புதிய சிறுகதை. ஜனவரி 2. 2024
சமையல் வேலையிலிருந்த சாந்தாவிற்கு அப்பா எதையோ சப்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. பக்கவாதம் வந்து வலதுகையும் காலும் செயல்பட முடியாமல் அப்பா படுக்கையில் கிடந்தார். முகமும் லேசாகக் கோணிப்போயிருந்தது. பகல் முழுவதும் எதிரே யாரோ இருப்பது போலத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம்.

சில சமயம் சப்தமாக “சாந்தா. கொஞ்சம் வாயேன்“ என்று கூப்பிடுவார்.
அந்த அழைப்பிற்கு ஒரு காரணமும் இருக்காது. அவள் அப்பா படுத்திருந்த அறைக்குள் போய் நின்றவுடன் ஒரு வார்த்தை பேசாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தபடி இருப்பார். பிறகு ஆற்றாமையான குரலில் “நீ அவங்க வீட்ல கேட்டயா“ என்பார்.
“நான் எப்பிடிப்பா கேட்க முடியும். அவங்க ஒத்துகிட மாட்டாங்க“ என்பாள் சாந்தா,
“நீ கேட்டுப்பாரேன். நான் சாகுறதுக்குள்ளே நடந்தாகணும். நீ ஒருக்க அவங்க வீட்டுக்கு போயிட்டு வாயேன்“
“என்னாலே முடியாதுப்பா. “
“அப்போ என்னைக் கொண்டுகிட்டுப் போ. நான் கேட்குறேன்“
“அதுவும் முடியாது“
“ ஒரு கவளம் சோறு போதும்மா“
“என்ன பேச்சுப்பா. இது.. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நாமளா இருந்தா ஒத்துக்கிடுவமா“
“முடியாது தான். ஆனா மனசு கேட்க மாட்டேங்குது. எனக்காக ஒரு தடவை கேட்டுப்பாரேன்“
“சரிப்பா“ என்பாள் சாந்தா. ஆனால் கோலப்பனின் வீடு தேடிப் போக அவளுக்குத் தைரியமில்லை
••
அன்றைக்கும் அப்படித் தான் அழைத்திருந்தார். எப்போதும் போலவே அவள் முடியாது என்று மறுத்து பேசினாள். அப்பா தனது கோபத்தை விழுங்கி கொண்டவராக அவளிடம் சொன்னார்
“கைகால் முடங்கிப் போனதுக்குப் பதிலா நான் செத்தே போயிருக்கலாம். “
“அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சித் தானே ஆகணும்“ என்றாள் சாந்தா. அப்பா பதில் பேசவில்லை. இனி பேசவும் மாட்டார், ஜன்னலுக்கு வெளியே காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இலைகளைப் போலக் கடந்த கால நிகழ்வுகள் அவருக்குள் அசைந்தபடியிருந்தன.
அப்பா என்ன வேண்டுகிறார் என அவளுக்குத் தெரியும். அப்பா கேட்பது ஒரு மன்னிப்பை. அதைப் பெறுவது எளிதானதில்லை.
பக்கவாதம் வருவதற்கு முன்புவரை அப்பாவின் மனதில் இப்படி ஒரு எண்ணமில்லை. ஆனால் கைகால் முடங்கிப் போனதும் அதைத் தனது பாவத்திற்கான தண்டனை என்று நம்பினார். அதிலிருந்து மீள அவராகவே இப்படி ஒரு வழியைக் கண்டறிந்திருந்தார். வேறு யாரால் இப்படி யோசிக்க முடியும்
••
சென்ற கோடையில் ஊருக்கு வந்திருந்த அண்ணன் ரவிச்சந்திரனிடம் சாந்தா இதைப்பற்றிச் சொன்னாள். அவன் கோவித்துக் கொண்டான்.
“அவருக்கு என்ன கிறுக்குபிடிச்சிருச்சா. அவங்க வீட்ல நாம எப்படிப் போயி கேட்குறது. “
“ஆனா சொல்லிகிட்டே இருக்கார். பாவமா இருக்கு“
“பாவம் பாக்குற மனுசன் செய்ற வேலையா அது. அவரு செஞ்சிருக்க அக்கிரமத்துக்குத் தான் இப்படி நொட்டாங்கையில சாப்பிடுற நிலமை வந்துருக்கு. “
“நீ வேணும்னா. ஒரு தடவை கோலப்பன் வீட்டுக்குப் போய்க் கேட்டுட்டு வாயேன்“
“முடியாது. அந்த வீட்டு வாசல்ல எந்த முகத்தை வச்சிட்டு நிக்குறது. அவரு புலம்புனா புலம்பிட்டு கிடக்கட்டும்“ என்று கோபமாகச் சொன்னான். அண்ணியும் கூட அப்படித்தான் நினைத்தாள். அவர்கள் சொல்வது சரி தான். அப்பாவின் தவறுக்காக ஏன் நாம் அவமானப்பட வேண்டும்
ஒருவேளை அம்மா உயிரோடு இருந்தால் நிச்சயம் அவள் போய்க் கேட்டிருப்பாள். அப்பாவிற்காக அவமானங்களை ஏற்றுக் கொண்டு அவதிப்பட்டது தானே அவளது வாழ்க்கை.
