சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை.July25.

அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன..

விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. சுருண்டு படுத்துக்கொண்டிருக்கும் நாய்கள் கூடப் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு லேசாகக் காதை அசைத்துக் கொள்ளும். குரைக்காது.

அந்தச் சாலையில் இருந்த கிரௌன் தியேட்டர் இப்போது செயல்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கிறது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்கள் கிழிக்கபட்டிருந்தன. தியேட்டரின் பெரிய இரும்புக்கேட்டை இழுத்துமூடி மூன்று பூட்டுகள் பூட்டியிருந்தார்கள்.

ஆனாலும் வைத்தியநாதன் தினமும் தியேட்டர் வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்க்கவே செய்வான். அந்தத் தியேட்டரில் அவன் படம் பார்த்தது கிடையாது. அவன் அந்த நகருக்கு வருவதற்கு முன்பே மூடியிருந்தார்கள். அவனது ஹவுஸ் ஒனர் ஜோசப் அந்தத் தியேட்டரில் படம் பார்த்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அந்தத் தியேட்டரில் கிறிஸ்துமஸ் இரவு மட்டும் இலவசமாகச் சினிமா காட்டினார்கள் என்பதைப் பலமுறை நினைவுபடுத்தியிருக்கிறார். தியேட்டரின் உரிமையாளரான மார்டின் முதலாளி அன்று கேடிலாக் காரில் தியேட்டருக்கு வந்திறங்கி பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்குவார் என்றும், தியேட்டர் முழுவதும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்கும். இலவசமான சினிமா பார்க்க பெருந்திரளாக மக்கள் வருவார்கள். விசில் பறக்கும் என்று அவர் சொல்லும் போது முகத்தில் அந்த நாள் மலர்வதைக் கண்டிருக்கிறான். உலகிலிருந்து மறைந்த நாட்கள். தருணங்கள் மனதில் அப்படியே உறைந்துவிடுகின்றன. அதனைப் புத்தகத்தைப் புரட்டுவது போல நினைத்த நேரம் புரட்டிக் கொள்ள முடிகிறது.

வைத்தியநாதன் அந்தத் தியேட்டரின் முன்பாக நிற்கும் போது வண்ணவிளக்குகள் எரிந்த கிறிஸ்துமஸ் தினத்தை நினைத்துக் கொள்வான். மார்டின் முதலாளியின் கெடிலாக் கார் தியேட்டரில் நுழையும் காட்சி மனதில் வந்து போகும். தான் ஏன் அதை எல்லாம் கற்பனை செய்கிறேன் என வேடிக்கையாகவும் இருக்கும்

வைத்தியநாதன் கூரியர் அலுவலகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்தான். அவனது அலுவலகம் ஐயப்பன் கோவிலின் எதிரில் இருந்தது. இந்தியா முழுவதும் அவர்களின் கிளைகள் இயங்கின. பார்சல் வேன் வந்து செல்லும் வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆகவே தினமும் வேலை முடிவதற்கு இரவு பத்தாகிவிடும்.

நடந்து சென்று பார்க் அருகிலுள்ள தள்ளுவண்டி கடையில் பிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் சாப்பிடுவான். வாகினி அபார்ட்மெண்டின் இரண்டாவது தளத்தில் வீடு எடுத்திருந்தான். முப்பத்தைந்து வயதைக் கடந்த போதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணைக் காதலித்தான். வேலை இல்லாத அவனை ஏற்க மாட்டார்கள் எனப் பெண் வீட்டில் பேசவேயில்லை. ஸ்ரீசாந்திக்குத் திருமணமாகிவிட்டது. பெங்களூரில் வசிக்கிறாள். அவனும் அவளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இப்போதும் பர்ஸில் வைத்திருக்கிறான். புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்மதியம் அவனை விட்டு நீங்கவேயில்லை.

