குற்றமுகங்கள் 25 சோனாபானி

இரண்டு ஆண்டுகள் நாற்பத்தி மூன்று நாட்கள் தேடி அலைந்த பிறகு சோனாபானியை துல்ஜாபூரில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.

சோனாபானி ஒரு நாய். அதுவும் திருடர்களின் தூதுவனைப் போலச் செயல்பட்ட நாய். கைபா என்ற குற்றக்கும்பல் அதனைப் பழக்கியிருந்தார்கள்.

சோனாபானியின் கழுத்தில் ஒரு தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு இலையைக் கட்டி அனுப்பி வைப்பார்கள். என்ன இலை. எத்தனை இலைகள் என்பதைப் பொறுத்து தகவல் மாறக்கூடியது.

ஒளிந்து வாழ்ந்து வந்த கைபா கும்பல் தங்கள் வீட்டிற்குத் தகவல் தருவதற்கும், திருட்டு நடக்க இருக்கும் இடத்தை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதற்கும் சோனாபானியைப் பயன்படுத்தினார்கள். பழுப்பு நிறத்தில் இருந்த நாயின் முகத்தில் வெள்ளை விழுந்திருந்தது. சோனா மிகவும் புத்திசாலியாகவும் எளிதில் பயிற்சி பெறக்கூடியதாகவும் இருந்தது,

கைபா கும்பலின் தலைவனாக இருந்த ரட்டன் தான் இதனைப் பழக்கியவன். செத்துப் போகட்டும் என யாரோ கிணற்றில் வீசி எறிந்த நாய்க்குட்டிகளில் ஒன்றாக இருந்த சோனாபானியை கண்டுபிடித்துத் தன்னுடையதாக்கிக் கொண்டான். குதிரையில் பயணம் செய்யும் போதும் கூடவே வைத்துக் கொண்டான். சோனாபானி எனப் பெயர் வைத்ததும் அவனே.

திருடிய நகைகளைச் சில நேரம் சோனாபானியின் கழுத்தில் துணியில் கட்டி அனுப்பி வைப்பார்கள். வழியில் எவரும் அதனைத் தடுத்தோ, தாக்கியோ நகையைப் பறிக்க முடியாது. இருளிலும் தனக்கான பாதையைச் சோனாபானி தேர்வு செய்து கொண்டு ஒடி நகைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும். இது போலவே திருட்டில் காயம்பட்டவர்களுக்கான மருந்துப்பொருட்களை வைத்தியர் வீட்டில் சோனாபானி கழுத்தில் கட்டி அனுப்பி வைப்பார்கள். சரியாகக் கொண்டு வந்து சேர்க்கும். அடைமழையிலும் சோனாபானியை நம்பி அனுப்பி வைக்கலாம். தகவலை சரியாகச் சேர்த்துவிடும்.

ரட்டன் குகையில் உறங்கும் போது அதனைக் காவலுக்கு நிற்கச் செய்வான். அதன் காவலை மீறி ரட்டத்தை யாரும் நெருங்கிவிட முடியாது.

சோனாபானியைப் பற்றிக் கேள்விபட்ட பத்தொன்பதாம் காவல்பிரிவு அதனையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்தது. சுட்டுக் கொல்வதற்காகத் தீவிரமாகத் தேடியது.

சோனாபானிக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதற்கு மணமகளாக மித்னாவிலிருந்து ஒரு பெண் நாயைத் தேர்வு செய்திருக்கிறார்கள். மலர்மாலை அணியப்பட்ட பெண் நாயை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இரவில் நடந்த அந்தத் திருமணத்தை ரட்டன் நடத்தியிருக்கிறான். மணமகனாக இருந்த சோனாபானிக்கு தங்கச் சங்கிலியை அணிவித்து மகிழ்ந்திருக்கிறான் ரட்டன்.

சோனாபானியை திருமணம் செய்து கொண்ட பெட்டை நாய் சில நாட்களிலே ஒடிப்போய்விட்டது. அதனைத் திருடர்கள் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள்

ரட்டன் திருடப்போகும் நாளை குறிப்பதற்கு முன்பாகச் சோனாபானியின் காதில் அதனை ரகசியம் போலச் சொல்லுவான். அதன் வால் ஆட்டப்படுவதை வைத்துத் திருட்டைச் செய்வதா, வேண்டாமா என முடிவு செய்வான். ஒரு போதும் அதனை மீறியதில்லை

ரட்டனைப் பிடிப்பதற்காகக் காவல்வீரர்கள் துல்ஜாபூரில் முகாமிட்டிருந்த போது அந்தக் கூடாரத்தின் மீது அரிக்கேன் விளக்கை வீசி தீப்பிடிக்க வைத்தது சோனாபானியே என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஒருமுறை பத்தொன்பதாம் காவல்படையின் துப்பாக்கி வீரர்கள் சோனாபானியை சந்தையில் தேடிய போது அது உடைந்த காலுடன் நடப்பது போல நொண்டிக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. நிச்சயம் அது சோனாபானியில்லை என வீரர்கள் வேடிக்கை பார்த்து ஏமாந்தார்கள்.

அடைமழைக்காலத்தில் விஷக்காய்ச்சல் கண்ட ரட்டனுக்கு மருந்து பெற்றுவருவதற்காக வைத்தியர் வீட்டிற்குச் சோனாபானி வந்த போது பத்தொன்பதாவது காவல்படை அதனைச் சுற்றி வளைத்தது. சோனா ஆவேசமாகப் பாய்ந்து தாக்கியது. ஆறு துப்பாக்கி வீரர்கள் அதனைச் சுட்டார்கள். வைத்தியர் வீட்டின் வாசலில் காதிலிருந்து ரத்தம் பீறிட சோனாபானி செத்துக் கிடந்தது.

அதே நாளில் அதே நேரம் ரட்டன் காய்ச்சலில் இறந்து போனான் என்பது தற்செயலானதில்லை. சோனாபானி இல்லாமல் ரட்டன் தனியாக வாழமாட்டான் என்பதால் அப்படி நடந்தது என்கிறார்கள். ஒருவேளை அது கதையாகவும் இருக்கலாம். குற்றத்தில் முளைக்கும் கதைகள் வலிமையானவை. விரைந்து பரவக்கூடியவை..

0Shares
0