ஜப்பானைச் சேர்ந்த செய் ஷோனகான் எழுதிய The Pillow Bookல் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது.

பேரரசரின் விருப்பமான பூனையின் பெயர் மையோபு. அதைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண் இருந்தாள். அவளது பெயர் முமா.
ஒரு நாள் அந்தப் பூனை நீண்டநேரமாக வெயிலில் தூங்கிக் கொண்டிருந்தது, அதைக் கலைப்பதற்காக முமா அரண்மனை நாயை வேடிக்கையாக ஏவிவிட்டாள்.
ஒகினமாரோ என்ற அந்த நாய் பூனையின் மீது வேகமாகப் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போன பூனை பயத்தில் தப்பியோடியது.
மன்னர் அப்போது காலை உணவினைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த அறைக்குள் பூனை ஒடிவரவே. ஏன் இப்படி ஒடிவருகிறது என்று விசாரித்தார். அரண்மனை நாய் துரத்தி வந்த செய்தியைச் சொல்கிறார்கள்.
பணிப்பெண்ணை அழைத்து,“ ஏன் நாயை ஏவி விட்டாய்“ என்று மன்னர் கோவித்துக் கொள்கிறார்.
அவளோ, “விளையாட்டுக்காகச் சொன்னதை நாய் புரிந்து கொள்ளவில்லை“ என்கிறாள்.
“நாயிற்கு உன் கட்டளையிலுள்ள விளையாட்டுதனம் எப்படிப் புரியும்“ எனக் கோவித்துக் கொண்ட மன்னர் உடனே அவளை வேலையை விட்டு நீக்குகிறார். அத்துடன் பூனையைத் துரத்தி வந்த ஒகினமாரோ நாயையும் தண்டிக்க விரும்பி அதை அடித்து நாடு கடத்த உத்தரவிடுகிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பாக அந்த நாய் மலர்மாலை சூடப்பட்டு அலங்காரமாக அரண்மனையில் நடமாடியதை பணிப்பெண்கள் நினைவு கொள்கிறார்கள். அந்தச் சுகபோக வாழ்வு நொடியில் பறிபோகிறது
தண்டிக்கபட்டு நாடு கடத்தப்படும் நாய்களுக்கு என்றே ஒரு தீவு இருந்தது. அங்கே கொண்டு போக நாயை இழுத்துச் செல்கிறார்கள்.
அத்தீவில் ஒகினமாரோ தனது எஜமானியை நினைத்து அழுகிறது. உணவை உண்ண மறுக்கிறது.

பின்னொரு நாள் அங்கிருந்து தப்பி வந்த நாய் அரண்மனை அருகே வந்து ஊளையிடுகிறது. அதைக் கண்ட காவலர்கள் நாயை சுற்றிவளைத்து தடியால் அடிக்கிறார்கள். அரண்மனையில் பெண்கள் நாயின் ஒலத்தைக் கேட்டு பதறிப் போகிறார்கள்.
துணி துவைக்கும் பெண் தப்பி வந்த ஒகினமாரோவை தடியால் அடித்துக் கொல்கிறார்கள் என்கிறாள். ஒகினமாரோ இறந்துவிட்டது , வெளியே தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று பின்பு தெரிவிக்கிறார்கள்.
அன்றைய மாலையில் அவர்கள் ஒகினமாரோவை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அடிபட்டு வீங்கிய நிலையில் ஒகினமாரோ மீண்டும் அரண்மனைக்குள் நடந்து வருகிறது.
அது ஒகினமாரோ தானா என அவர்களுக்குச் சந்தேகம் வரவே. பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நாய் திரும்பிப் பார்க்கவில்லை.
உடனே பேரரசியிடம் தகவல் தெரிவிக்கிறார்கள். ஒகினமாரோ அவளது விருப்பத்திற்குரிய நாய். ஆகவே அவள் வேலை நீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண் முமாவை உடனே அழைத்து வா. அவள் நாயை அடையாளம் கண்டு சொல்வாள் என உத்தரவிடுகிறாள்.