சாந்தா அம்மாவை நினைத்துக் கொண்டாள். மோசமான மனிதர்களையும் நேசிப்பதற்குச் சிலர் இருக்கிறார்கள் தானே. இடிந்த சுவருக்குள் முளைத்துள்ள செடிகளைக் கண்டிருக்கிறாள். கற்களால் செடிக்கு என்ன பயன். ஆனால் ஆசையாக அதைத் தழுவிக் கொண்டிருக்கிறதே.
••

சாந்தாவின் அப்பாவான திருமலைக்குமரன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறடிக்கும் மேலான உயரம். ஓங்குதாங்கான உடற்கட்டு. தேங்காய் நார் போன்ற பெரிய மீசை. எப்போதும் சிவந்திருக்கும் கண்கள். பெருங்குடிகாரர். முன்கோபி , யாரையும் கைநீட்டி அடித்துவிடும் பழக்கமும் இருந்தது.
அம்மா நிறைய அடிவாங்கியிருக்கிறாள். சாந்தாவும் அவளது அண்ணனும் கூட அடிவாங்கியிருக்கிறார்கள். ஒரு முறை கோபத்தில் லாடம் சொம்பால் அண்ணனை அடித்து அவனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவசரமாக அம்மா காபித்தூளை கொண்டு அழுத்திவைத்து ரத்தப்பெருக்கை நிறுத்தினாள். தரையெல்லாம் ரத்தம் சொட்டியிருந்தது. அண்ணன் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.
அப்பா எதுவும் நடக்காதவர் போல அம்மாவிடம் “ஒரு டீ கொடு பூரணி“ என்று கேட்டார்.
அம்மாவும் மண்டை உடைந்த அண்ணனை அப்படியே விட்டுவிட்டு சமையலறைக்குப் போய் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். அப்பா அந்தத் தேநீரை நிதானமாக அருந்துவதை அண்ணன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
டீ குடித்து முடித்துவிட்டு அண்ணன் அருகில் சென்ற அப்பா அவனது கன்னத்தில் ஒங்கி அறைந்தபடி “என்னடா முறைக்கிறே“ என்று கேட்டார். அப்போது அண்ணன் அழவில்லை. அம்மா சற்றே கோபத்துடன்“ நீங்க ஸ்டேஷனுக்குக் கிளம்புங்க“ என்றாள்.
அப்பா அவளை முறைத்துப் பார்த்தபடியே சொன்னார்
“அவனை டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போகாதே. காயம் ரெண்டு நாள்ல தானா ஆறிரும்“
“ எங்களுக்குத் தெரியும்“ என்று சொன்னாள் அம்மா
“மட்டன் எடுத்து கொடுத்துவிடுறேன். சமைச்சி இவன்கிட்ட குடுத்துவிடு“ என்றபடியே அப்பா எழுந்து கொண்டார்
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியது. ஆனால் அவளது மனதில் இன்றும் அழியாச்சித்திரமாகப் பதிந்து போயிருக்கிறது.
அம்மா பக்கத்திலிருந்த சேகர் டாக்டரிடம் அண்ணனை அழைத்துக் கொண்டு போய்க் கட்டுப் போட்டுவந்தாள். அன்றைக்கு மத்தியானம் அண்ணன் தான் அப்பாவிற்கான சாப்பாட்டினை ஸ்டேஷனில் கொண்டு போய்க் கொடுத்துவந்தான். ஒருவேளை கொடுக்காமல் போயிருந்தால் அதற்கும் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
சொந்தபிள்ளைகளிடமே இவ்வளவு கோபத்தைக் காட்டும் அப்பா குற்றவாளிகளை எப்படி நடத்துவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரிடம் அடிவாங்கிப் பல் உடைந்து போனவர்கள். கைகால் முறிந்தவர்கள் ஏராளம். கஞ்சா கேசில் மாட்டிய ஒருவனின் கழுத்து எலும்பு முறிந்து போயிருக்கிறது.
ஒருமுறை பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரியை அப்பா ஆவேசமாகக் கெட்டவார்த்தைகளால் திட்டியபடியே ஒங்கி மிதித்துக் கொண்டிருப்பதை அம்மா பார்த்தாள். அடிவயிற்றோடு விழுந்த அந்த மிதியைக் கண்டதும் அவளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. பிச்சைக்காரியின் தலைமயிரை பற்றி இழுத்துக் கொண்டு போய்ச் சாக்கடையில் தள்ளிய அப்பா “இனிமே உன்னை இங்க பாத்தேன். கொன்னு புதைச்சிருவேன் “என்று சப்தமிட்டார்.
அந்த வார்த்தைகள் அம்மாவிற்கென்று சொன்னது போல அவள் நினைத்துக் கொண்டாள். இப்படி ஈவு இரக்கமே இல்லாமல் ஒரு மனிதரால் எப்படி இருக்க முடியும் என்று அம்மா அன்றிரவு புலம்பினாள். அவளால் வேறு என்ன செய்துவிட முடியும்
அப்பாவிற்குச் சிலரைக் காரணமேயில்லாமல் பிடிக்காமல் போய்விடுவது வழக்கம். அப்படிப் பிடிக்காமல் போனவர்களை அவர் அடிக்காமல் விட்டதே இல்லை. ஏதாவது பொய்காரணங்களை அவரே உருவாக்கி அவர்களைச் சித்ரவதை செய்வார்..
