குறுங்கதை – 1 அரசனின் தூண்டில்


ஆண்டுக்கு ஒருமுறை மன்னன் மீன்பிடிப்பதற்காக நளா ஆற்றிற்குச் செல்வது வழக்கம். புதிய மன்னராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு துங்கன் மீன்பிடிப்பதற்கு ஆர்வம் காட்டவேயில்லை. தனது எல்லையற்ற அதிகாரத்தை உலகம் அறியும்படியாக அவன் குரூரமான தண்டனைகளை அறிவித்து வந்தான். மக்களுக்குத் துங்கனின் பெயரைக் கேட்பதே அச்சம் தருவதாகியிருந்தது. துங்கனின் மூன்று மனைவிகள் ஒரே நேரத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கள்ள உறவு குறித்த சந்தேகம் தான் காரணம் என்றார்கள். அவனது விருப்பத்திற்காக ஆண்டு முழுவதும் அவனது மாளிகை மீது மழை பொழிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக முந்நூறு பணியாளர்கள் இரவு பகலாக வேலை செய்து தண்ணீரை பீய்ச்சியடித்தார்கள். தான் இயற்கையை வென்றுவிட்டேன் என்று பெருமிதம் கொண்ட துங்கன் அந்த ஆண்டு நளா ஆற்றுக்கு மீன்பிடிக்கப் போவதாக அறிவித்தான்.

மன்னர் வருகை தரும் நாளில் ஆற்றில் எவரும் எங்கேயும் மீன்பிடிக்கக் கூடாது என்று முரசு அறிவித்தார்கள். இருபத்தியாறு வைரக்கற்கள் பதித்த கீரிடம் அணிந்து சீனப்பட்டு உடுத்தி துங்கன் யானை மீதேறி மீன்பிடிக்கச் சென்றான். நளா ஆற்றங்கரை முழுவதும் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவனுக்காகத் தங்கத் தூண்டில் தயார் செய்யப்பட்டிருந்தது. துங்கன் அமர்ந்து மீன்பிடிக்கத் தேக்கில் செய்த மர இருக்கை செய்யப்பட்டிருந்தது. துங்கன் தனது தூண்டிலை வீசுவதற்கு முன்பாக ஆற்றில் துள்ளியோடிக் கொண்டிருக்கும் மீன்களைக் கண்டான். மீனைப் பிடிப்பது எளிய விஷயம் என்று நினைத்தபடியே தூண்டிலை வீசினான்.

அவனது தூண்டில் அசைவற்றிருந்தது. தக்கையில் சலனமேயில்லை. பொறுமையில்லாமல் அவன் அடிக்கடி தூண்டிலை இழுத்துப் பார்த்தபடியே இருந்தான். தூண்டிலில் மீன் சிக்கவேயில்லை. நான் பேரரசன் துங்கன். இந்தச் சிறுமீன்கள் என்னைத் துச்சமாக நினைக்கிறதே என்றபடியே அவன் தூண்டிலை ஓங்கி வீசினான். மீன் அகப்படவில்லை. அன்று மதியம் வரை அவன் தூண்டில் வீசிப்பார்த்தும் ஒரு மீன் கூட தூண்டிலில் விழவில்லை. ஆத்திரம், கோபம் ,இயலாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர அவன் அரண்மனை திரும்பினான்.

தனது கட்டளையை மதிக்காத மீன்களைக் கொன்றுகுவிக்கும்படி கட்டளையிட அவனது நாவு துடித்தது. ஆனால் மனது எப்படியாவது ஒரு மீன் தூண்டிலில் மாட்டாமலா போகும். நாளை திரும்ப மீன்பிடிக்கப் போகலாம் எனச் சொன்னது. அன்றிரவு எப்படி மீன் பிடிப்பது என்பதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினான்.

மறுநாளும் அவன் தூண்டிலில் மீன் அகப்படவில்லை. மீன்களுக்கு அவன் அரசன் என்றோ. அவன் அதிகாரம் வானளவு பெரியது என்றோ தெரிந்திருக்கவில்லை. துங்கன் தனது அதிகாரம் இவ்வளவு தானா எனக் குழம்பிப்போனான்.

தொடர்ச்சியாக ஏழு நாட்கள் மீன்பிடிக்க நளா ஆற்றுக்கு வந்தான். ஏழு நாளும் மீன் கிடைக்காமல் திரும்பிப் போனான். அரண்மனையில் அவனால் உறங்கமுடியவில்லை. அரசன் தூண்டிலில் மீன் குஞ்சு கூடச் சிக்கவில்லை என்பது தேசத்தின் கேலிப்பேச்சாக மாறியது.

இனி மீன்பிடிக்காமல் அரண்மனை திரும்ப மாட்டேன் என்று துங்கன் நளா ஆற்றின் கரையிலே கூடாரம் அமைத்துத் தங்கினான். ஒவ்வொரு நாளும் விடிகாலை முதல் இரவு வரை தூண்டிலோடு காத்துக் கிடந்தான். ஒரு மீனும் அவன் தூண்டலைத் தொடவேயில்லை. மீனின் கண்கள் அவனைப் பரிகசிப்பது போலவே இருந்தன. ஆரம்ப நாட்களில் கோபமும் ரௌத்திரமும் கொண்ட துங்கன் பின்பு மாற ஆரம்பித்திருந்தான். நீண்ட யோசனை செய்தான். கவலை கொண்டான். சில வேளைகளில் அவன் எதையோ பிரார்த்தனை செய்வது போலத் தெரிந்தது. ஆற்று நீருடன் பேச ஆரம்பித்தான். பின்பு ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனம். மகாமௌனம்.

துங்கன் தனது அரசபோகத்தை விட்டு எளிய மனிதன் போல உடையணிந்து ஆற்றின் கரையில் எளிய மூங்கில் தூண்டிலோடு நிற்பதை நாடே வியப்புடன் பார்த்தபடியே இருந்தது. ஏமாற்றியோ பணம் கொடுத்தோ , உத்தரவிட்டோ, தந்திரங்கள் செய்தோ மீனைத் தூண்டிலில் விழச்செய்ய முடியாது என்பதைத் துங்கன் உணர்ந்து கொண்டான்.

உணவும் உறக்கமும் மறந்து போக ஆரம்பித்தான். நாட்கள் கடந்து போயின. வருஷங்களும் கடந்து போயின. ஆட்சி கைமாறியது. அவனது தமயன் அரசனாகினான். எதையும் துங்கன் கவனம் கொள்ளவேயில்லை. அவன் தண்ணீரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். அவனது உரு ஒடுங்கியிருந்தது. தாடி அடர்ந்து போனது.

பின்னொரு நாள் அவன் தூண்டிலை வீசி எறிந்துவிட்டு தண்ணீரை நோக்கிக் கைகூப்பி வணங்க ஆரம்பித்தான். யாரை வணங்குகிறான் தண்ணீரையா, மீன்களையா எனத் தெரியவில்லை. ஆனால் அதே வணங்கிய கோலத்தில் ஆற்றங்கரையில் நின்றபடியே இருந்தான்.

அந்த நாளின் இரவில் அவன் ஆற்று நீருக்குள் மூழ்கிப் போய்விட்டதாக ஒரு தகவலும் ,ஆற்றைக் கடந்து படகில் போய்விட்டதாக இன்னொரு தகவலும் உலவத் துவங்கின. துங்கன் என்ன ஆனான் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நளா ஆற்றில் தூண்டிலைக் கவ்வாத மீனிற்குத் துங்கன் என்ற பெயர் அதன் பிறகே ஏற்படத்துவங்கியது.

•••

26.01.20

0Shares
0