அரண்மனையிலிருந்து துரத்தப்பட்ட பணிப்பெண்ணிற்கு மீண்டும் வேலை கிடைக்கிறது. அவள் இது ஒகினமாரோ தான் என்று உறுதியாகச் சொல்கிறாள். ஆனால் நாய் அவளது அழைப்பையும் ஏற்கவில்லை.
ஒருவேளை இது வேறு நாயாக இருக்குமோ என்று ராணி சந்தேகம் அடைகிறாள். மறுநாள் ராணி தனது அறையினுள் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது அதே நாயைக் காணுகிறாள். அடிபட்டு வீங்கிய நிலையில் ஒகினமாரோ ஏக்கத்துடன் அவளைப் பார்க்கிறது. அவள் பரிவுடன் நோக்கவே நாயின் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவள் நாயின் அன்பைப் புரிந்து கொள்கிறாள். உடனே நாயிற்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. விஷயம் அறிந்த மன்னரும் நாயை ஏற்றுக் கொள்கிறார். ஒகினமாரோ மீண்டும் அரண்மனையில் வாழ ஆரம்பிக்கிறது.
“துயருற்ற மனிதர்கள் தன்மீது பரிவுகாட்டுகிறவர் முன்பாக அழுவது இயல்பு. ஆனால் இங்கே ஒரு நாய் அப்படி நடந்து கொள்கிறது“
அழகான சிறுகதையைப் போல நடந்த நிகழ்வை ஷோனகான் விவரிக்கிறார். இது அவரது தேர்ந்த எழுத்தாற்றலின் சான்று.
காரணமேயில்லாமல் அதிகாரத்தால் தண்டிக்கபடுவதும். இழந்த வாழ்க்கை திடீரென மீண்டும் கிடைப்பதும் இன்றும் தொடரவே செய்கிறது. தான் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என்பதை நாயால் எப்படித் தெரிவிக்க முடியும். கடைசியில் அதன் கண்ணீர் மொழியாகிறது. உண்மையைப் புரிய வைக்கிறது.
•••
Makura no sōshi எனப்படும் The Pillow Bookயை எழுதியவர் செய் ஷோனகான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானில் வாழ்ந்தவர்.


ஜப்பானியப் பேரரசர் இச்சிஜோவின் மனைவி பேரரசி சடகோவின் அந்தப்புர உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்
அரண்மனை வாழ்க்கை குறித்தும் தனது கவிதை ரசனை மற்றும் தான் கண்ட மனிதர்கள். நிகழ்வுகள் குறித்தும் ஷோனகான் எழுதிய குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.
இதனை அவர் உருவாக்கியுள்ள விதம் இன்றைய பின்நவீனத்துவப்பிரதி போலிருக்கிறது. குறிப்பாக அவரது விருப்பு வெறுப்புகளின் பட்டியல் தனித்துவமானது.
கியாத்தோவில் வசித்து வந்த ஷோனகானின் தந்தை பிராந்திய கவர்னராக இருந்தவர். ஷோனகானின் உண்மையான பெயர் நகிகோ என்கிறார்கள். தச்சிபானா நோரிமிட்சு என்பவரை தனது பதினாறாவது வயதில் மணந்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அதன் பின்பே அரண்மனை பணிக்குச் சென்றிருக்கிறார் 24 வயதில் அரசி தனது பிரசவத்தில் இறந்து போகவே அரண்மனையை விட்டு வெளியேறினார் ஷோனகான், தனது கடைசி நாட்களில் மிகவும் வறுமையில் வாடி இறந்து போனார் என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.
பேரரசியின் உதவியாளராகப் பணியாற்றிய போது அவளுக்கு வயது இருபது. பேரரசி பயணம் செய்யும் போது துணையாகச் செல்வதும், கோடை மற்றும் வசந்தகாலங்களில் அவருடன் அரண்மனையில்இருப்பதும் ஷோனகானின் வேலை.
ஷோனகான் வசித்த அந்தப்புர வாழ்க்கை உலகம் அறியாதது. அரண்மனைக்குள் அது ஒரு ரகசிய உலகம். தங்கக் கூண்டில் அடைக்கபட்ட கிளியை போன்ற வாழ்க்கையது. விழா நாட்களிலும் பயணத்தின் போதும் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள். மகிழ்ச்சியை அனுபவித்தார்கள்.
கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஷோனகான் மன்னரின் முன்பாகக் கவிதை பாடியிருக்கிறாள், தன்னைச் சுற்றிய வாழ்க்கையை நுட்பமாக அவதானித்து அவர் எழுதியுள்ள குறிப்புகள் யாவும் கவித்துவமாக உள்ளன.
இந்த நூலை எப்படி எழுதினார் என்பதற்கு ஒரு நிகழ்வை விவரிக்கிறார்
ஒரு நாள் அமைச்சர் கொரேச்சிகா ஒரு கட்டுக்காகிதத்தைப் பேரரசிக்கு பரிசாக வழங்கினார். அதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் காகிதக் கட்டினை ஷோனகானிற்கு அளித்தார் பேரரசி. அப்படிக் கையில் கிடைத்த காகிதங்களைக் கொண்டே ஷோனகான் குறிப்புகள் எழுதியிருக்கிறார். அந்தரங்கமான குறிப்புகள் என்ற பொருளில் தான் தலையணை புத்தகம் என அழைக்கபடுகிறது.
ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஷோனோகான் போலப் பெண்கள் எழுதிய டைரிகள் மற்றும் குறிப்பேடுகள் பெரிதும் தனிப்பட்டஅனுபவங்களின் பதிவுகளாக இருக்கின்றன. இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஆண்களின் டயரிகள் மற்றும் குறிப்புகள் பயணம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்று பதிவுகளாகக் காணப்படுகின்றன. நாட்குறிப்பு என்ற வடிவம் அந்தக் காலத்தில் முதன்மையாக இருந்தது. தேதியற்ற நாட்குறிப்புகளைப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் வழியே அவர்களின் அகநிலை மற்றும் உளவியல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவரது காலத்தில் தான் லேடி முரசாகி கெஞ்சிக்கதை என்ற நாவலை எழுதினார். அதுவே ஜப்பானின் முதல்நாவலாகக் கருதப்படுகிறது. லேடி முரசாகியின் போட்டியாளராக ஷோனகானைச் சொல்கிறார்கள்.
கோடை கால இரவின் நிலவொளியினையும், இலையுதிர்காலச் சூரியனையும், காட்டுவாத்துகள் செல்லும் ஆகாசத்தையும் ரசித்து எழுதியிருக்கிறார் . அந்தக் கால உடைகள் மற்றும் அலங்காரங்கள் பற்றி நுணுக்கமாக எழுதியிருக்கிறார். நினைவிலிருந்து இவ்வளவு துல்லியமாக எழுதியிருப்பது ஆச்சரியமளிக்கிறது..
பின் அறைகளில் கேட்கும் உரையாடலையும்,அரண்மனை பணியாளர்களின் மனநிலையினையும் அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகளையும், மன்னரின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் கவிதை வாசிப்பையும் ஷோனகான் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமயசடங்குகள் மற்றும் திருவிழாக்கள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். பயண வழிகள் குறித்தும் பருவகால மாறுதல்களின் அழகினை பற்றியும் மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்.
ஒருவரை அதிகம் சந்தோஷம் கொள்ள வைக்கும் விஷயம் எது என்பதற்கு, யாரோ கிழித்துப் போட்ட கடிதத்தை மீண்டும் சரியாக ஒட்டவைத்துப் படிப்பது அலாதியான இன்பம் என்று ஷோனகான் எழுதியிருப்பது அவரது விளையாட்டுத் தனத்தையே காட்டுகிறது.
விருப்பத்திற்குரிய மலர்களைச் சேகரித்துத் தொடுப்பது போன்றது தான் தனது எழுத்து என்கிறார் ஷோனகான். உலகம் இதனை வாசிக்கப் போகிறது என்று அவர் நினைக்கவேயில்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு நாம் இதனை வாசிக்கும் போது திரைச்சீலைக்குப் பின்னேயிருந்து ஷோனகான் பேசுவது கேட்கிறது. சொற்களின் வழியே அவர் தன்னை மட்டுமின்றித் தனது காலத்தையும் ஒளிரச் செய்கிறார்.