அப்படி ஒரு பெட்டிக்கடைக்காரன் அவர்கள் தெருமுனையில் இருந்தான். அவன் அப்பாவிற்குப் பயந்தே கடையை மூடிவிட்டு சொந்த ஊரான திருச்செந்தூருக்குப் போய்விட்டதாகச் சொல்வார்கள்.
அப்படியும் அப்பாவின் கோபம் தணியவில்லை. ஒரு விசாரணைக்காகத் திருச்செந்தூர் சென்றவர் தற்செயலாக அவனைக் கோவிலடியில் பார்த்துவிடவே தேடிக் கொண்டிருந்த குற்றவாளியோடு தொடர்பு கொண்டவன் என்று அவனைப் பிடித்துத் தெருவில் அடித்துக் கொண்டு போனதாகக் கேள்விபட்டிருக்கிறாள்.
மோசமான நடத்தை காரணமாக அப்பா இரண்டு முறை வேலையில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணை நடைபெற்றிருக்கிறது. எதுவும் அவரது இயல்பை மாற்றவில்லை. அப்பாவை பற்றி ஒருவர் கூட உயர்வாக ஒரு வார்த்தை பேசியதில்லை. பிசாசு என்றும் கரடி என்றும் வெறிநாய் என்று தான் அவரைப் பற்றிச் சொன்னார்கள்
அப்பாவின் அடிஉதைக்குப் பயந்தே அண்ணன் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டான். அவரிடமிருந்து வெகுதொலைவு போய்விட வேண்டும் என்பதற்காகவே மும்பைக்கு ஒடிப்போனான். அப்பா அவனைத் தேடவில்லை.
அப்பாவின் குற்றங்கள் தன் மீதும் தனது பிள்ளைகள் மீதும் கரும்புகையாகப் படிவதை அம்மா உணர்ந்திருந்தாள். அது தான் அம்மாவிற்கு நோயாக மாறியது. ஒயாத இருமல். நெஞ்சிரைப்பு. அம்மாவை ஒருமுறை கூட அப்பா மருத்துமனைக்கு அழைத்துக் கொண்டு போனதில்லை. அம்மா தனியே பொதுமருத்துவமனைக்குப் போய் வந்தாள். மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு அவசர சிகிச்சை வார்டில் சேர்க்கபட்ட போதும் கூட அப்பா அவளை வந்து பார்க்கவில்லை. சாந்தா தான் உடனிருந்தாள்.
அப்பாவிற்கு வேறு பெண்களுடன் பழக்கமிருந்தது. அவர்களில் ஒருத்தி விதவை என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நாட்களில் அவளைத் தங்கள் வீட்டிற்கே அப்பா அழைத்து வந்திருந்தார். சாந்தாவால் அதை ஏற்க முடியவில்லை அப்பாவோடு சண்டையிட்டாள். அந்த ஒருமுறை தான் அப்பா அவள் சொன்னதைக் கேட்டதைப் போல அந்தப் பெண்ணைத் தன்னோடு திரும்ப அழைத்துக் கொண்டு போனார். ஆனால் அம்மா சாகும் நாளில் அப்பா அவளது வீட்டில் தான் இருந்தார். அம்மாவின் இறந்துகிடந்த உடலைக் கண்ட போதும் அவரிடம் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை.
அம்மா இறந்தபிறகு அவர் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே வீட்டிற்கு வந்து போனார். அதுவும் சமைப்பதற்காக மீனோ, மட்டனை வாங்கிக் கொடுத்து அனுப்புவார். மதியம் சாப்பிடுற வேளையில் வருவார். சாப்பிடுவார். சிகரெட் பிடிப்பார். எழுந்து போகும் போது நூறோ ஐம்பதோ மேஜையில் வைத்துவிட்டு போவார். அந்தப் பணத்தைக் கையால் தொடுவதற்கே அருவருப்பாக இருக்கும்.
அவருக்காக ஏன் சமைத்துத் தருகிறோம் என்று சாந்தா வருந்துவாள். ஆனால் அதைச் செய்ய மறுத்தால் அடிவாங்கக் கூடும். அம்மாவின் பயத்தில் பாதி அவளிடமிருந்தது. மும்பைக்கு ஒடிப்போன அண்ணன் ஆறு ஆண்டுக்கு பிறகு பொங்கலுக்கு வந்திருந்தான். அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னான்.
சாந்தா வர மறுத்தாள். அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை
“ அந்த ஆள் உன்னையும் அடிச்சே கொல்லப்போறான் பாரு. இவ்வளவு சொல்லியும் உனக்குப் புத்தியில்லையா“
“ என்னை ஒண்ணும் பண்ண மாட்டாருண்ணே“ என்றாள் சாந்தா
“ அப்போ கிடந்து அவதிப்படு“. என்று அண்ணன் கோபத்துடன் சொன்னான்
ஏன் அண்ணனோடு போகவில்லை என்று சாந்தாவிற்கு இன்றுவரை புரியவில்லை.
அப்பா தான் அவளது கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார். நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கவில்லை. ஒரு நாள் மதியம் அவளிடம் வந்து புதுப்புடவை. மற்றும் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து “நாளைக்கு உனக்குக் கல்யாணம். வேண்டியதை வாங்கிட்டு ரெடியா இரு“ என்றார் அப்பா.
யார் மாப்பிள்ளை என்றோ, எங்கே கல்யாணம் என்றோ கூட அவள் கேட்கவில்லை.
