல்லை. கரெஸ்பாண்டென்ஸ்ல. “.
“படிச்சி நீ டீச்சரா ஆகப்போறயாம்மா“ என வள்ளி கேட்டாள்
“இல்லை பாப்பா.. எனக்குப் படிக்கணும்னு ஆசையா இருக்கு“ என்றாள் ஜெயலட்சுமி
அதைச் சொல்லும் போது அவளது குரல் தழுதழுத்துவிட்டது
“அப்போ நாம ரெண்டு பேரும் ஸ்டுடண்ஸா“ எனக்கேட்டாள் வள்ளி
அவள் அப்படிக் கேட்டது ஜெயலட்சுமிக்கு பிடித்திருந்த்து.
தபால் ஆபீஸில் மாதந்தோறும் கட்டிவந்திருந்த சேமிப்புப் பணத்தை எடுத்து எம்.ஏ படிக்கப் பீஸ் கட்டினாள் ஜெயலட்சுமி. அவளது புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை வழங்கினார்கள்.
அதை மகளிடம் காட்டி “இதை பாக்கும் போது ரொம்பச் சந்தோஷமா இருக்கு“ என்றாள்.
அந்த அடையாள அட்டையில் ஒட்டப்பட்ட புகைப்படத்தை ஜெயலட்சுமி எந்த ஸ்டுடியோவில் எடுத்தாள் என்று தெரியவில்லை.ஆனால் புகைப்படம் எடுக்கும் போது அவளது மனதில் இருந்த மகிழ்ச்சி கண்களில் வெளிப்பட்டிருந்ததை வள்ளியால் உணர முடிந்தது.
தபாலில் வரும் பாடங்களை ஜெயலட்சுமி கவனமாகப் படித்தாள். சில சமயம் நேரடி வகுப்பில் கலந்து கொண்டு பாடம் பயின்றாள். அப்படி முழுநாட்கள் வகுப்பு இருக்கும் போது வள்ளியை பாக்கியம் வீட்டில் விட்டுப் போய்விடுவாள்.
ஜெயலட்சுமி தானே படித்து முதல் எம்.ஏ பெற்ற போது சிறியதாக வெள்ளிவிளக்கு ஒன்றை வாங்கி வந்தாள். அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட பரிசு. அந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி எரியவிடும் போது அசைவுறும் சுடர் அவளது வெற்றியை சொல்வதைப் போல உணர்ந்தாள்.
ஒவ்வொரு எம்.ஏயிற்கும் ஒரு வெள்ளிவிளக்கு எனச் சாமிபடத்தின் முன்பாக அவளது படிப்பு சுடர் விட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. சில நாட்கள் அந்த விளக்குகளை எரிய விட்டு ஜெயலட்சுமி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். மனதிற்குள் ஏதோ சொல்லிக் கொள்கிறாள் என்று வள்ளிக்குத் தோன்றும்.
••
ஆறுமுகத்தின் பூர்வீக சொத்தாக இருந்த வீடு மற்றும் நிலத்தை அவரது சகோதரர்கள் பங்கு போட்டுக் கொள்வதாக முடிவு செய்தார்கள். அதில் ஆறுமுகத்தின் கடைசிதம்பி சிதம்பரம் பூர்வீக வீட்டை தனதாக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஆளுக்கு ஏழு லட்சம் தருவது என்று முடிவு செய்திருந்தான். இதைப்பற்றிக் கூடிப் பேசி முடிவு செய்வதற்காக ஜெயலட்சுமியை மருதங்குளம் வரச் சொல்லியிருந்தார்கள். அவள் அதில் விருப்பம் காட்டவில்லை. போகவுமில்லை
ஒருமுறை சிதம்பரம் அவர்கள் வீடு தேடி வந்திருந்தான். அப்போது ஜெயலட்சுமி வீட்டில் இல்லை. வள்ளி மட்டும் தான் இருந்தாள்
“வர்ற லட்சுமியை ஏன் உங்கம்மா வேணாங்கிறாங்க. ஒரு கையெழுத்தை போட்டுப் பணத்தை வாங்கி முடிச்சிவிட்ர வேண்டியது தானே“
“எங்களுக்கு அந்தப் பணம் வேணாம் சித்தப்பா“ என்றாள் வள்ளி
“நாளைக்கு உன் கல்யாணத்துக்கு உதவும்லே“..
