குந்தர் கிராஸ் கவிதை

முட்டையினுள்…

தமிழில் :ஆர் சுவாமிநாதன்

••

நாம் முட்டையினுள் வசிக்கிறோம்

ஓட்டின் உட்புறச் சுவரில்

ஒழுங்கற்ற சித்திரங்கள்

நமது விரோதிகளின் முதற் பெயர்கள்

தீட்டி விட்டோம்

நாம் அடைக்காக்கப் போகிறோம்

நம்மை அடைக்காக்கிற யாரோ

நமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள்

முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள்

நம்மை அடைகாக்கிறவர்

படத்தை நாம் உடனே வரைவோம்.

நாம் அடைக்காக்கப் பெறுகிறோம்

என்று நாம் எண்ணிக் கொள்கிறோம்.

நல்ல சுபாவமுள்ள கோழி

ஒன்றை கற்பித்துக் கொள்கிறோம்.

நம்மை அடைகாக்கும் கோழியின்

வர்ணம், வம்சம் பற்றி

பள்ளிக்கூட கட்டுரைகள் எழுதுகிறோம்.

நாம் ஓட்டை உடைப்பது எப்போது?

முட்டை உள்ளிருக்கும் மகான்கள்

அடைகாக்கும் நாள் குறித்து

அற்ப சம்பளத்திற்கு விவாதிக்கிறார்கள்.

நாம் விடுபடும் நாளை அவர்கள்

üகý எனக் குறிக்கிறார்கள்

நிஜமான தேவை, சலிப்பின்

பொருட்டு நாம் அடைகாப்பவனை

கற்பிக்கிறோம்.

முட்டையுள் நமது சந்ததி

குறித்து நாம் கவலை கொள்கிறோம்

நம்மை கவனிக்கும் அவளுக்கு

நமது முத்திரையை

மகிழ்வுடன் சிபாரிசு செய்கிறோம்.

ஆனால் நம் தலைக்குமேல் கூரை உண்டு.

மூப்படைந்த பட்சிகள்,

பன்மொழிக் குஞ்சுகள்

சளசளக்கின்றன

தன் கனவுகளை விவாதிக்கின்றன

நாம் அடைகாக்கப் படாவிட்டாலோ?

இந்த ஓடு என்றுமே உடையா விட்டாலோ?

நமது கிறுக்கல்களே நமது

தொடுவானம் என்றால், என்றும்

அதுவே என்றால்?

நாம் அடைகாக்கப் பெறுகிறோம் என்று நாம் நம்புகிறோம்

நாம் அடைகாப்பைப் பற்றிப் பேசினாலும்.

இன்னொரு பயம் நமக்குண்டு.

ஓட்டின் வெளியே இருக்கும்

யாரோ ஒருவருக்குப் பசி ஏற்பட்டு

ஓட்டை உடைத்து உப்புச் சேர்த்து

வாணலியில் போட்டு

வதக்கக் கூடும்

அப்பொழுது நாம் என்ன

செய்வோம், முட்டையினுள்

இருக்கும் எனது சகோதரர்களே.

•••

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ் .

நன்றி  : நவீன விருட்சம்

0Shares
0