ஒளி உண்டானது.

The current war  என்ற ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்தேன். மின்சாரம் கண்டுபிடிக்கபட்ட காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், தொழிலதிபரான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவருக்கும் இடையில் நடந்த போட்டி மற்றும் பிரச்சனைகளை முன்வைத்து அமெரிக்கா எவ்வாறு மின்சார மயமாக்கப்பட்டது என்ற வரலாற்றை விவரிக்கிறது இந்தத் திரைப்படம்

தனது கண்டுபிடிப்புகளின் உரிமைக்காக எடிசன் பல்வேறு முறை நீதிமன்றம் சென்று முறையிட்டு வென்றிருக்கிறார். 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை எடிசன் பெற்றிருந்தார். ஆனாலும் எடிசனின் கண்டுபிடிப்புகளில் எல்லாமும் வெற்றிபெறவில்லை. மின்சார பல்ப், போனோகிராப், சினிமாக் கேமிரா, எலக்ட்ரிக் சேர், தந்திக்கருவி எனத் தனது முக்கியமான கண்டுபிடிப்புகளின் வழியே எடிசன் மிகப்பெரிய செல்வத்தை பெற்றார் என்பதே வரலாறு.

படம் மிக அழகாகத் துவங்குகிறது. இருளில் ஒளிவட்டம் போல மின்சார விளக்குகளை எரிய விட்டு அதனுள் தோன்றுகிறார் எடிசன். தான் உருவாக்கியுள்ள மின்சாரத்தை அமெரிக்கா முழுவதும் கொண்டு சென்று ஒளிமயமாக்க வேண்டும் என எடிசன் விரும்புகிறார். இதற்காக அவரே சொந்த நிறுவனத்தை ஏற்படுத்துகிறார். இந்த நிலையில் நவீன தொழில்நுட்பங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவரும், தொழில் அதிபருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் அவரோடு இணைந்து அமெரிக்காவை ஒளிரச் செய்ய முன்வைக்கிறார்.

இதற்காக எடிசனை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார். எடிசன் ரயிலில் பயணம் செய்து மனைவி, பிள்ளைகளுடன்  வெஸ்டிங்ஹவுஸ் வீட்டிற்குச் செல்கிறார். அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி  அடைகிறது.

எடிசன் தான் உருவாக்கியுள்ள DC current கொண்டு மன்ஹாட்டன் பகுதியில் மின்சார வசதி செய்து தருகிறார். வெஸ்டிங்ஹவுஸ் இந்த மின்சார முறை ஆபத்தானது. இதை விட எளிமையானது AC current  அம்முறையே பாதுகாப்பானது, எளிதில் கொண்டு செல்லக்கூடியது என தனது நிறுவனத்தின் வழியே அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கிறார்.

இதனால் எடிசனுக்கும் வெஸ்டிங்ஹவுஸிற்கும் தொழில்போட்டி ஏற்படுகிறது.

இந்நிலையில் எடிசனுடன் இணைந்து பணியாற்ற வருகிறார் விஞ்ஞானி டெஸ்லா, அவரைப் பயன்படுத்திக் கொண்டு, செய்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிடுகிறார் எடிசன். இதனால் ஆத்திரமான டெஸ்லா எடிசனை விட்டு விலகி வெஸ்டிங்ஹவுஸ் உடன் இணைந்து கொள்கிறார். இது எடிசனை மேலும் ஆத்திரப்படுத்துகிறது

திடீரென எடிசனின் மனைவி இறந்துவிடுகிறார். வெஸ்டிங்ஹவுஸ் தொழில்ரீதியாக பின்னடைவு அடைகிறார். இரண்டு பக்கமும் வீழ்ச்சிகள். தனது நிறுவனத்தை நடத்த எடிசன் பொருள் ஈட்ட புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுகிறார்.

மரணதண்டனைக்கு உதவும் மின்சார நாற்காலியை உருவாக்குகிறார் எடிசன். இதை அறிந்த வெஸ்டிங்ஹவுஸ் மோசமான ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார் என பத்திரிக்கைகளில் அம்பலப்படுத்துகிறார்

இந்த நிலையில் ஜேபி மார்கன் உதவியுடன் எடிசன் தனது மின்சார முறையை அமெரிக்கா முழுவதும் முன்னெடுத்துச் செல்கிறார். நாளை தனது சினிமா காட்டும் கருவி அறிமுகமானால் இந்த மின்சார யுத்தத்தை மக்கள் மறந்துவிடுவார்கள் என எடிசன் சொல்வதோடு படம் நிறைவு பெறுகிறநது.

எடிசனாக நடித்திருப்பவர் benedict Cumberbatch. டெஸ்லாவாக Nicholas Hoult  நடித்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் மிகப்பிரமாதம். Alfonso gomez rejon  படத்தை இயக்கியுள்ளார். Ching hoon chung படத்தின் ஒளிப்பதிவாளர்.

தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி கறுப்பு வெள்ளையில் வந்த பழைய திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அது எளிமையான வாழ்க்கை வரலாற்று சித்திரம். இந்தப்படமோ பிரம்மாண்டமாக அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. பெரும்பொருட்செலவில் உருவாக்கபட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மின்சாரமில்லாத அமெரிக்காவின் இரவு வாழ்க்கை  அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

எடிசன் படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது மகனைப் பற்றிய ஒரு செய்தி நினைவிற்கு வந்து போனது. எடிசனின் மகன் தந்தையின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறான் என்று குற்றச்சாட்டு உருவானது. இதனால் மனமுடைந்து போன எடிசன் தனது மகன் தன்னுடைய பெயரை உபயோககிக்காமல் இருக்க வாரம் 35 டாலர் பணம் தருவதாக ஒத்துக் கொண்டார். குடியிலும், தவறான செயல்களாலும் சீரழிந்து போன எடிசனின் மகன் முடிவில் தந்தையின் நிறுவனத்திலே சிறிய வேலைகள் செய்தபடி வாழ்ந்து வந்தான்.

படம் முழுவதும் தனது கண்டுபிடிப்பை எப்படி பணமாக்குவது என்பதிலே தான் எடிசன் அதிக கவனம் கொள்கிறார். ஒரு விஞ்ஞானியின் கதை என்ற போதும் இரண்டு தொழிலபதிபர்களுக்கு இடையே உருவாகும் தொழில் போட்டியாக மட்டுமே படமிருக்கிறது. எடிசனை விடவும் டெஸ்லா மீது தான் நமது ஈர்ப்பும் கவனமும் செல்கிறது.

எடிசனோடு ஒப்பிடும் போது ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற வேளாண் விஞ்ஞானி தனது கண்டுபிடிப்புகள் அனைத்தின் உரிமையும் மக்களுக்கு விட்டுக் கொடுத்தது நினைவிற்கு வருகிறது. கார்வர் பெரும் பணத்தை சம்பாதிக்கவில்லை. ஆனால் மக்கள் மனதில் அழிவற்ற நாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

••

0Shares
0