ஈஸ்வர் என்ற அவளது கணவனைத் திருமணம் நடைபெற்ற சிவன் கோவில் வாசலில் தான் முதலில் பார்த்தாள். நெற்றியில் சிறிய கீற்றாகத் திருநீறு பூசியிருந்தான்.சந்தன நிற சட்டை. கறுப்பு நிற பேண்ட். மெலிந்த உடல். அவன் கண்களிலும் பயமிருந்தது. திருமணத்திற்கான மாலைகள் வாங்கிக் கொண்டு வந்திருந்த கான்ஸ்டபிள் உத்ராடம் அவளிடம் சொன்னார்
“நல்ல பையன். ஆட்டோ ஒட்டுறான் “
ஈஸ்வரை அப்பாவிற்கு எப்படித் தெரியும் என்றோ, யார் இந்தத் திருமணப்பேச்சை துவங்கினார்கள் என்றோ அவளுக்குத் தெரியாது. ஈஸ்வர் கைகளைக் கட்டிக் கொண்டு பணிவாக நின்றிருப்பதைப் பார்த்தாள். அப்பா ஏதோ உத்தரவிடுவது போல அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அவன் தலையாட்டிக் கொண்டிருந்தான். ஆனால் இடையிட்டு அவனது கண்கள் அவளை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தன.
அப்பா ஏன் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை என்று மனதிற்குள் கேள்வி எழுந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் திருமணம் கோவிலில் எளிமையாக நடந்தேறியது.
திருமணத்திற்குப் பிறகே அவள் ஈஸ்வரை பற்றி அறிந்து கொண்டாள். அவனுக்குப் பெற்றோர்கள் இல்லை. அவனது ஆட்டோவை ஒரு கார் இடித்துவிட்ட வழக்கில் புகார் கொடுக்க வந்தவனை அப்பாவிற்குப் பிடித்துப்போய்விட அவனுக்கு உதவி செய்ததோடு மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
அவன் ஒருவன் தான் அப்பாவை உயர்வாகப் பேசினான்
“உங்க அப்பா பாக்க முரட்டுத்தனமா இருக்கார். ஆனா நல்ல மனுசன். “
“நீங்க தான் மெச்சிகிடணும். “
“உங்கப்பா நல்லவரா மாறிடுவார் பாரேன்“ என்றான். அப்படிப் பேச்சளவில் கேட்பது கூட அவளுக்குப் பிடித்தேயிருந்தது
ஈஸ்வரை அவளுக்குப் பிடித்திருந்தது. சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். ஆனால் ஆறுமாசங்களில் அப்பாவிற்கு அவன் பிடிக்காதவன் ஆகிவிட்டான். எதற்கு என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு நாளிரவு அவனையும் அப்பா காதில் ரத்தம்வரச் செய்திருந்தார்
“தெக்குபஜார்ல சவாரி ஏற்றிகிட்டு இருக்கும் போது உங்கப்பா ஜீப்ல இருந்து என்னைக் கூப்பிட்டிருக்கார். எனக்குக் காது கேட்கலை. அந்தக் கோவம் தான்“ என்று சாந்தாவிடம் சொன்னான் ஈஸ்வர்.
“அதற்காக இப்படியா அடிப்பார்கள்“ என்று அவளுக்கு ஆத்திரமாக வந்தது. அன்றிரவு அப்பா வீடு திரும்பிய போது அவள் சண்டையிட்டாள். அப்பா ஒரு வார்த்தை பதில் பேசவில்லை.
ஆனால் மறுநாள் காலை ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த ஈஸ்வரை அழைத்து “இனி நீ என்னோட மாப்பிள்ளை இல்லை. எங்க வீட்ல இருக்ககூடாது. ஊரைவிட்டு போயிறணும்“ மிரட்டி அனுப்பி வைத்தார்.
ஈஸ்வர் அப்படிச் செய்யவில்லை. வீட்டிற்கு வந்து சாந்தாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டு என்ஜிகே நகரிலிருந்த தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துப் போனான். அன்றிரவு அவர்கள் வீட்டுவாசலில் அப்பாவின் போலீஸ் ஜீப் வந்து நின்றது.
குடிவெறியுடன் அப்பா வாசலில் நின்று கத்தினார்
“சாந்தா. ஏய் நாயே வெளியே வாடி“
சாந்தா வெளியே வரப் பயந்தாள். ஆனால் ஈஸ்வர் கதவை திறந்து வெளியே வந்து கேட்டான்
“ஏன் மாமா தேவையில்லாமல் பிரச்சனை பண்ணுறீங்க“
“யாருடா மாமா. ஈனப்பயலே“ என்று அவனது சட்டையைப் பிடித்து இழுத்துத் தரையில் தள்ளினார். சாந்தா வெளியே வந்து அப்பாவை தடுக்க முயன்றாள். அவளுக்கும் அடி விழுந்தது. தெருவிலிருந்தவர்கள் கூடிவிட்டார்கள். ஈஸ்வருக்கு நிறைய அடி. சாந்தாவிற்கு வேறு வழிதெரியவில்லை. அப்பாவின் ஜீப்பில் போய் ஏறிக் கொண்டாள். அத்தோடு அவரது கோபம் தணிந்துவிட்டது.