“அதெல்லாம் எங்கம்மா பாத்துகிடும். இத்தனை வருசமா செத்தமா பிழைச்சமானு கூட நீங்க யாரும் வந்து பாக்கலே. இப்போ கையெழுத்து கேட்க மட்டும் வந்து நிக்குறீங்க“
“உங்களை வந்து போயி இருக்க வேணாம்னு நாங்களா தடுத்தோம். உங்கம்மா வீம்பு. பிடிச்சி நின்னா நாங்க என்ன செய்றது. “
“ எங்க பொழப்பை நாங்க பாத்துகிடுறோம். நீங்க கிளம்புங்க. “
“உங்கம்மா குணம் உனக்கும் அப்படி வாச்சிருக்கு. நான் குடுக்கும் போது பணத்தை வாங்கிகிடலைண்ணா.. கையை விரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்“
“. உங்க காசு எங்களுக்கு வேண்டாம். “
“கேட்க வேண்டிய முறைக்குக் கேட்டுட்டேன். நீங்க எக்கேடும் கெட்டு அலையுங்க“ என்றபடி சிதம்பரம் கோபமாக வெளியேறிப் போனார். அன்றிரவு அம்மாவிடம் நடந்த விஷயங்களை வள்ளி சொன்ன போது ஜெயலட்சுமி தன் மகளின் கையைபிடித்துக் கொண்டு சொன்னாள்
“நான் இருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பேன் “
“நமக்கு எதுக்கும்மா அந்தப் பணம்.. அது வந்து தான் நிறையப் போகுதாக்கும் “
“யார் தயவும் நமக்கு வேணாம் பாப்பா.. நீ படிக்கிறே. நானும் படிக்கிறேன். நாம வாழ முடியும் பாப்பா“
அதைக்கேட்ட போதும் வள்ளிக்குக் கண் கலங்கியது. தாயும் மகளும் தன்னை மீறி அழுதார்கள். அம்மாவை இவ்வளவு தைரியம் கொள்ளச் செய்திருப்பது அவளது படிப்பு தான் என்று வள்ளிக்கு உறுதியாகத் தெரிந்தது.
ஆறுமுகத்தின் பூர்வீக சொத்திற்கான பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு போய் அவரது பெரிய அண்ணன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துவிட்டார். அந்தக் கேஸ் நடப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் வள்ளியோ, ஜெயலட்சுமியோ அதில் ஆர்வம் காட்டவேயில்லை. ஒருமுறை பரிட்சை நாளில் ஜெயலட்சுமி கோர்ட்டில் வந்து சாட்சியம் தர வேண்டும் என்றார்கள். ஜெயலட்சுமி போகவில்லை. அந்தக் கேஸின் தீர்ப்பு என்ன ஆனது எனக் கேட்டுக் கொள்ளவுமில்லை
••
மோகன்பிரகாஷ் மருத்துவமனையில் அய்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்த நாளில் ஜெயலட்சுமியும் வள்ளியும் அவரைக் காணச் சென்றிருந்தார்கள். கையும்காலும் குச்சியாகி எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தது. ஒரு கையில் குளுகோஸ் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். உலர்ந்த கண்கள். உலர்ந்த உதடுகள். அய்யாவின் உடல்நிலையைக் கண்டு ஜெயலட்சுமி வருந்தினாள். அவரது கையைப் பிடித்துக் கொண்டு பக்கத்திலே அமர்ந்திருந்தாள்.
உலர்ந்த விழிகளோடு அய்யா அவளிடம் திக்கித்திணறுவது போலக் கேட்டார்
“என்மேல கோவம் இல்லையே. அய்யா உன்னைப் படிக்க வச்சிருக்கணும்.. முடியாம போயிருச்சி“.
“அதெல்லாமில்லையா“..
“உன்னை சரியான ஆளுக்குக் கட்டிக் குடுக்கலை. குடிகாரப்பய அவனும் அல்ப ஆயுள்ல போயிட்டான். உனக்குனு ஒரு வீடு கூடக் குடுக்க முடியலை. உன் அண்ணன் தம்பிக விட மாட்டேனுட்டாங்க. அவங்க பேச்சை மீறி நடக்க முடியலை “.
“அதனாலே என்னய்யா“
“எனக்கு மனசு கேட்கமாட்டேங்குது.. என்னை மன்னிச்சிரு தாயி“.
அய்யா அழுதார். அவரது கண்ணீர்துளி அவளது கையில் விழுந்தது. அவளாலும் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. கடந்தகாலத்தின் தவறுகளை ஒருதுளி கண்ணீரால் துடைத்துவிட முடிகிறது. அந்த அழுகையோடு ஜெயலட்சுமி சொன்னாள்
“நான் நாலு எம்.ஏ படிச்சி முடிச்சிட்டேன்யா“
அவரால் அதை நம்ப முடியவில்லை
“நீயாம்மா.. நிஜமாவா“ என நடுங்கும் குரலில் கேட்டார்.
