குல்சாரின் நினைவுகள்

1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே  ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது.

அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது.

பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி விற்கும் கடை ஒன்றை அந்தத் தந்தை நடத்திவந்தார். வீடு சிறியது என்பதால் அச் சிறுவன் உறங்குவதற்காக இரவு குடோனுக்குப் போய்விடுவான்.

சிறிய அரிக்கேன் விளக்கு. தனிமை. இரவை எப்படிக் கடப்பது எனத் தெரியாது. அந்நிலையில் தன் வீட்டின் அருகிலுள்ள லெண்டிங் லைப்ரரி ஒன்றை சிறுவன் கண்டுபிடிக்கிறான். அதில் சில்லறைக்காசுகளைக் கொடுத்துப் புத்தகம் எடுத்துப் படிக்க ஆரம்பிக்கிறான். துப்பறியும் நாவல்கள் தான் அங்கே கிடைத்தன. இரவெல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் துப்பறியும் நாவலைப் படிக்கிறான்.

ஒரு நாள் அவன் வாடகை நூலகத்தில் புதிய புத்தகம் வேண்டும் எனக் கேட்ட போது நூலகர் இதைப்படி என ஒரு நூலைத் தருகிறார். அது தாகூரின் கவிதை நூல். அந்த இரவு அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. தாகூரின் கவிதைகள் அவனை வசீகரிக்கின்றன. அந்தப் புத்தகத்தைத் திரும்பத் தராமல் தொலைந்துவிட்டது எனப் பொய் சொல்லி தானே வைத்துக் கொளகிறான். கவிதை அந்தப் பையனின் தனிமையை, மனதை வெகுவாக ஆக்ரமித்துக் கொள்கிறது.

அதன் சில நாட்களில் அது போன்ற நூல்களைத் தேடி எடுத்துப் படிக்கிறான். சரத் சந்திரரின் நாவல்கள் கையில் கிடைக்கின்றன. அதில் தன் வாழ்க்கை கதையே நாவலாக எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறான். சரத்சந்திரரை படித்துக் கண்ணீர் விடுகிறான். தாகூரும் சரத் சந்திரரும் அந்தச் சிறுவனுக்குத் துணையாக மாறுகிறார்கள். தாயில்லாத தனது ஏக்கத்தை, தனிமையை அவன் புத்தகங்களின் வழியே கடந்து போகிறான். கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறான்.

அந்தப் பையனின் தந்தை கவிஞனாக வாழ முடியாது. கவிதைகள் படித்து வீணாகிவிடாதே எனத் திட்டுகிறார். அப் பையன் மனதிலோ கதைகள், கவிதைகள் இரண்டுமே தனது உலகம் என்ற எண்ணம் உருவாகிறது. பிடிவாதமாக அவன் கவிதைகள் வாசிக்கிறான் ,எழுதுகிறான்.

பின்பு அவனது அண்ணன் மும்பைக்கு இடம் மாறுகிறான். ஆகவே அவனும் மும்பைக்குப் போகிறான். அங்கே பல்வேறு சிறுசிறு வேலைகள் செய்து வாழ்கிறான். ஆனால் மனதில் கவிதைகள் பீறிட்டப்படியே உள்ளன. வாரம் தோறும் இலக்கியக் கூட்டங்களுக்குக் கவிதை வாசிப்பு நிகழ்வுகளுக்குப் போகிறான். கவிஞனாக உருவாகிறான்.

இயக்குனர் பிமல்ராயின் உதவியாளர் பணி கிடைக்கிறது. அவனுக்கான உலகின் கதவுகள் திறக்க ஆரம்பிக்கின்றன. சினிமாவில் பாடல்கள் எழுத ஆரம்பிக்கிறான். சிறுகதைகள். திரைக்கதைகள் எனத் தொடர்ந்து எழுதுகிறான். அவனது திறமை அடையாளம் காணப்படுகிறது.

