சாமுராயும் கதை சொல்லியும்

நெடுங்காலத்தின் முன்பு நாடோடியாகச் சுற்றிக் கதை சொல்வதில் தேர்ந்த கதை சொல்லி ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள்   தனது பயண வழியில் மிகுந்த பசியை அடைந்தார். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை.

அருகில் சாமுராய்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றிருப்பதை அறிந்து அங்கே சென்றார்.

சாமுராய்களின் பயிற்சிக்கூடத்தில் உணவும், தங்குமிடமும் வேண்டுமென்றால் அங்கேயுள்ள யாராவது ஒருவருடன் சண்டை போட வேண்டும் என்பது விதி

கதைசொல்லி அந்தப் பயிற்சிக்கூடத்திற்குள் போய்த் தான் சண்டை போட வந்துள்ளதாகக் கூறினார்

யாருடன் சண்டை போடப்போகிறீர்கள் எனக்கேட்டதற்கு உங்கள் மாஸ்டரோடு மட்டுமே சண்டையிடுவேன் என்றார் கதைசொல்லி

உங்களுக்கோ வயதாகிவிட்டது, உடல் களைத்துப் போயிருக்கிறீர்கள். முதலாண்டு மாணவர் யாருடனாவது சண்டை போடலாமே என்றார்கள்.கதை சொல்லி ஒத்துக் கொள்ளவில்லை

வாள் சண்டையில் விற்பன்னரான மாஸ்டரிடம் ஒரு சீடன் சென்று அவரோடு  சண்டையிட ஒரு கிழவன் வந்துள்ளதாகத் தெரிவித்தான். அவர் வெளியே வந்து பசியோடு நிற்கும் கதைசொல்லியை பார்த்து என்னோடு சண்டையிட விரும்புகிறீர்களா எனக் கேட்டார்

ஆமாம். நீங்கள் தயாரா எனச் சவால் விட்டதும், அவர் தனது வாளை எடுத்துக் கொண்டார். கதைசொல்லிக்கும் நீண்டதொரு வாளைத் தந்தார்கள்.

அவர் தனது வாளை உயர்த்திப் பிடித்தபடியே மாஸ்டர் முன்பாக நின்றார்.

சண்டைக்கான விதிகள் தெரியும் தானே, வீணாகச் சாக விரும்பாதீர்கள் எனச் சொன்னார் மாஸ்டர்.

நன்றாகத் தெரியும் என்றபடி தனது வாளை உயர்த்தியபடியே ஒரு கதையைச் சொல்லத்துவங்கினார் கதைசொல்லி .

முன்னொரு காலத்தில் அழகான மலைகிராமம் ஒன்றில் கிழவன் ஒருவன் தனியே வசித்து வந்தான், அந்த மலையை ஒட்டி அடர்ந்த மரங்களுக்குள் நீரோடை ஒடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அக்கிழவன் நீரோடைக்குப் போவான், அங்கே  விசித்திர மீன் ஒன்றிருந்தது, அது கதை சொல்லக்கூடியது

தான்சுற்றிவந்த உலகைப்பற்றியும், கண்ட மனிதர்களின் விசித்திரமான சுபாவங்களைப் பற்றியும் விதவிதமான கதைகளை அந்தக் கிழவனிடம் சொல்லியது. மீனிடமிருந்து தான் கேட்ட கதைகளை  கிழவன் இரவில் தனது நண்பர்கள், குழந்தைகள் அனைவருக்கும் கூறுவான்.

இப்படி சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் என்ன ஆனது தெரியுமா எனப் பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போது மாஸ்டர் தான் சண்டையில் தோற்றுவிட்டதாகச் சொல்லி தனது வாளை கிழே போட்டார்

சண்டையே போடவில்லை, எப்படி மாஸ்டர் தோற்றுப்போனார் எனப்புரியாமல் அவரது சீடர்கள் குழப்பமடைந்தார்கள்

மாஸ்டர் நிதானமான குரலில் சொன்னார்

சண்டை போடுவதற்கு மனம் இக்கணத்தில் நிலைத்து நிற்க வேண்டும், கவனம் முழுவதும் எதிரியின் வாள் மீதே இருக்க வேண்டும், ஆனால் இந்தக் கிழவர் கதை சொல்லத்துவங்கியது எனது மனம் கதை நடந்த தொலைதூர உலகிற்குப் போய்விட்டது. எனது கவனம் முழுவதும் கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றே இருந்தது. ஆகவே நான் தோற்றுப்போய்விட்டேன், அவர் என்னை வெட்டிக் கொல்லலாம் என அறிவித்தார்

கதை சொல்லி புன்னகையுடன்  அது தனது நோக்கமில்லை, தான் பசியைப் போக்கிக் கொள்ளவே சண்டையிட வந்ததாகச் சொல்லி மீதியிருந்த கதையை அனைவருக்கும் சொல்லத்துவங்கினார். சாமுராய்கள் சந்தோஷப்பட்டு அவருக்கு சாப்பாடும் தங்கும் இடமும் தந்தார்கள்

இதயத்திலிருந்து ஒருவர் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அது சாமானியனாக இருந்தாலும் சாமுராயாக இருந்தாலும் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டுவிடும். கதை என்பது வெறும் கற்பனையில்லை. அது ஒரு சிகிட்சை, ஒருவகை தியானம்,  கண்முன்னே காலம் கரையும் விந்தை.

கதையைப் போல மனதை சந்தோஷப்படுத்தும் விஷயம் இந்த உலகில் வேறில்லை என்று சொல்லிய அக் கதை சொல்லி மறுநாள் மீண்டும் வேறு ஊரை நோக்கிச் செல்லத்துவங்கினார்

(ஜப்பானியப் பழங்கதைகள் தொகுப்பிலிருந்து)

0Shares
0