நீண்டநாட்களாகத் திரௌபதிக்கு ஒரு ஆசையிருந்தது. மகாராணி காந்தாரியின் கண்களில் கட்டியுள்ள வஸ்திரத்தை ஒருமுறை வாங்கித் தனது கண்ணில் கட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் மகாராணி காந்திரியைச் சந்திக்கவும் தனிமையில் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஆகவே அவள் காத்துக் கொண்டேயிருந்தாள்.
யுத்தம் முடிந்து பாண்டவர்கள் வென்ற பிறகு, பிள்ளைகளை இழந்த காந்தாரியும் திருதராஷ்டிரனும் வனம் ஏகப்போகிறார்கள் என்று தெரிந்த நாளில் அவள் தனியே சென்று காந்தாரியைச் சந்தித்தாள்.
தன் மனதிலிருந்த ஆசையைச் சொன்னாள். காந்தாரி தன் கண்ணைக் கட்டிய வஸ்திரத்தை அவிழ்த்துத் திரௌபதியிடம் கொடுத்தபடியே சொன்னாள்
“இது வெறும் வஸ்திரமில்லை. கட்டிப்பார் புரியும்“
காந்தாரியின் வஸ்திரத்தால் கண்ணைக் கட்டிய மறுநிமிசம் திரௌபதிக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகும் விஷயங்கள் மனதில் தெரியத் துவங்கின. அவள் தன் கணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைக் கண்டாள். திடுக்கிட்டு வஸ்திரத்தை அவிழ்த்த போது காந்தாரி சொன்னாள்
“பயப்படாதே. இந்த வஸ்திரத்தைக் கட்டிக் கொண்டவுடன் நிகழ்காலம் தெரியாமல் போய்விடும். ஆனால் எதிர்காலம் துல்லியமாகக் கண்ணுக்குத் தெரியும். என் பிள்ளைகள் அழிவை நோக்கி வேகமாகச் சென்றதை நான் முன்னதாகவே அறிந்தேன். ஒரு தாயிற்குப் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றித் தான் கவலைகள் இருக்கும். நெருக்கடியிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றிவிட முடியாதா எனத் துடிப்பாள். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் என்னால் விதியின் விளையாட்டினைத் தடுக்க முடியவில்லை“
திளெரபதி சொன்னாள்
“உலகிலிருந்து பிள்ளைகள் விடைபெற்றாலும் தாயின் மனதிலிருந்து பிள்ளைகள் விடைபெற மாட்டார்கள். அதை நான் இப்போது உணர்கிறேன்“.
பிள்ளையைப் பறி கொடுத்த இரண்டு தாயும் கண்ணீர் வடித்தார்கள்.
••