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, இயக்குனராக அவன் பரிணமிக்கிறான். பணமும் புகழும் வந்து சேர்கின்றன. இந்திய சினிமாவின் ஒளிரும் முகமாக அவன் வளர்ந்து நிற்கிறான். ஆனால் மனதில் மூலையில் தன் அம்மாவின் முகம் கூடத் தனக்குத் தெரியாது என்ற ஏக்கம் மாறவேயில்லை. தனக்குக் கிடைக்காத அன்பை, ஏக்கத்தை அவன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகிறான். உலகமே அவனை நேசிக்கத் துவங்குகிறது.

தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமூச்சும் சந்தோஷமும் கண்ணீருமாக நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறான். இப்படித்தான் அந்த நேர்காணல் அமைந்திருக்கிறது.

இந்தி திரைப்படவுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்சாரின் விரிவான நேர்காணல் புத்தகமான In the Company of a Poet யை வாசித்தேன்.  எத்தனை செய்திகள். நிகழ்வுகள். காலத்தின் முடிவற்ற சாலையில் பயணித்து திரும்பியது போலிருந்தது.

1934-ஆம் ஆண்டுப் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த குல்சார் 1956-ஆம் ஆண்டிலிருந்து திரைப் பாடல்கள் எழுதத் துவங்கினார். பிமல் ராய் எடுத்த ‘பாந்தினி’ திரைப்படப் பாடல்கள் குல்சாருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இசையமைப்பாளர்கள் எஸ் டி பர்மன், சலீல் சவுத்ரி, லக்ஷ்மிகாந்த் பியாரிலால், மதன் மோகன் ஏ. ஆர். ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் திரைப்படப் பாடலாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் மேரே அப்னே, கோஷிஷ், மீரா, மாச்சீஸ், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படப்பாடலான ஜெய் ஹோ-விற்காக ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கார் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேர்காணல் தொகுப்பு குல்சாரின் வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்களின் விரிவான பதிவாக உள்ளது. உருது கவிதைகள் குறித்தும் மிர்ஸா காலி பற்றிய தொலைக்காட்சித் தொடரையும் நூலையும் அவர் எழுதிய விதம் பற்றியும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப்பின் ஒரு பகுதியான டினா என்ற ஊரில் பிறந்தவர் குல்சார். இவரது இயற்பெயர் சம்பூரன் சிங் கல்ரா . இந்திய சினிமாவின் ஐம்பது ஆண்டுகாலம் நூலின் வழியே நினைவுகளாக மலர்கிறது. ஆங்கிலம் ஹிந்தி உருது பெங்காலி பஞ்சாபி என ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் குல்சார். இவரது மனைவி ராக்கி இந்தி திரையுலகின் முன்னணி நடிகை. அவர் ஒரு பெங்காலி.

இயக்குனர் பிமல் ராய் பெங்காலி. அவரது உதவியாளர் என்பதால் பலரும் குல்ஸாரை பெங்காலி என்றே நினைத்திருக்கிறார்கள்.

ஒருமுறை படப்பிடிப்புத் தளத்தில் இவர் தொலைபேசியில் பஞ்சாபி பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட இயக்குனர் ஆசிப் பிரமாதமாகப் பஞ்சாபி பேசுகிறாயே எப்படி எனக் கேட்டிருக்கிறார். நான் ஒரு பஞ்சாபி அதனால் தான் எனக் குல்சார் பதில் அளிக்கவே அவர் திகைத்துப் போய் நீ பெங்காலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் எனக் கூறியிருக்கிறார்.

அந்த அளவு பெங்காலி மீது பற்றும் புலமையும் கொண்டிருந்தார் குல்சார். வங்க இலக்கியத்தின் மீதான விருப்பமே அந்த மொழியைக் கற்றுக் கொள்ளச் செய்தது என்கிறார்.

