ஜம்னா என்பது ஒருவரின் பெயரில்லை. அது ஒரு குழுவின் அடையாளம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் விதிஷாவின் தெற்கே பரவியிருந்தார்கள்.

அவர்கள் துறவிகளுக்கு எதிரானவர்கள். துறவிகளைத் தொந்தரவு செய்யக்கூடியவர்கள். யாத்திரைக்காகச் செல்லும் துறவிகள் இரவு நேரம் சாவடியில் தங்கும் போது அவர்களின் தண்டம், கப்பரை மற்றும் நீர்குவளைகளைத் திருடிவிடுவார்கள்.
திருட்டுக் கொடுத்த பொருளுக்காகத் துறவிகள் கவலைப்படக்கூடாது. புகார் அளிக்கக் கூடாது என்பது பொதுவிதி. ஆனால் தன்னுடைய பொருளை பறிகொடுத்த துறவி மிகுந்த கோபம் கொள்வான். திருடனைச் சபிக்கவும் செய்வான்.
இது போன்ற தொந்தரவுகள் தொடர்ந்து வந்ததால் துறவிகளில் ஒருவர் விழித்திருந்து காவல் காக்க வேண்டும் என்ற நடைமுறை உருவானது. ஆனாலும் ஜம்னாக்களைத் தடுக்க முடியவில்லை
ஜம்னாக்கள் வாழ்க்கையைக் கொண்டாடுகிறவர்கள். அவர்கள் எப்போதும் ஆட்டம் பாட்டமுமாக இருந்தார்கள். விதவிதமான உணவுகளை ருசித்தார்கள். பகலில் சூரியனைப் போலவும் இரவில் சந்திரனைப் போலவும் இருந்தார்கள். ஜம்னாக்களின் மகிழ்ச்சி அதிகமாகும் போது அவர்கள் ஒருவர் மீது மற்றவர் ஏறி நின்று மனிதகோபுரத்தை உருவாக்குவார்கள்.
வாழ்க்கை இன்பங்களை ஒருவன் நிராகரிப்பதோ, கேலி செய்வதோ அவர்களைக் கோபப்படுத்தியது. விலங்குகளோ, மரம்செடி கொடிகளோ துறவு கொள்வதில்லை என்று உரக்கக் கத்தினார்கள்.
துறவிகள் உறங்கும் போது மட்டுமின்றிக் கானகத்தைக் கடந்து செல்லும் போதும். ஆற்றங்கரைகளில் காத்திருந்த போதும் ஜன்மாக்கள் தொந்தரவு செய்தார்கள். இதில் காட்டுப்பாதையில் செல்லும் துறவிகளை ஆயுதங்களுடன் வழிமறித்த ஜன்மாக்கள் அவர்களை நடனமாடச் செய்தார்கள். கழுதைகளின் கால்களைக் கட்டிவிடுவது போல நடக்க முடியாதபடி கால்களில் கயிற்றைக் கட்டி வேடிக்கை செய்தார்கள். துறவிகள் ஆற்றைக் கடக்கப் படகில் செல்லும் போது அவர்கள் படகை கவிழ்த்து விட்டார்கள். ஜம்னாக்களுக்குப் பயந்து சில துறவிகள் பயணம் செய்வதையே கைவிட்டார்கள்.
ஜம்னாக்களை இப்படியே விடக்கூடாது என நினைத்த திரிபோத மடத்தின் ஆச்சாரியார் லோகானந்தா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதியதோடு மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஹென்றி ஆண்டர்சனை நேரிலும் பார்த்து முறையிட்டும் வந்தார்.
ஹென்றி ஆண்டர்சனுக்கு இந்தப் புகாரே வேடிக்கையாக இருந்தது. இங்கிலாந்திலும் புனிதயாத்திரை செல்கிறவர்களைத் திருடும் கும்பல் இருந்தது. அவர்கள் இரவுவிடுதியில் தங்கியிருக்கும் யாத்ரீகர்களின் பொருட்களைக் கொள்ளையடித்து விடுவார்கள். காணிக்கை செலுத்தக் கொண்டு செல்லும் வெள்ளிப் பொருளை அடைவதற்குக் கொலைகளும் நடந்திருக்கின்றன. இது போன்ற குற்றசெயல்களுக்கு விடுதி உரிமையாளர் துணையிருப்பார் என்றார் ஆண்டர்சன்.
ஜம்னாக்களை ஒடுக்குகிற வெள்ளைக்கார அதிகாரிக்குத் தங்கள் மடத்தின் சார்பில் தங்கவாள் தரப்படும் என்றார் ஆச்சார்யா லோகானந்தா.