அதன் பிறகு ஈஸ்வரை அவள் பார்க்கவில்லை. ஊரைவிட்டே போய்விட்டதாகச் சொன்னார். இது நடந்து பத்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அதன்பிறகு சாந்தா தனியே வசித்தாள். அப்பா தினமும் மதிய சாப்பாட்டுக்கு மட்டும் அவளது வீட்டிற்கு வரத் துவங்கினார்.. மாசம் அவரது சம்பளத்தில் ஒரு பகுதியை அவளுக்குக் கொடுத்தார்.
அவளால் அப்பாவை வெறுக்க முடியவில்லை. சில சமயம் அப்பாவிற்குத் தெரியாமல் ரயிலேறி ஒடிவிட்டால் என்ன. மும்பையில் அண்ணன் இருக்கிறானே என்று யோசிப்பாள். அப்பா ஒருவேளை அங்கேயும் தேடிவந்துவிடுவார் என்ற பயமும் இருந்தது. அப்பாவை யாராலும் மாற்ற முடியாது. தண்ணீரால் இரும்பை வளைக்க முடியுமா என்ன.
••

திருமலைக்குமரன் புளியங்குடியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தபோது தான் ஸ்ரீவித்யா சொர்ணமகால் கொள்ளை நடந்தது. அதை விசாரிக்கும் போது தான் கோலப்பனை முதன்முறையாகப் பார்த்தார். அவன் ஒரு ஜாடையில் ஈஸ்வரைப் போலிருந்தான். அதே போல நெற்றியில் மெல்லிய திருநீறு. மெலிந்த உருவம். நகைக்கடையில் பணியாளராக இருந்தான். நம்பிக்கையான பணியாளர் என்று முதலாளி மாணிக்கம் சொன்னார். ஆனாலும் அவனை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போனார்.
“பேண்ட் சட்டையைக் கழட்டிட்டு ஜட்டியோட நில்லு. “ என்றார் திருமலைக்குமரன்
“நான் ஒரு தப்பும் பண்ணலை சார்“ என்றான் கோலப்பன்.
“முகரையைப் பாத்தாலே தெரியுதே“ என்று லத்தியால் காலோடு அடித்தார். அவன் வலி தாங்க முடியாமல் துடித்துப் போனான்.
“திருடுன நகையை எங்கே வச்சிருக்கே. உன் கூட்டாளிகள் யாரு. சொல்றா“ என்று கேட்டார் திருமலைக்குமரன்
“எனக்குத் தெரியாது சார். நான் ஒரு தப்பும் பண்ணலே“ என்று மன்றாடினான் கோலப்பன். மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டியபடியே அவனை மாறி மாறி அடிக்க ஆரம்பித்தார் .சூடான தேநீர் குவளைக்குள் சிலந்தி விழுந்துவிட்டது போலிருந்தது அந்தக் காட்சி. அடி தாங்க முடியாமல் கோலப்பன் அலறினான். தன் வாழ்நாளில் அவ்வளவு அடிகளைக் கோலப்பன் வாங்கியதில்லை. ஆத்திரத்தில் டேபிள் வெயிட்டால் அவனது சுண்டுவிரலை ஒடித்து விட்டார் திருமலைக்குமரன். ஸ்டேஷன் சுவர்கள் அவனது அலறலைக் குடித்தபடியே உறைந்து போயின
அன்று மாலை கோலப்பனின் மனைவியும் அவனது தம்பி கிட்டுவும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். அடிபட்டு கோலப்பன் ஜட்டியோடு தரையில் கிடப்பதைக் கண்ட அவனது மனைவி அமுதா அழுதாள். கிட்டு இன்ஸ்பெக்டரோடு வாக்குவாதம் செய்தான்.
“இன்னும் விசாரணை முடியலை. நாளைக்கு விட்ருவோம்“ என்றார் திருமலைக்குமரன்.
மறுநாள் கிட்டு உள்ளூர் பத்திரிக்கை நிருபர் ஐசக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போனான்.
ஐசக் கோலப்பனைப் பற்றி விசாரித்த போது இன்ஸ்பெக்டர் சொன்னார்
“கோலப்பன் திருடுனதை ஒத்துக்கிட்டான், நாளைக்குக் கோர்ட்ல ஹேண்ட் ஓவர் பண்ணப் போறோம். “
“அடிதாங்காம பொய் சொல்லிருப்பான் சார்“ என்றான் ஐசக்
“அப்படித்தானு வச்கிக்கோ“ என்று சொல்லிச் சிரித்தார் திருமலைக்குமரன்
மறுநாள் கோலப்பனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிக மோசமாகச் சித்ரவதை செய்ததாகப் பேப்பரில் செய்தி வெளியாகியிருந்தது. அன்று காலை பத்துமணிக்குக் கோலப்பனை ஸ்டேஷனிலிருந்து விடுவித்தார்கள்.
உடல் முழுவதும் காயமான கோலப்பன் மருத்துமனையில் அனுமதிக்கபட்டான். இரண்டு நாட்கள் மருத்துவசிகிட்சை எடுத்த பின்பு வீடு திரும்பினான். மூன்றாம் நாள் விடிகாலையில் கோலப்பனின் வீடு தேடிவந்த திருமலைக்குமரன் குற்றவாளி பிடிப்பட்டான் என்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் கோலப்பனை கைது செய்வதாகச் சொல்லி இழுத்துக் கொண்டு போனார்.
