காந்தியின் நிழலில்.

மாலதி செந்தூர் தெலுங்கு மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது இதய நேத்ரி என்ற நாவல் தமிழில் இதய விழிகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கிறது

காந்தி யுகத்தை இத்தனை துல்லியமாக இதுவரை எந்த நாவலும் சித்தரித்ததில்லை. மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். நேரடியாகவே கதை சொல்லப்படுகிறது. பல்வேறு அரசியல் செய்திகள் உரையாடலின் வழியே வெளிப்படுகின்றன. காந்தியின் தாக்கம் ஆந்திர மக்களிடம் எவ்வாறு இருந்தது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது.

பால்ய விவாகத்திற்கு எதிரான சட்டம். விதவை மறுமணம். ஹரிஜன் முன்னேற்றம். பெண் கல்வி, பெஜவாடா காங்கிரஸ், உப்புச் சத்தியாகிரகம். பகத் சிங் சிறைத்தண்டனை என இந்திய அளவில் நடைபெற்ற அத்தனை முக்கிய விஷயங்களையும், போராட்டங்களையும் நாவல் தொட்டுப் பேசுகிறது.

உண்மையான நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் மாலதி. நிறைய நேரம் அடுத்த பக்கத்தைப் புரட்ட முடியாதபடி மனம் கனத்துப் போய்விடுகிறது.

நாவலின் முக்கியக் கதாபாத்திரம் கோபால்ராவ். அவன் மெட்ரிக் படித்து முடிக்கும் முன்பே திருமணம் பேசி விடுகிறார்கள். அவன் பள்ளி வயதிலே காந்தியை நேரில் பார்த்தவன். காந்திய வழியில் நடப்பவன். அவனது மாமா ஒரு காந்தியவாதி. அவர் திருமணத்தின் போது ஊர்வலத்திற்குச் செய்யும் செலவிற்குப் பதிலாக ஹரிஜன் நிதிக்கு நூறு ரூபாய் தரும்படி மாமனாரிடம் கேட்கச் சொல்கிறார். கோபாலும் கேட்கிறான். இது புதிய விஷயமாக இருக்கிறதே என ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். கோபாலின் திருமணமும் அதையொட்டி நடக்கும் சடங்குகளும் விருந்தும் கொண்டாட்டமும் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது

பெஜவாடா காங்கிரஸிற்காக ரயிலில் வரும் காந்தியைக் காணத் திரண்டிருக்கும் கூட்டமும். காந்தியின் வருகையும் ஒரு ஆவணப்படம் போலவே சித்தரிக்கப்படுகிறது

இன்னொரு பக்கம் காந்தி தண்டி யாத்திரைக்குப் புறப்பட்ட போது இந்தியாவின் பல்வேறு மூலையிலிருந்தும் மக்கள் எப்படி உடன் பயணிக்கப் புறப்பட்டார்கள் என்பதையும் நாவல் விரிவாக விளக்குகிறது

ராட்டை நூற்பது. காந்திய வழியில் வரிகொடாமை இயக்கம் நடத்துவது. அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருப்பது போன்றவற்றைக் கிராம மக்கள் அறநெறியாகக் கடைப்பிடிக்கிறார்கள். வரி கொடாமையின் போது ஒரு ஊரே காலியாகிறது. அத்தனை பேரும் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு ஊரை விட்டு வெளியேறிப் போகிறார்கள். ஒரு வருஷம் போராடி, வரி ரத்து செய்யப்பட்ட பிறகே ஊருக்குத் திரும்புகிறார்கள்

கோபால் ராவின் மனைவி பார்வதி. படித்த பெண். ஆங்கிலம் தெரியும்.  திருமணத்தின்பின்பு  அவர்களுக்குள் நடக்கும் முதல் உரையாடல் மிக இனிமையானது..

காசியில் கோபால்ராவ் கல்லூரியில் படிப்பது. உடன் பயிலும் ஹரிஜன இளைஞன், அவர்களுக்குள் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் பற்றிய விவாதங்கள் என்று ஒட்டுமொத்த இந்தியாவின் அன்றைய மனநிலையை நாவல் சித்தரிக்கிறது.

வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிச் சிறைப்பட்டு இன்னல்களை அனுபவித்து வெளியே வருகிறான் கோபால்ராவ். தோற்றம் நலிந்துவிடுகிறது. ஆனாலும் குமாஸ்தா வேலைக்குப் போய்ச் செட்டில் ஆக அவன் விரும்பவில்லை. சிறை வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மேலும் அவனைப் போராடவே தூண்டுகிறது. ஆகா கான் மாளிகையில் கஸ்தூரி பாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் இறப்பு, இதனால் காந்தி அடைந்த துயரம் போன்றவற்றை ஒரு நாவலில் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் உணர்ச்சிப்பூர்வமானது.

ராஜாஜி மந்திரி சபை அமைத்து மதராஸ் ராஜஸ்தானியில் புதிய மாற்றங்கள் செய்கிறார். வெள்ளையர்கள் இல்லாத இந்தியர்களின் அரசு என்னவெல்லாம் நல்ல காரியங்களைச் செய்யும் என்பதை மக்கள் நேரடியாக உணருகிறார்கள்.

நாவல் முழுவதும் பெண்கள் தைரியமாக, தீவிரமாக அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். காந்திய வழியில் நடந்த தியாகிகள் பலரும் நோயுற்றுக் கவனிப்பார் இல்லாமல் இறந்து போன சோகத்தையும் நாவல் பதிவு செய்கிறது.

மாலதி செந்தூர் 1930 இல் கிருஷ்ணா மாவட்டத்தின் நுசிவேடு என்ற ஊரில் பிறந்தார். அவரது கணவர் செந்தூர் நாகேஸ்வர ராவ் ஒரு எழுத்தாளர். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் மாலதி..

கணவர் கொடுத்த உத்வேகத்தால் மாலதி எழுதத் துவங்கினார். அத்தோடு அகில இந்திய வானொலியில் தனது கதைகளைப் படிக்கத் தொடங்கினார். ஆந்திர பிரபா பத்திரிகை அவரை எழுத அழைத்தது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்தி எழுதி வந்திருக்கிறார்.

மாலதி செந்தூர்  26 நாவல்களை எழுதியிருக்கிறார். லியோ டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, டிக்கன்ஸ், விக்டர் ஹியூகோ எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களைத் தெலுங்கில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் ஹிருதய நேத்ரி நாவலுக்கு இவருக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.சென்னை மைலாப்பூரின் லஸ் கார்னரில் வசித்த நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்

ஜெயகாந்தன் கதைகளைத் தெலுங்கில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு நோயுற்ற நிலையில் மாலதி செந்தூர் சென்னையில் இறந்து போனார்.

இதய விழிகள் என்ற நாவலைச் சாந்தா தத் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இருநூறு பக்கங்களே கொண்ட சிறிய நாவல் ஆனால் அரிய ஆவணப்படம் போலக் காலத்தின் பின்னால் நம்மை அழைத்துச் சென்று சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைக் கண் முன்னே நிழலாடச் செய்கிறது

பிரம்மாண்டமான வரலாற்று நிகழ்வுகளை சிறிய நாவலுக்குள் கச்சிதமாக எழுதிக்காட்டியிருப்பதே மாலதி செந்தூரின் படைப்பாற்றல்.

••

0Shares
0