“நானா படிச்சிகிட்டேன்யா“ என்று ஜெயலட்சுமி சொன்னாள்
அய்யாவால் பேச முடியவில்லை. அழுகையே பீறிட்டது. அந்த ஒருமுறை தான் ஜெயலட்சுமி தனது படிப்பை பற்றித் தானாகச் சொல்லியிருக்கிறாள். வேறு எங்கும் எவரிடமும் அவள் படிப்பை சொன்னதேயில்லை. யாரிடம் சொல்லி எதை நிரூபிக்க வேண்டும் என்றே நினைத்தாள்.
••
என்ஜினியரிங் கல்லூரியின் நான்காம் ஆண்டுத் துவங்கிய போது வள்ளி சொன்னாள்
“இந்த வருசத்தோட என் படிப்பு முடிச்சி போயிரும்மா. கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைக்குப் போயிடுவேன். என்னாலே நாலு வருசமே படிக்க முடியலை. நீ எப்படிம்மா. டிகிரி மேல டிகிரி வாங்கிட்டே இருக்கே“
“வேலைக்குப் போ.. யாரு வேணாங்கிறது.. அதுக்காக ஏன் படிப்பை நிறுத்துறே.. வேலை பாத்துகிட்ட மேல படிக்க வேண்டியது தானே“
“நிறைய படிச்சா மூளை குழம்பி போயிடும் பாத்துக்கோ“
“அதெல்லாம் பொய். படிக்க முடியாதவங்க இயலாமைல சொல்றது. நான் எவ்வளவு படிச்சிருக்கேனு நீ யார் கிட்டயாவது சொல்லியிருக்கியா பாப்பா“
“சொன்னா நம்ப மாட்டாங்க. இவ்வளவு படிச்சிட்டு ஏன் துணிகடைல வேலை பாக்குறாங்கன்னு கேட்பாங்க“
“படிப்புக்கும் வேலைக்கும் ஒரு சம்பந்தமில்லை. துணிகடை வேலை மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதை ஏன் விடணும்“
“படிச்சதை வச்சி சம்பாதிக்கணும்மா.. இல்லாட்டி அது வேஸ்ட்“
“அப்படி மட்டும் சொல்லாதே.. படிக்கிறது வேற பாப்பா,, அதை எப்படிச் சொல்றதுனு தெரியலை“ என்றாள் ஜெயலட்சுமி
“படிக்கிறதுக்கு ஒரு அளவு இருக்குமா“ என்று சொன்னாள்
“அதெல்லாம் ஒரு அளவுமில்லை. வட இந்தியாவுல ஒரு ஆள் இருபது டிகிரி வாங்கியிருக்கார்னு பேப்பர்ல படிச்சிருக்கேன். “
“இத்தனை டிகிரி வாங்குறதுக்குப் பதிலா ஏதாவது ஒண்ணுல ஆராய்ச்சி பண்ணி டாக்டரேட் வாங்க வேண்டியது தானம்மா“
“அதை கடைசியா வச்சிகிடணும்னு நினைச்சிருக்கேன்“
“அந்த ஆசை வேற இருக்கா“
ஜெயலட்சுமி தலையாட்டினாள்.
“நாளைக்கு எனக்குக் கல்யாணமாகி பிள்ளை பொறத்தா.. அது கூடவும் நீ போட்டிபோட்டு படிச்சிகிட்டு இருக்கப் போறயா“ எனக் கேட்டாள் வள்ளி
“அப்படி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்,…. இன்னொரு தடவை அதைச் சொல்லு பாப்பா“ என்றாள் அம்மா
இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது. தான் கோவித்துக் கொள்வதைக் கூட அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக மாற்றிவிடுகிறாள் என்று வள்ளிக்கு தோன்றியது
“உன் பேத்தி உன்னை விட நிறையப் படிப்பா, நல்லா படிப்பா பாரு“
“அதெல்லாம் முடியாது. படிப்பில என்னை ஜெயிக்க முடியாது பாப்பா.. “
“என் மக வந்து ஜெயிச்சிகாட்டுவா பாரு“
அப்படி வள்ளி சொல்லி கேட்க ஜெயலட்சுமிக்குச் சந்தோஷமாக இருந்தது. அப்படி நிஜமாக நடந்துவிடாதா என ஆசையாகவும் இருந்தது
•••