கோலப்பனின் மனைவி மன்றாடினாள். பிடறியோடு அடித்து அவனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போனார் திருமலைக்குமரன்.
அது தான் அவள் கோலப்பனைக் கடைசியாகப் பார்த்தது
இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பின்பு கோலப்பன் புளியந்தோப்பிற்குள் நிர்வாணமாகச் செத்துகிடப்பதைக் கண்டார்கள். முகம் சிதைந்து போயிருந்த்து. கோலப்பனை இன்ஸ்பெக்டர் அடித்துக் கொன்றிருக்க வேண்டும் என்று கிட்டு ஆவேசப்பட்டான். ஆட்களைத் திரட்டி வந்து ஸ்டேஷன் முன்பு போராட்டம் செய்தான். பத்திரிக்கைகளில் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தான் கோலப்பனை கைது செய்யவேயில்லை என்று மறுத்தார் திருமலைக்குமரன். நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. அவர்களால் கோலப்பன் கொல்லபட்டதை நிரூபிக்க முடியவில்லை. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட திருமலைக்குமரன் நீதிமன்ற வெற்றிக்கு பிறகு மீண்டும் பணி அமர்த்தப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் பற்றி அவர் கவலைப்படவேயில்லை.
சாந்தா பத்திரிக்கைகளில் வெளியான கோலப்பனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள். ஈஸ்வர் போன்ற முகச்சாடை. அது தான் அப்பாவிற்கு அவனைப் பிடிக்காமல் போனதற்குக் காரணமாக இருக்குமோ. அப்பாவி ஒருவனை இப்படிச் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறாரே என்று ஆத்திரமாக வந்தது. கோலப்பனின் மனைவியை நினைத்து வருந்தினாள்.
திருமலைக்குமரன் எந்தப் பிரச்சனையும் இன்றிப் பணி ஒய்வு பெற்றார்.
••

அதன்பிறகான நாட்களில் திருமலைக்குமரன் பகலிலே குடிக்க ஆரம்பித்தார். நாள் முழுவதும் குடி. மூன்று வேளையும் அசைவ உணவு. சில நாட்கள் படுக்கையிலே வாந்தி எடுத்து வைத்திருந்தார். சாந்தாவால் அவரைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அப்படியே போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை. அரூபமான கயிறு ஒன்றை அவரோடு தன்னைப் பிணைத்திருப்பதாகச் சாந்தா உணர்ந்தாள்.
ஒரு நாள் போதையில் இருந்த திருமலைக்குமரன் தனது அறையின் மூலையில் கோலப்பன் அமர்ந்திருப்பதைக் கண்டார். உதடுகிழிந்த நிலையில் அவன் இரண்டு கைகளையும் கூப்பியபடி தன்னை விட்டுவிடும்படி மன்றாடினான்
“நீ தான் செத்துப்போயிட்டயே. இன்னும் என்னடா வேணும்“ என்று கேட்டார் திருமலைக்குமரன்
“என்னை விட்ருங்க. சார் நான் நிரபராதி “என்றான். கோலப்பன்
“எந்த மயிரானா இருந்தாலும் செத்துட்டா ஒண்ணு தான். என்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. நீ போயிடு“ என்று கத்தினார். அவன் அவரை நோக்கி நெருங்கி வருவதாக உணர்ந்தார். ஆத்திரத்தில் அவனை ஒங்கி எத்துவதற்கு முயன்று தடுமாறி கிழே விழுந்தார். அவரது இடுப்பில் புட்டத்தில் அடிபட்டது தான் மிச்சம்.
அதன்பிறகான நாட்களில் கோலப்பன் எப்போதும் தன் அறையில் இருப்பதாக அவர் உணர்ந்தார். கோலப்பனை வெளியே விரட்டுவதற்காகக் கெட்டவார்த்தைகளில் கூச்சலிட்டார். அவனைப் பார்க்க கூடாது என்று கண்களை மூடிக் கொண்டார். இதன் உச்சமான ஒரு நாளில் தான் அவருக்குப் பக்கவாதம் வந்த்து. கையும் காலும் இழுத்துக் கொண்டுவிட்டன.
அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் அப்படியே சாவதற்கு விட்டுவிடலாமா என்று கூடச் சாந்தா யோசித்தாள். ஆனால் மனது கேட்கவில்லை. ஆறுமாதங்கள் மருத்துமனையில் இருந்தார். பின்பு கேரள வைத்தியசாலை ஒன்றில் நாற்பது நாட்கள் சிகிட்சை எடுத்துக் கொண்டார். முடங்கிய கைகால்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
வலது கையிற்குப் பதிலாக இடது கையால் சோற்றை அள்ளிச் சாப்பிட ஆரம்பித்தார். நோயுற்ற நிலையிலும் அவரது கோபம் மாறவேயில்லை. தன்மீதே அவர் அதிகம் கோபம் கொண்டார். தன்னையே கெட்டவார்த்தைகளில் திட்டிக் கொண்டார். அதன்பின்பு நாள் முழுவதும் தனக்குத் தானே பேசிக் கொள்பவராக மாறிப்போனார்.
கோலப்பனைக் கொன்ற குற்றபோதத்திலிருந்து விடுபட அவனது மனைவி பிள்ளைக்கு ஆளுக்கு இரண்டு லட்சம் தரும்படி கான்ஸ்டபிள் விராடத்திடம் பணம் கொடுத்து அனுப்பினார். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தனது பூர்வீக நிலத்தை அவர்கள் பேரில் பத்திரம் எழுதி வைப்பதாகப் பேசி பார்த்தார். அதையும் ஏற்கவில்லை.
