சிறந்த மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை ஆசிரியருமான கார்த்திகைப் பாண்டியன் உலக இலக்கியத்திலிருந்து சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்து வருகிறார்.
கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகைப் பாண்டியன் தீவிர வாசகர். சமகால உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்காக 2018-க்கான ஆத்மாநாம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மொழிபெயர்ப்பில் வெளியான யுகிமோ மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் நாவல் குறிப்பிடத்தக்க படைப்பு.
தற்போது கார்த்திகைப் பாண்டியன் லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான போர்ஹெஸின்( Jorge Luis Borges) Book of Imaginary Beings நூலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
இந்நூலை மொழியாக்கம் செய்வது மிகக் கடினமான பணி.
போர்ஹெஸின் குறிப்புகளைப் புரிந்து கொள்ள நிறைய வாசிக்கவும் தேடவும் வேண்டும்.
கார்த்திகைப் பாண்டியன் தனது அயராத உழைப்பின் மூலம் இந்த மொழிபெயர்ப்பைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
கோவை புத்தகக் கண்காட்சியினை ஒட்டி இந்நூல் வெளியிடப்படவுள்ளது. சிறந்த மொழியாக்க நூல்களை வெளியிட்டு வரும் எதிர் பதிப்பகம் இதனை வெளியிடுகிறார்கள்.
போர்ஹெஸின் அரிய நூலை தமிழுக்கு கொண்டு வரும் கார்த்திகைப் பாண்டியனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இந்நூலுக்கு மிகவும் அழகான அட்டையை உருவாக்கித் தந்துள்ளார் ஒவியர் சந்தோஷ் நாராயணன். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
••••
கற்பனையான உயிரிகளின் புத்தகம்
போர்ஹெஸ்
தமிழில் – கார்த்திகைப் பாண்டியன்
எதிர் வெளியீடு
ஜூலை 2019.