காலைக் குறிப்புகள் 1 தெற்கிலிருந்து வரும் குரல்

அன்றாடம் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து சிறிய குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எனது வழக்கம். அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து தரலாம் என நினைத்து வெளியிடுகிறேன். இவை டயரிக்குறிப்புகள் இல்லை. வாசித்தவுடன் மனதில் தோன்றும் எண்ணங்கள்.

சில நேரம் ஒரு வரியோ, ஒற்றை நிகழ்வோ, கருத்தோ மனதில் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். சில நேரம் படித்த விஷயத்தோடு தொடர்புடைய  பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்லும் மனதின் அலைபாய்தலைப் பதிவு செய்து கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள்.

••

வில்லியம் சரோயன் தனது நேர்காணலில் அமெரிக்காவின் தெற்கிலிருந்து வரும் படைப்பாளிகள் தனித்துவமானவர்கள். தெற்கிற்கெனத் தனியொரு மரபிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். அமெரிக்க இலக்கிய மரபில் தெற்கின் இடம் பற்றிய அவரது அவதானிப்பு எனக்குத் தமிழகத்தின் தெற்கிலிருந்து தொடர்ந்து ஒலிக்கும் இலக்கியக் குரல்கள் மீதான கவனத்தை ஏற்படுத்தியது. இது வெறும் வட்டார மனநிலையில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து இலக்கியம் எவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது என்பதன் கவனம் மட்டுமே.

தொன்று தொட்டு தெற்கிலிருந்து மகத்தான படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். தெற்கிலிருந்து உருவாகி வரும் படைப்பாளிகளுக்கெனத் தனித்துவமான கதை சொல்லும் முறையும் மொழி நடையுமிருக்கிறது. கரிசல் கதைகளைக் கி.ரா தொகுக்கும் போது அதை முழுமையாக உணர்ந்திருக்கிறார். தெற்கின் கதை மரபில் கரிசல் ஒரு பிரதான வகை. அதில் தான் எத்தனை விதமான படைப்பாளிகள். எவ்வளவு அசலான படைப்புகள். தெற்கின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதும் ஓங்கி ஒலித்தே வருகிறது.

ஒரு நாவலை வாசிக்கையில் ஒரே நேரம் நாம் பல்வேறு வாழ்க்கையை வாழுகிறோம். அது தான் நாவல் வாசிப்பதற்கான முக்கியக் காரணம் என்கிறார் வில்லியம் சரோயன்.

அது உண்மையே. டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை வாசிக்கும் ஒருவன் பல்வேறு மனிதர்களை, நிகழ்வுகளை. வரலாற்றின் பேரியக்கத்தைக் கண்முன்னே காணுகிறான். பேராறு ஒன்றில் நீந்துவது போன்ற அனுபவமது.

கதாபாத்திரங்களும் கதையும் ஒரு சேர வளர வேண்டும்.. பல நேரம் கதை வளர்ந்து போய்க் கொண்டேயிருக்கும் ஆனால் கதாபாத்திரம் அப்படியே இருக்கும். அது போன்ற நாவல்கள் வெற்றியடைவதில்லை என்கிறார்.

நாவலின் எழுத்தாளனும் அதன் வாசகனே. அவன் தன் நாவலை முழுமையாகத் திட்டமிட்டு எழுதுவதில்லை. பாதித் தெரிந்தும் பாதித் தெரியாமலும் எழுதுகிறான். கதாபாத்திரம் கற்பனையா, நிஜமா எனக்கேட்டால் எழுத்தாளனால் சரியான பதிலைச் சொல்ல முடியாது. எவ்வளவு கற்பனை எவ்வளவு நிஜம் என்று வேண்டுமானால் சொல்ல முடியும். காரணம் நிஜமான மனிதர்களை அப்படியே யாரும் எழுதிவிட முடியாது

எழுத்தாளர்களுக்குள் இருக்கும் சண்டையும் போட்டியும் காலம் காலமாகத் தொடரும் விஷயம். ஆனால் அதைத் தாண்டி எழுத்தாளர்கள் நட்புறவுவோடு தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஹெமிங்வேயுடன் அவரது சமகால எழுத்தாளர்களுக்கு நல்ல நட்பு இருந்தது.  டால்ஸ்டாயைத் தேடிச் சந்தித்திருக்கிறார் செகாவ். கார்க்கி அவரது காலத்துப் படைப்பாளிகள் பலருக்கும் நண்பர். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும் என்கிறார்

பெரிய நகரங்களில் பொழுதுபோக்குவதற்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. பணத்தைச் செலவு செய்ய இயலும். ஆனால் அவை எழுதுவதற்கான இடமில்லை. தனது சொந்த வீட்டின் ஒரு மூலை தான் எழுத்தாளனின் இடம். அங்கிருந்து தான் அவன் தனது உலகை உருவாக்குகிறான். ஆகவே பெரிய நகரங்கள் அலுப்பூட்டுகின்றன. எப்போது பாரீஸிற்குச் சென்றாலும் உடனே ஊர் திரும்ப வேண்டும் என்றே தோன்றுகிறது என்றும் வில்லியம் சரோயன் குறிப்பிடுகிறார்

வில்லியம் சரோயனின் மீசையே அவரது அடையாளம்.அவரது புகைப்படத்தைக் காணும் போது எழுத்தாளர் ந,முத்துசாமியின் மீசை ஏனோ நினைவிற்கு வந்து போகிறது

Every Age has its terrible aches and pains என்ற சரோயனின் வரி மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

••

0Shares
0