தாகூரை வங்க மொழியில் வாசிப்பது மகத்தான அனுபவம், அதற்காகவே வங்க மொழியை கற்றுக் கொண்டேன் என்கிறார் குல்சார். தனது காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள். பாடலாசிரியர்கள் பற்றி அவர் குறிப்பிடும் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. குறிப்பாக ராஜேந்தர் சிங் பேதி என்ற உருது எழுத்தாளரின் திறமைகள் குறித்தும் அவரது சினிமா பங்களிப்பு பற்றியும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

பஞ்சாபியாக இருந்த போதும் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரம்ஜான் நோன்பு கடைபிடித்துவருகிறேன். அல்லாவின் கருணையை வேண்டி மண்டியிட்டுத் தொழுதுவருகிறேன். தன்னைப் பலரும் இஸ்லாமியர் என்றே கருதுகிறார்கள். அல்லாவின் பெருங்கருணையை யாசிக்க எனக்கும் உரிமையிருக்கிறது. நோன்பு என்னைத் தூய்மைப்படுத்துகிறது. நேசத்தின் வலிமையை உணர வைக்கிறது என்கிறார் குல்சார்

ராஜேந்திர் கிருஷ்ணன் என்ற இந்தி பாடலாசிரியர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் தமிழ் மொழியை நன்றாக அறிந்திருந்தார் . அவர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் தயாரித்தத 18 படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். மும்பையில் வசித்த அவர் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்குத் தேவையான காட்சிகளை எழுதி விமானத்தில் கொடுத்து அனுப்புவார். அந்தப் பேப்பர் சென்னை வந்து சேர்ந்து அதன்பிறகே படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு இந்தி எழுத்தாளர் எவ்வளவு புகழ்பெற்றிருந்தார் என்பதற்கு அடையாளமது என்கிறார் குல்சார்

மணி ரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவம். அரூபமான விஷயங்களைக் கூடப் பாடலில் கொண்டுவாருங்கள் என மணிரத்னமே தனது புதிய பாடல்களுக்கான வாசலைத் திறந்துவிட்டார்.. ரஹ்மானின் இசை உலகத்தரமானது. அவரே தன்னை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர் எனப் பெருமையாக நினைவு கூறுகிறார்.

குல்சார் கவிஞராக நிறையக் கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். கவிதைக்காகச் சாகித்ய அகாதமி விருதையும் பெற்றிருக்கிறார். பத்மவிபூஷண் விருது, தாதா சாகே பால்கே விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

குல்சாரின் கவிதைகள் சாந்த் புக்ராஜ்கா, ராத் பச்மினே கி மற்றும் பந்த்ரா பாஞ்ச் பச்சத்தர் என மூன்று தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் ராவி-பார் மற்றும் துவான் என இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

குல்சாரின் இந்த நேர்காணலை வாசிக்கும் நாம் கறுப்பு வெள்ளை நினைவுகளுடன் ஒரு கவிஞன் உருவாகி வந்த விதம் குறித்தும் துல்லியமாக அறிந்து கொள்கிறோம்.

டெல்லியில் நடந்த சீக்கிய கலவரத்தில் அவரது குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கபட்டது. அதை நினைவு கூறும் குல்சார் இந்தியப் பிரிவினையின் போது நாங்கள் ஊரை, வீட்டை, உடமைகளை இழந்தோம். டெல்லிக்கு வந்து சிறிய தொழில் செய்து மெல்ல காலூன்றி நின்றோம். ஆனால் சீக்கிய கலவரம் அத்தனையும் நிர்மூலமாக்கிவிட்டது. மீண்டும் அகதியைப் போலத் துரத்தப்பட்டோம். எனது சகோதரிகள் இதில் மிக அதிகம் பாதிக்கபட்டார்கள். அந்த நினைவில் இருந்தே Maachis படத்தை இயக்கினேன் என்கிறார்.

தனது மனைவியின் சொந்த ஊர் தற்போது வங்காளதேசத்திலுள்ளது. எனது சொந்த ஊர் பாகிஸ்தானிலுள்ளது. கவிஞனாக நான் ஒரு உலகப்பிரஜை. அதுவே எனது அடையாளம் என்கிறார் குல்சார்

••

0Shares
0