கவிஞனின் ஒரு நாள்

அகழ் இணைய இதழில் என்னுடைய ஒரு நாள் என்று மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழாக்கம் செய்திருப்பவர் அழகிய மணவாளன். சரளமான, நேர்த்தியான மொழியாக்கம். கல்பற்றா நேரடியாகத் தமிழில் எழுதியது போலிருக்கிறது.

நான் கல்பற்றா நாராயணன் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை மிகவும் பிடிக்கும். மலையாளத்தின் முக்கியக் கவிஞர் என்பதாக மட்டுமின்றிச் சர்வதேச அளவிலான முக்கியக் கவிஞர்களில் ஒருவராகவே அவரைக் கருதுகிறேன்.

அவரது இத்ரமாத்ரம் நாவல் சுமித்ரா என ஷைலஜா மொழியாக்கத்தில் தமிழில் வெளியான போது அதற்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறேன். கவிஞர்கள் புனைவு எழுதும் போது உரைநடை பாதரசம் போலாகி விடுகிறது. அப்படியான நாவல் தான் சுமித்ரா.

தனது கவிதைகளைப் போலவே கட்டுரையிலும் கல்பற்றா ஒளிருகிறார். அவரது மொழிநடை நிகரற்றது. இந்தக் கட்டுரை அவரது ஒரு நாளைப் பதிவு செய்துள்ளது. அதற்குள் எத்தனை மடிப்புகள். வியப்புகள்.

கிரிக்கெட் பற்றிய ஆர்வம். கவிதை வாசிப்பு. தாவோ, காலை நடை, பேரனுக்கு மொழி கற்றுத்தருவது. தோசையின் ருசி. ஒளப்பமண்ண கவிதை என மலர் விரிவது போலத் தன்னியல்பாக அவரது அன்றாடம் விரிகிறது. இக்கட்டுரையின் ஒரு இடத்தில் பேரன் இருக்கிறான் என்றால் அந்த இரவில், காவலாளிகள் உறங்கினால்கூடச் சித்தார்த்தனால் வீட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்காது. என்றொரு வரியை கல்பற்றா எழுதியிருக்கிறார்.  யோசிக்கவும் வியக்கவும் வைத்த உண்மையான வரியது.

விளையாட்டுவீரர்களும், அவர்களின் உறவினர்களும் இறந்துவிட்டால் அந்தத் தகவல் செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தில்தான் வருகிறது என்பது வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று நினைக்கும் என்னை மயிர்க்கூச்செறிய வைக்கிறது என்றொரு அவதானிப்பை கல்பற்றா வைக்கிறார்.

விளையாட்டுப் பக்கம் என்பது கவிதையைப் போல முழுமையான தனியுலகம். அங்கே விளையாட்டுவீரனின் வெற்றி தோல்வி மட்டுமில்லை. அவனது சுகதுக்கங்களும் பேசப்படுவது சரியானது தான்.

வெறும் கையுடன் காலை நடை சென்றுவிட்டு கவிதையுடன் திரும்பி வரும் அனுபவத்தை இவரைப் போலவே மேரி ஆலிவரும் எழுதியிருக்கிறார். கவிதை எங்கோ நாம் அறியாத மரத்தில் பழத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும். கவிஞர்கள் மட்டுமே அதைக் காணுகிறார்கள். பறித்துக் கொள்கிறார்கள்.

காலை எழுந்தவுடன் கவிதை. இரவில் கதைகள் என்ற கல்பற்றாவின் வாசிப்பைத் தான் நானும் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் அவர் எனக்குத் தோழன்.

அழகிய மணவாளன்

அழகிய மணவாளன் சமீபமாக மலையாளத்திலிருந்து செய்து வரும் மொழியாக்கங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக அவர் தேர்வு செய்யும் படைப்புகள். அதன் கவித்துவம் குறையாமல் மொழியாக்கம் செய்ய முயலும் விதம் பாராட்டிற்குரியது.   அகழ் இதழில் வெளியாகியுள்ள அவரது பிற மொழிபெயர்ப்புகளையும் தேடி வாசித்தேன். மிக முக்கியமான மொழியாக்கங்கள்.

தேர்ந்த படைப்புகளை வெளியிட்டு வரும் அகழ் இணைய இதழிற்கும் அழகிய மணவாளனுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இணைப்பு

0Shares
0