கண்கள் சொல்லாதது

மா. சண்முகசிவா எழுதிய ஓர் அழகியின் கதை வல்லினம் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

கதையின் வடிவமும் சொல்லப்பட்ட விஷயமும் சொல் முறையும் மிக அழகாக உள்ளது. சமீபத்தில் நான் படித்த சிறந்த கதை இதுவென்பேன்.

ஜூலியின் கதாபாத்திரம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பாம்பைக் காண்பது போலவே இருக்கிறது. பாம்பின் கண்களை இப்படி உற்றுப் பார்த்திருக்கிறேன். அது சட்டென நம்மைக் கவ்வி இழுத்துவிடும். இந்தக் கதையில் வரும் ஜூலி துயரத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் தேவதையைப் போலிருக்கிறாள். கடந்த காலம் அவளுக்குள் துர்கனவாக உறைந்து போயிருக்கிறது. நிகழ்காலத்தை அவளாகவே வடிவமைக்கிறாள்.

மருத்துவரிடம் ஏன் அவள் உண்மைகளைச் சொல்ல விரும்புகிறாள். உண்மையில் அதுவும் ஒரு கற்பனை தான். அவள் தனக்குத் தானே கதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறாள். கதை சொல்வதன் வழியே தான் சிறுமியாக இருந்த காலத்திற்குப் போக முற்படுகிறாள்.

கண்களை ஆழ்ந்து நோக்குவதன் வழியே அவள் காலத்தின் வேறு காட்சிகளை அறிந்துவிடுகிறாள். இதனால் அவளுக்கு எதிர்காலம் குறித்த பயமில்லை. சொல்லப்போனால் எதிர்கால நிகழ்வுகள் சலிப்பாகவே தோன்றுகின்றன

அவளது கனவுகளின் விசித்திரம் தனக்குத் தானே புனைந்து கொண்டது தானா. உச்சியிலிருந்து விழுவது என்பது தான் அவளது முதன்மையான அனுபவம். அறுபட்ட சிறகுகள் கனவில் தோன்றுகின்றன. வீழ்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் முன் உணர முடியும் என்பார்கள். கதையிலும் அப்படித் தான் நடக்கிறது

இந்தக் கதையை வாசிக்கும் போது ஜி. நாகராஜன் டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் கதையில் வரும் தேவயானை நினைவிற்கு வந்து போகிறாள். அவளும் இப்படியான ஒரு கனவு நிலையைத் தான் அடைகிறாள். அந்த டெர்லின் ஷர்ட் அணிந்த மனிதர் கொடுத்த ஐந்து ரூபாயைத் தேடுகிறாள். அந்த புதிரான அனுபவத்தை எப்படி வகைப்படுத்துவது. தேவயானைக்கு வரும் குழப்பம் தான் இந்தக் கதையில் வரும் ஜூலிக்கும் ஏற்படுகிறது

டத்தோ ஶ்ரீயின் வீட்டிற்கு ஜூலி செல்லும் இடம் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனமான கண்கள் கொண்டவள் என்று டத்தோ ஸ்ரீ அவளைப் பற்றிச் சொல்கிறார். அவளோ தான் ஒரு போதும் அவரைக் காதலித்ததில்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறாள். அவர்கள் கடைசியாக ஒருமுறை முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அந்த முத்தம் அவரது நினைவுகளைத் துடைக்கும் சிறிய காகிதம் போலவே இருக்கிறது.

இந்தக் கதையை மருத்துவக் குறிப்பு போன்ற பாணியிலே சண்முகச் சிவா எழுதியிருக்கிறார். அது தனித்தன்மை மிக்கதாக உள்ளது. சரசரவென நழுவியோடும் எழுத்து நடை. மிகையில்லாத உணர்ச்சி வெளிப்பாடு. சட்டென மாறும் கதாபாத்திரங்கள் என கதை அழகாக உருவாக்கபட்டுள்ளது.

வறுமையும், கனவுகளும். எதிர்பாராத வாழ்க்கையின் உச்சங்களும், நோயும் நினைவுகளும் என பல்வேறு ஊடுஇழைகளை ஒன்றிணைத்து நாவலின் விஸ்தாரணத்தை ஒரு சிறுகதையிலே காட்டியிருப்பது சண்முகச் சிவாவின் சிறந்த எழுத்தாற்றலுக்கு  சான்று.

அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

இணைப்பு

0Shares
0