சாண்டில்யனின் மறுபக்கம்

சாண்டில்யன் தனது சுயசரிதையைச் சிறிய நூலாக எழுதியிருக்கிறார். போராட்டங்கள் என்ற இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் சாண்டில்யன் எழுத்தாளரான விதம் மற்றும் அவரது கல்லூரி நாட்கள். பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்கள். தமிழ், தெலுங்கு படங்களுக்குத் திரைக்கதை எழுதும் போது கிடைத்த அனுபவம். சந்தித்த மனிதர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

ஆங்கிலப்படங்கள் மீது சாண்டில்யனுக்கு இருந்த தீராத ஆசை வியப்பூட்டுகிறது. அந்தக் கால ஆங்கிலப்படங்களைத் தேடித்தேடி பார்த்திருக்கிறார்.

ராஜாஜியின் நட்பு. மற்றும் கல்கியோடு பழகிய நாட்கள், அன்றைய பத்திரிக்கையாளர்களின் நிலை மற்றும் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் கிண்டலாக எழுதியிருக்கிறார்.

சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம். சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திரு இந்தளூர். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் படித்திருக்கிறார். அந்த நாட்களில் ராஜாஜியின் அறிவுரை படி கதர் அணிந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியிருக்கிறார். தியாகராய நகரில் இவர் வீட்டுக்கு அருகில் கல்கியும், சற்றுத் தள்ளி சாமிநாத சர்மாவும் வசித்திருக்கிறார்கள். அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

சுதேசமித்திரன் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றியுள்ளார். ஸ்வர்க சீமா, என் வீடு என்ற படங்களின் திரைக்கதைகளின் உருவாக்கத்தில் இவருக்குப் முக்கியபங்கிருந்தது. நடிகர் நாகையாவோடு ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது படங்களின் கதை உருவாக்கத்தில் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் எதிலும் அவரது புகைப்படம் இடம்பெற்றிருக்காது. அவரைப் பற்றிய வாசகர்களின் பிம்பமும் அவரது நிஜத் தோற்றம் மற்றும் அவரது வாழ்க்கை செய்திகள், ஈடுபாடுகளும் எதிர்நிலையில் இருக்கின்றன. அதைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்

பிரபலமான கொலைவழக்குகளின் விசாரணை நடைபெற்ற போது சாண்டில்யன் அந்தச் செய்திகளை நீதிமன்றத்தில் எப்படிச் சேகரித்தார் என்ற கட்டுரை சுவாரஸ்யமானது. அந்த நாளில் பாடப்பட்ட கொலைசிந்துகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்

காந்தியின் சென்னை வருகையைப் பற்றியும் அப்போது காந்தியின் கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றதைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சென்னையில் காந்தி இந்தியில் உரையாற்றியபோது ஒருவருக்கும் புரியவில்லை. சென்னை இந்தி பிரச்சாரச் சபாவில் நடந்த வேறு ஒரு கூட்டத்தில் உ.வே.சாவின் தமிழ் உரையைக் கூட இந்தியில் மொழிபெயர்ப்புச் செய்து படித்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.

அன்றைய அரசியல் தலைவர்கள் ஆங்கிலப் பத்திரிக்கைகளை மட்டுமே மதித்தார்கள். தமிழ் பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பத்திரிக்கை துறை குறித்த முதல் செய்திப் படமான Birth of a Newspaper ஆவணப்படத்தை இவரே இயக்கியுள்ளார்.

க.நா.சுவோடு பழகியுள்ள சாண்டில்யன் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

அதில் க.நா.சு தனது சூறாவளி பத்திரிக்கையில் எழுதிய எழுத்தாளர்களுக்கு அந்தக் காலத்திலே ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார் என்கிறார். பொதுவாக அந்த நாட்களில் விகடன், கல்கி போன்ற இதழ்களே பத்து ரூபாய் தான் சன்மானம் கொடுத்து வந்தன.

சூறாவளி சிறுபத்திரிக்கை என்றாலும் க.நா.சு தனது கைப்பணத்திலிருந்து ஒரு கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார் என்பது பெரிய விஷயம் என்று சாண்டில்யன் பாராட்டுகிறார்

சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழுக்கு சாண்டில்யன் சந்தா கொடுத்ததிற்கு அவரது சக எழுத்தாளர்கள் கண்டித்தார்கள் என்பதைப் பற்றியும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்

பத்திரிக்கையாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் அவரது பங்களிப்பு பற்றிப் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டதில்லை. அதை அவர் எழுதியதாகவும் நினைவில் இல்லை. இந்த நூலிலும் அதைப்பற்றிச் சில தகவல்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்

சினிமாவிற்குத் திரைக்கதை எழுத அழைத்து எழுத்தாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற குரல் சாண்டில்யனிடமும் ஒலிக்கிறது. கதை விவாதத்திற்கு அழைப்பவர்கள் ஒரு காபி வாங்கிக் கொடுப்பது மட்டுமே வழக்கம் என்கிறார்.

தன்னை இலக்கியவாதிகள் எவரும் அங்கீகரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறைய இடங்களில் வெளிப்படுகிறது.

•••

0Shares
0