குறுங்கதை 87 காதல் கவிதை.

அவர்கள் இருவரின் காதலுக்கும் நரேன் தான் தூதுவனாக இருந்தான். அப்போது அவனது வயது 12.

சுலோச்சனா தினமும் ஒரு சினிமா பாட்டுப்புத்தகம் கொடுத்து அனுப்பி வைப்பாள். அதில் ஏதாவது ஒரு பாடலில் சில வரிகளை அடிக்கோடிட்டு இருப்பாள். நரேன் பாட்டுப்புத்தகத்தைச் சேதுவிடம் கொண்டு போய்க் கொடுப்பான்.

சேது அப் பாட்டுப்புத்தகத்தைப் புரட்டக்கூட மாட்டான். மாறாக அவன் தான் எழுதிய காதல் கடிதம் ஒன்றை அவளிடம் தரும்படியே அனுப்பி வைப்பான். சில நாட்களில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் மற்றும் நேரம் பற்றிக் கூட நரேன் தான் சொல்லி வருவான்.

அவர்கள் ரகசியமாகச் சந்தித்துக் கொள்வார்கள். கட்டித் தழுவி காதல்மொழி பேசிக் கொள்வார்கள். ஒளிந்திருந்து அதைக் கேட்கையில் நரேனுக்கு வேடிக்கையாக இருக்கும். சில நேரம் அவள் எதற்கோ அழுவாள். அவன் சமாதானப்படுத்திக் கொண்டேயிருப்பான். காதலிப்பது என்றால் என்னவென்று நரேனுக்குக் குழப்பமாக இருந்தது.

ஒரு நாள் சுலோச்சனா தான் எழுதிய பதினாலு வரி காதல் கவிதை ஒன்றைச் சொல்லி இதை அப்படியே சத்யனிடம் சொல்ல வேண்டும் என்றாள். எப்படி மறக்காமல் சொல்வது என நரேனுக்குப் பதற்றமாக இருந்தது.

அவன் சேதுவைத் தேடிப் போன போது அவன் வீட்டில் இல்லை. வழக்கமாகச் சேது செல்லும் சலூனிலோ, பள்ளி மைதானத்திலே அவனைக் காண முடியவில்லை. கவிதையை மனதிற்குள்ளாகவே வைத்துக் காப்பாற்றுவது கஷ்டமாக இருந்தது. ஆகவே தனக்குதானே அந்தக் கவிதையைச் சொல்லிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பாதிப் புரிந்து புரியாததுமாக இருந்தது.

மறுநாள் சேது வீட்டிற்குப் போன போது அவன் வேலைதேடி நாக்பூருக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். சுலோச்சனா சொன்ன கவிதையை இப்போது என்ன செய்வது என நரேனுக்குப் புரியவில்லை. கையில் கனமான பரிசுப் பொருளை வைத்துக் கொண்டிருப்பது போலவே உணர்ந்தான்.

இரண்டு வாரங்களில் சுலோச்சனாவிற்குத் திருமணம் ஏற்பாடு ஆனது. அந்தக் கல்யாண வீட்டில் வைத்துச் சுலோச்சனாவிடம் கவிதையை என்ன செய்வது என ரகசியமாகக் கேட்டான் . அதை மறந்துவிடு என்றாள் சுலோச்சனா. சரி எனத் தலையாட்டிவிட்டு வீடு திரும்பினான். கவிதையின் ஒரு வார்த்தையைக் கூட மறக்க முடியவில்லை. முழுக்கவிதையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சுலோச்சனா அதன்பிறகு அவர்கள் ஊருக்கு வரவேயில்லை. அது போலவே சேதுவையும் திரும்பப் பார்க்கவேயில்லை. ஆனால் நரேன் தனது மனதில் அக்கவிதையைச் சுமந்து கொண்டேயிருந்தான். எப்போது தனியே இருந்தாலும் அக் கவிதை நினைவில் வரத்துவங்கிவிடும். காதலின் துயரால் எழுதப்பட்ட கவிதைகளுக்கு அழிவேயில்லை போலும்.

காலம் செல்லத் துவங்கியது. நரேனும் வளர்ந்து வேலைக்குப் போனான். விட்டோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பிள்ளைகள் பெற்றுக் கொண்டான். ஆனால் ஏன் சுலோச்சனாவின் காதல் தோற்றுப்போனது என்ற கவலை அவனை விடவேயில்லை. ஒருவேளை இதைச் சுலோச்சனா மற்றும் சேது கூட மறந்திருப்பார்கள். ஆனால் நரேனால் மறக்க முடியவேயில்லை.

நடுத்தர வயதை அடைந்த போது நரேன் ஒவ்வொரு நாளும் இரவில் மொட்டை மாடிக்குப் போய் நின்றபடியே சுலோச்சனா சொன்ன கவிதையை முணுமுணுப்பான். அவனை அறியாமல் கண்ணீர் கசியும். ஏன் இந்தக் கவிதையை இத்தனை ஆண்டுகளாகியும் சுமந்து கொண்டேயிருக்கிறோம் என்று வருத்தப்படுவான். அவனால் அந்த காதல்கவிதையை மறக்க முடியவேயில்லை.

ஒரு கவிதையை அறிந்து கொள்வதற்கு ஐந்து நிமிஷங்கள் போதும் ஆனால் மறப்பதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லவே முடியாது என்று நரேனுக்குத் தோன்றியது.

••

0Shares
0