ஹென்றி ஆண்டர்சன் ஜம்னாக்களை ஒடுக்குவதற்காகத் தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். அதற்குத் தலைவராக ஆலன் டேவிஸை நியமித்தார்.
ஆலன் டேவிஸ் ஜம்னாக்களைப் பற்றிய தகவல்களைத் தேடி திரட்டிய போதும் வியப்பளிப்பதாக இருந்தது

ஜம்னாக்கள் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடுவது கிடையாது. அவர்கள் ஊரில் எவர் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அதனைக் கொண்டாடுவார்கள். பௌணர்மி நாளில் உறங்கமாட்டார்கள். ஆற்றங்கரையில் ஒன்று கூடி விருந்து குடி ஆட்டம் என இரவெல்லாம் கொண்டாடுவார்கள். தண்ணீருக்குள் ஒளிந்து கொள்ளக்கூடியவர் என்பதால் அவர்களைத் துரத்திப்பிடிப்பது எளிதானதில்லை.
ஆலன் டேவிஸ் ஜம்னாக்களின் பௌர்ணமி கொண்டாட்டத்தைக் காண விரும்பினார். அதற்காக ஆற்றங்கரையை ஒட்டிய குன்றின் மீது தனியே ஏறி அமர்ந்து கொண்டார். வெண்ணிற இரவில் அவர் கண்ட காட்சியைப் போன்ற ஒரு கொண்டாட்டத்தை வாழ்நாளில் கண்டதில்லை.
இறைச்சி வேகும் மணம். விதவிதமான மலர்களைச் சூடிய ஆடையில்லாத பெண்கள். மதுப் பீப்பாய்கள். இசையும் நடனமும் கூச்சலும் கலந்த கொண்டாட்டம். நிலவு வெளிப்பட்டத்திலிருந்து நிலவு மறையும் வரை அந்தக் கொண்டாட்டம் முடியவில்லை.
அவ்வளவு போதையிலும் ஜம்னாக்களில் ஒருவன் கூடத் தடுமாறி விழவில்லை. உறங்கவில்லை. ஆணும் பெண்ணும் உற்சாகத்தை அதிகமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். இவ்வளவு திளைப்பில் மூழ்கியவர்களுக்குத் துறவிகளைப் பிடிக்காமல் போவது இயல்பு தான் என்று ஆலன் டேவிஸிற்குத் தோன்றியது.
இவர்களை ஆயுதம் கொண்டு ஒடுக்குவதை விடவும் பொய்கதைகளைக் கொண்டு எளிதாக ஒடுக்கிவிடலாம் என்று ஆலன் டேவிஸ் கண்டுபிடித்தார். அதன்படி துறவிகளிடம் அவர்கள் தங்கும் இடத்தில் இரவெல்லாம் இசையும் பாட்டுமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அத்தோடு இமயத்தின் அருகே கறுப்பு நதி ஒன்று ரகசியமாக ஒடிக்கொண்டிருப்பதாகவும். தேனை விடவும் இனிப்பான அந்த நதிநீரில் ஒருவர் குளிப்பதன் மூலம் வானில் பறந்து திரியும் சக்தியை பெற்று விடுவார்கள் என்றும். பூமியில் இல்லாத இன்பங்களை அதன் மூலம் அனுபவிக்க முடியும் என்று துறவிகள் நம்புவதாகக் கதை கட்டினார்.
ஜம்னாக்கள் கறுப்பு நதியை நம்பினார்கள். வானில் பறந்து திரிவதன் மூலம் பூமியில் இல்லாத இன்பத்தைப் பெற முடியும் எனக் கனவு கண்டார்கள். ஆகவே அவர்கள் துறவிகளுக்கு முன்பாக ரகசிய நதியைக் கண்டறிவதற்குப் புறப்பட்டார்கள். பகலிரவாக அந்தப் பயணம் நீண்டது. கங்கை நதிக்கரையில் ஜம்னாகள் தங்கியிருந்த போது ஆலன் டேவிஸ் தனது படையைக் கொண்டு அவர்களை வேட்டையாடி அழித்தார் என்கிறார்கள்.
ஜம்னாக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கபட்ட கறுப்பு நதியைப் பற்றிய கதையை நிஜமென நம்பிக் கொண்டு அதைத் தேடி அலையும் கூட்டம் பின்னாளில் உருவானது. இந்தியர்கள் நிஜத்தை விடவும் கதைகளை அதிகம் நம்பக் கூடியவர்கள் என்று ஆலன் டேவிஸ் எழுதியதை அச்செயல் நிரூபிப்பதாக அமைந்திருந்தது.