••
அது நிச்சயம் ஒரு கனவாகத் தானிருக்கும். விடிந்து எழுந்தவுடன் சாந்தாவை அழைத்துச் சொன்னார்
“சாந்தா அந்தக் கோலப்பன் வீட்டுக்கு நீ ஒரு தடவை போயிட்டு வரணும்“
“எதுக்குப்பா“
“அவங்க வீட்ல நான் ஒரு வாய் சாப்பிடணும்“
“உங்களுக்கு எப்படிச் சோறு போடுவாங்க. நீங்க தானே கோலப்பனைக் கொன்னீங்க“.
“அது என் தப்பு தான். அதுக்குத் தான் கைகால் முடங்கிப்போச்சே. கோலப்பன் பொண்டாட்டி எனக்கு மாப்பு தரணும் “
“எப்படி மன்னிக்க முடியும். ஒரு நாளும் மன்னிக்க மாட்டா“
“நானும் அப்படிதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நேத்து சொப்பனத்துல கோலப்பன் என்னை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனான். அவன் பொண்டாட்டி பெரிய வாழை இலையில சோறு போட்டா. அதை ஒரு வாய் சாப்பிட்டதும் என் கைகால் சரியாகிருச்சி. “
“சொப்பனத்துல தான் அப்படி நடக்கும். நிஜத்தில நீங்க செய்த காரியத்தை மன்னிக்கவே முடியாது“
“கோலப்பன் பொண்டாட்டி என்னை மன்னிருச்சிருவானு தோணுது. நீ அவங்க வீட்ல போயி கேட்டுபாரேன்“
“என்னாலே முடியாதுப்பா“..
அன்றிலிருந்து அப்பா தனது மீட்சி என்பது கோலப்பன் மனைவி கையால் தரும் சோறு என்று நம்பத் துவங்கினார். அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தார். நாளடைவில் சாந்தாவும் அதை நம்ப ஆரம்பித்தாள். ஒருவேளை அவர்கள் மன்னித்துவிட்டால் அப்பாவிற்குக் கைகால் சரியாகிவிடும் என்று நினைத்தாள். ஆனால் கோலப்பனின் வீடு தேடிப் போய்க் கேட்கும் தைரியம் வரவில்லை.
••
சித்திரை பிறப்பதற்கு இரண்டு நாட்களிருந்தன. ஆனால் அதற்குள் வெயில் ஏறியிருந்தது. கோலப்பனின் மனைவி வீட்டுவாசலில் வந்து நிற்கும் பெண்ணைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவப்பு ஒடு வேய்ந்த அந்த வீடு சிறியதாக இருந்தது. வாசலில் நாலைந்து கோழிகள் தரையைக் கொத்திக் கொண்டிருந்தன. இரண்டு வீடுகள் தள்ளி கட்டியிருந்த ஆடு விட்டுவிட்டுச் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. தெருவில் வேறு நடமாட்டமில்லை.
“நீங்க ஆருனு தெரியலை“ என்று கேட்டாள் அமுதா
“என் பேரு சாந்தா… இன்ஸ்பெக்டர் திருமலைக்குமரன் மக. “
அந்தப் பெயரைக் கேட்டதும் அவளது முகம் இறுக்கமானது. காலில் மலத்தைக் மிதித்தவள் போல அசூயையானாள்.
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். “ என்றாள் சாந்தா
“அவரை கொன்னது போதாதா. எங்களையும் கொல்லணுமா. “. என்று முகத்தில் அடிப்பது போலக் கேட்டாள் அமுதா.
வெளியே நின்றபடியே சாந்தா தனது தந்தையின் ஆசையைப்பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டதும் அமுதாவிற்கு ஆத்திரமாக வந்தது.
“என்ன நெஞ்சழுத்தம் இருந்தா. வீடு தேடிவந்து என்புருஷனை கொன்னவனுக்குச் சோறு போடுனு கேட்பே. `உங்க அப்பாவுக்கு நல்லசாவு வராது பாத்துக்கோ“ என்று அமுதா சாபமிட்டாள்.
சாந்தா எப்படியாவது பேசி அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பது போலத் தணிவாகப் பேசினாள்.
“நான் செத்தாலும் அது நடக்காது. “என்று சொல்லி வீட்டிற்குள் உள்ளே போய்க் கதவை ஒங்கி சாத்தினாள் அமுதா.
சாந்தா அந்த மறுப்பை எதிர்பார்த்திருந்தாள். ஆகவே ஊர் திரும்பும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டு வந்தாள். நானாக இருந்தாலும் அப்படித் தான் நடந்திருப்பேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்
ஆனால் இந்த மறுப்பு என்றாவது விலகக்கூடும் என்று சாந்தா நம்பினாள். வாரம் ஒருமுறை அவர்கள் வீடு தேடிப் போய் நின்றாள். கோபத்தையும் வெறுப்பையும் ஏற்றுக் கொண்டு அமைதியாக வீடு திரும்பினாள். அப்பாவிற்காகத் தான் ஏன் மன்றாடுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
••
பதினாறு வாரங்களுக்குப் பிறகு கோலப்பனின் தம்பி கிட்டு அவளது வீடு தேடி வந்திருந்தான். தலைகவிழ்ந்தபடியே சொன்னான்.
