ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது.

The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது.
ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் மனது காஷ்மீரையே சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்.

காஷ்மீர் பிரச்சனை சார்ந்து அவரது குரல் காஷ்மீரின் அழகிய நினைவுகளையும் நடப்பு துயரங்களையும் ஊடுருவிச் செல்கிறது. காஷ்மீரத்து மக்களின் அவல நிலையை, துன்பத்தை மிகவும் நுணுக்கமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
சாகித் அலியின் கவிதைகளில் இயற்கை மௌனசாட்சியமாக உள்ளது. பனியும் காற்றும் நிலவும் காஷ்மீர் பிரச்சனைகளின் உண்மையை அறிந்த சாட்சியமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒருவகையில் இந்த இயற்கை தான் அவர்களை ஆற்றுப்படுத்துகிறது என்றும் நம்புகிறார்
அவரது அஞ்சலகம் இல்லாத நாடு என்ற நீள் கவிதையில் அஞ்சலும் அஞ்சலகமும் இயல்பு வாழ்க்கையின் அடையாளமாகச் சுட்டப்படுகின்றன. அஞ்சலகம் மூடப்படும் போது உறவுகள் அறுபட்டுப் போகின்றன. புற உலகத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்படுகிறார்கள். நேசிப்பவர்களின் சொற்களை இழந்துவிடுகிறார்கள். சாகித் அலி கடிதங்களைக் குறியீடாகக் கருதுகிறார். அவற்றின் வழியே சொல்லப்பட்டதைத் தாண்டிய நிறையப் புரிந்து கொள்ளப்படுகிறது. உணரப்படுகிறது என்கிறார்.
ஷங்கர் ராமசுப்ரமணியனை எது சாகித் அலியின் கவிதைகளை நோக்கி இத்தனை ஈர்ப்புக் கொள்ளச் செய்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் ஒடுங்கியுள்ள சொந்த ஊர் மீதான விருப்பம். அம்மா மீதான அன்பு. இழந்து போன உறவு மற்றும் நட்பு குறித்த ஏக்கம் இவையே சாகித்தை மிகவும் தோழமையுடன் அணுகச் செய்திருக்கக் கூடும்.
காஷ்மீரத்து நிலவைப் பற்றிய இந்த கவிதையில் வரும் வெறுங்கை என்ற சொல் இயலாமையின் அடையாளமாகிறது. தொலைபேசி தொடர்பு துண்டிக்கபட்டதும் தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது. சொற்களால் தொடப்பட்ட அந்த நெருக்கத்தை இழந்த உணர்வை அழகாக கவிதை வெளிப்படுத்துகிறது.
••
ஓர் அழைப்பு
– ஆஹா சாகித் அலி
நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை
காஷ்மீரின் குளிர் நிலவு
என் வீட்டை
உடைத்து நுழைந்து
என் பெற்றோரின் காதலைத் திருடுகிறது.
நான் எனது கைகளைத் திறந்து பார்க்கிறேன்:
வெறுங்கை, வெறுங்கை. இந்த அழுகையோ அந்நியமானது.
“நீ எப்போது வீட்டுக்கு வருவாய்?”
அப்பா கேட்கிறார், திரும்பவும் கேட்கிறார்.
சமுத்திரம் தொலைபேசி வடங்களுக்குள் இடம்பெயர்கிறது.
“நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீர்களா?”
நான் கத்துகிறேன்
தொடர்பு மரித்துவிட்டது.
தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது.
கடல் அமைதியாக உள்ளது
அதன் மேலோ
குளிர்ந்த காஷ்மீரின் குளிர் நிலவு.
••
அதிகாலை நான்கு மணி, வேங்கை
– ஆஹா சாகித் அலி
இந்தப் பாழில் பதிக்க
எதுவோ ஒன்று காத்திருக்கிறது
ரோமம் மூடிய
எதுவோ ஒன்று
வெளியே
ஜனவரிப் பனியில்
இன்னமும் உறங்காமல் விழித்திருக்கிறது.
நான் ஜன்னலைத் திறக்கிறேன்:
பத்தாயிரம் மைல்களுக்கப்பால்
குமாவுனின் மலைச்சரிவுகளில்,
ஆட்கொல்லிக்கு அஞ்சி
குடியானவர்கள் வீட்டுக்குள் பூட்டியிருக்க,
அவர்களின் குடிசைகளோ
உறைபனிச் சாந்தால் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ளது.
எனக்கு முன்னால் மேஜையில்
காற்றுப் பக்கங்களைப் படபடக்க வைக்கிறது.
எதுவோ ஒன்று அசையத் தொடங்குகிறது:
கிராமத்தினர் மறுபடியும்
உயிர்ப்புக்குத் திரும்புகின்றனர்,
சூரியனோ அவர்களது குடிசைகளுக்கு
திரும்பவும் ஆடை அணிகளைப் பூட்டுகிறது.
கழுவத்தக்க வைகறையின் ஊதாக்களை
அது கழுவுகிறது.
புத்தகப் பக்கத்துக்கூடாக
எதுவோ ஒன்று அலைந்துலவுகிறது.
நன்றி