ஒரு நாள் நிபந்தனை

இரண்டாம் உலகப் போரின் போது ரோமில் வசித்த யூதர்களை நாடு கடத்தாமல் இருப்பதற்காக ஆல்பர்ட் கெஸ்ஸெல்ரிங் தலைமையில் செயல்பட்ட நாஜி ராணுவம் ஒரு நிபந்தனையை விதிக்கிறது.

அதன்படி ஒரு நாளைக்குள் அவர்கள் ஐம்பது கிலோ தங்கத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரைவிட்டு வெளியேறி சிறை முகாமிற்குச் செல்ல நேரிடும்.

இந்த நிபந்தனையை யூதர்கள் ஏற்கத் தயங்கினார்கள். குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். ஆனால் யூத சமூகத்தின் மிக உயர்ந்த வணிகர்களோ தங்கத்தைக் கொடுத்து நாஜி ராணுவம் சமாதானமாகிவிட்டால் ரோமிலே வாழலாமே என்று வாதிட்டார்கள்.

24 மணி நேரத்திற்குள் எப்படி அவர்கள் தங்கத்தைத் திரட்டினார்கள் என்பதையே”The Gold of Rome” திரைப்படம் விவரிக்கிறது.

1961ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் கார்லோ லிசானி. நாஜி எதிர்ப்பில் தீவிரம் காட்டிய இவர் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்

யூதர்கள் வசமிருந்த தங்கம், கலைப்பொருட்களை நாஜி ராணுவம் கொள்ளையடித்த நிகழ்ச்சிகளை வரலாற்றில் காணமுடிகிறது. இது உயிர்தப்புவதற்காக அவர்களே ராணுவம் வசம்  தாங்கள் அணிந்திருந்த நகைகள். சேமிப்பில் இருந்த தங்க நாணயங்களை ஒப்படைத்த கதையைச் சொல்கிறது.

ஐம்பது கிலோ தங்கத்தை ஒரு நாளில் சேகரிப்பது எளிதானதில்லை. அதற்கு மக்களை முதலில் சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்காக நடைபெறும் கூட்டமும் அங்கே நடக்கும் விவாதங்களும் நிஜமாக சித்தரிக்கபட்டுள்ளன.

இது நாஜி ராணுவத்தின் ஏமாற்றுவேலை. தங்கத்தைப் பறித்துக் கொண்டு நம்மை முகாமில் அடைக்கக் கொண்டு போய்விடுவார்கள் என்று இளைஞர்கள் குரல் எழுப்புகிறார்கள். படத்தில் அவர்களின் கோபம் அழுத்தமாக வெளிப்படுகிறது

படத்தின் பெரும்பகுதி தங்கத்தினைச் சேகரித்து ராணுவ அதிகாரியிடம் ஒப்படைப்பதைப் பற்றியது. இதற்குள் எத்தனை உணர்ச்சிபூர்வ நிகழ்வுகள்,

 டேவிட் என்ற இளைஞன் ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தேர்வு செய்கிறான், யூதர்களில் பெரும்பாலோர் பணிவுடன் நடந்து கொள்கிறார்கள்.  ஒரு பிரச்சனையை இருவேறு தலைமுறை எப்படி கையாளுகிறார்கள் என்பதும் படத்தில் சித்தரிக்கபடுகிறது.

உணவகத்தில் யூதர் ஒருவர் அவமானப்படுத்தப்படும் காட்சியும், விட்டுக் கொடுப்பதே சரியான வழி எனப் போதகர்  சொல்வதும் சிறப்பான காட்சிகள்

யூத கமிட்டி மக்கள் ஒப்படைக்கும் தங்க நகைகளுக்கு முறையாக ரசீது தருகிறார்கள். அந்தத் தங்கத்தை எடைபோட்டுச் சேமிப்பில் சேர்கிறார்கள். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தங்கத்தைத் தருகிறார்கள். உயிர்வாழ்வது தான் முக்கியம் என ஒரு பெண் குறிப்பிடுகிறார்.

நாஜி ராணுவத்திட்ம் சிக்கி மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்கள். எத்தனை பேரின் கனவுகள் கலைந்து போனது. என்பதை உணர்ச்சிப்பூர்வ நாடகமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இத்தாலிய கறுப்பு வெள்ளை படங்களுக்கே உரித்தான அழகான ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் படத்தைத் தனிச்சிறப்ப கொண்டதாக்குகிறது

0Shares
0