“வெள்ளிகிழமை உங்க அப்பாவை எங்க வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைச்சிட்டு வாங்க. “
“நிஜமாவா சொல்றீங்க“
“நல்லா யோசிச்சு பாத்து தான் முடிவு பண்ணிருக்கோம்“.
“ நீங்களே இதை எங்கப்பா கிட்ட சொல்ல முடியுமா“
“அது முடியாது. அவரை நேர்ல பாத்தா மனசு கேட்காது. வேண்டாம்னு போயிடுவேன். உங்க மனசுக்கு தான் இதை ஒத்துகிட்டு இருக்கோம்“
“நான் அவரைக் கூட்டிட்டு வர்றேன்“
கிட்டு போனபிறகு அவள் அப்பாவின் அறைக்குள் போனாள். அவர் கற்பனையாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
“நாம வெள்ளிகிழமை கோலப்பன் வீட்டுக்கு சாப்பிடப் போறோம்“ என்றாள்
கோலப்பன் கைகூப்பியதைப் போலவே அப்பா தனது இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்
••
வெள்ளிகிழமை காலையில் அப்பாவிற்குப் புது வேஷ்டி சட்டை மாற்றிவிட்டாள். டாக்சியில் அவரை ஏற்றி உட்கார வைப்பதற்கு இரண்டு பேர் தேவைப்பட்டார்கள். பின்சீட்டில் அப்பாவுடன் சாந்தா உட்கார்ந்து கொண்டாள். முன்சீட்டில் அப்பாவோடு வேலை பார்த்த கான்ஸ்டபிள் உத்திராடம் உட்கார்ந்து கொண்டார். இரண்டு மணி நேரப் பயணமது.
அவர்கள் கோலப்பனின் வீடு போய்ச் சேரும்வரை ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. பின்னோக்கி ஒடும் மரங்களைப் போல நடந்த விஷயங்கள் அவள் மனதில் ஒடிக் கொண்டிருந்தன.
அப்பாவின் கண்கள் எதையும் பார்க்கவில்லை. அவர் வாயிலிருந்து வழியும் எச்சிலை கூடத் துடைத்துக் கொள்ளவில்லை. அவரது கைகள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தன.
••

கோலப்பனின் வீட்டுவாசலில் கிட்டு நின்றிருந்தான். உத்ராடமும் சாந்தாவும் அவரை வீட்டிற்குள் கொண்டு போய் உட்கார வைத்தார்கள். கோலப்பனின் மனைவி அமுதாவை அப்பாவின் கண்கள் தேடின. அவளைக் காணவில்லை
சிறிய சமைலறை. தண்ணீர் பானை வைக்கும் மேடை. தரையில் மூன்று இலைகள் போடப்பட்டிருந்தன. அப்பாவை ஒரு இலையின் முன்னால் உட்காரவைத்தார்கள். கோலப்பனின் மனைவி வாழைக்காய் புட்டு, அவரைக்காய் பொறியல் வைத்திருந்தாள். சோற்றை அப்பாவின் இலையில் போடும்போது அமுதாவின் கைகள் நடுங்குவதைச் சாந்தா கண்டாள். அப்பா அவளை ஏறிட்டு பார்க்கவில்லை.
அப்பா இலையைப் பார்த்தபடியே குனிந்திருந்தார். சாம்பாரை சோற்றில் ஊற்றியபோது இடது கையால் அப்பா சோற்றைப் பிசைந்தார். சாம்பார் இலையில் வழிந்தோடியது.
அப்பா சோற்றை ஒரு கவளம் அள்ளிவாயில் வைக்க முயன்றபோது தாங்க முடியாத வேதனையை வெளிப்படுத்துவது போலச் சப்தமாக அழுதார். வாயிலிருந்த சோறு தெறித்தது. எச்சில் ஒழுக அப்பா அழுது கொண்டிருந்தார். கோலப்பனின் மனைவி அவரை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்
“என்னை மன்னிச்சிடும்மா“ என்று அப்பா நடுங்கும் குரலில் சொன்னதைக் கேட்டபோது அமுதாவிற்கும் கண்கலங்கியது.
அப்பாவின் சட்டையில், தாடையில் வேஷ்டி நுனியில் சோறு ஒட்டிக் கொண்டிருந்தது. அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உத்திராடம் அமைதியாகச் சோற்றை வாயிலிட்டபடியே சொன்னார்
“எல்லாம் சரியாகிருச்சி. சாப்பிடுங்க“
அப்பாவால் சோற்றைக் கையில் அள்ளிச் சாப்பிட முடியவில்லை.
“அழுகாம சாப்பிடுங்க“ என்றாள் கோலப்பனின் மனைவி அமுதா..
அப்பா அவளைப் பார்த்து எச்சிற்கையோடு வணங்கினார். அதைக் கண்ட போது சாந்தாவிற்கும் கண்கள் கலங்கின.. இப்படி அப்பா யாரையும் வணங்கியதாக அவளது நினைவில் இல்லை. அவளும் அமுதாவை நோக்கி கைகளைக் கூப்பினாள். அவர்கள் இருவரையும் பார்க்காமல் அமுதா முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுவது அவளுக்கு என்னவோ செய்தது.
••