தனியே வசிப்பவர்கள் தங்களைச் சுற்றிய சிலந்தியைப் போல வலைபின்னிக் கொள்கிறார்கள். வைத்தியநாதனும் அப்படியே இருந்தான். அவனைத் தேடி அறைக்கு யாரும் வர மாட்டார்கள். அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களைத் தவிர வேறு நண்பர்கள் கிடையாது. குடியிருப்பில் மாதம் ஒருமுறை கூட்டம் நடக்கும். அதில் கூடக் கலந்து கொள்ள மாட்டான்

அவனது எட்டாவது வயதிலே அப்பா இறந்துவிட்டார். அம்மா தான் அவர்களை வளர்த்தாள். அவனது அக்காவிற்குத் திருமணமாகி பட்டுக்கோட்டையில் வசித்தாள்.

அம்மா மட்டும் ஊரில் இருந்தாள். வைத்தியநாதன் எதற்காகப் பிஎஸ்சி பிசிக்ஸ் படித்தான் என்று அவனுக்கே புரியவில்லை. படிப்பை முடித்துவிட்டு உள்ளூர் பெட்ரோல் பங்கில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தான். அந்த வேலை பிடிக்காமல் ஆறு மாதம் சேல்ஸ்மேனாக இருந்தான். உரம் விற்கும் வேலை. அதையும் கைவிட்டுக் கேரளாவில் எட்டு மாதங்கள் ஷிப்பிங்கில் வேலை செய்தான். அங்கே இருந்த நாட்களில் அறிமுகமான திரிவிக்ரமன் உதவியால் தான் கூரியர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

எட்டு ஆண்டுகளில் கிளை அலுவலகத்தின் மேலாளராக மாறியிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் தலைக்கிறுகிறுப்பு அதிகமாகி மயங்கி விழுந்து விட்டான். மருத்துவரிடம் சென்ற போது அவனுக்கு ரத்தக்கொதிப்பு இருப்பதாகவும் தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றும் சொன்னார். அப்படித் தான் அதிகாலை நடைப்பயிற்சி துவங்கியது.

இந்த ஒன்றரை வருஷங்களில் அவனுக்குப் பிடித்தமான விஷயமாக நடைபயிற்சி மாறியிருந்தது. காலை ஐந்து மணிக்கு எழுந்து காலில் ஷுவை மாட்டிக் கொண்டு கலையாத இருளுக்குள் நடக்க ஆரம்பிப்பான்.

மூடிய கடைகள். உறக்கம் கலையாத வீடுகள். யாருமற்ற தள்ளுவண்டிகடைகள். காலியான பேருந்து நிறுத்தம், கூட்டமாக நடப்பவர்களின் பேச்சுக்குரல்கள். டியூசனுக்குச் செல்லும் மாணவியின் தூக்கம் படிந்த முகம், வெளியூரில் இருந்து வந்திறங்கியவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும் வேகமான ஆட்டோக்கள்.

அவன் தனக்கென ஒரு வரைபடத்தை மனதில் உருவாக்கி வைத்திருந்தான். அந்தப் பாதைகள் வழியாகவே நடப்பான். அதுவும் இரவில் மழைபெய்திருந்தால் சாலையில் தேங்கிய தண்ணீரில் தெருவிளக்கின் வெளிச்சம் மிதந்து கொண்டிருக்கும். அதை ரசித்தபடியே நடப்பான்.

அவனது நடைப்பயிற்சியின் எல்லை கீர்த்தனா டீ ஸ்டால். அங்கே நின்று டீ குடிப்பான். பின்பு வீடு திரும்பும் போது வேகமாக நடந்து வருவான். எதையும் கவனித்துப் பார்க்க மாட்டான். எந்த முகமும் நினைவில் இருக்காது.

அன்றைக்கும் அப்படிதான் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு கீர்த்தனா கடையில் டீ குடித்துவிட்டுத் திரும்பினான். பழைய மரசாமான்கள் விற்கும் ஒரு கடையின் வாசலில் சாய்ந்தாடும் மரக்குதிரை ஒன்றைக் கண்டான். இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணமடிக்கபட்டிருந்தது. வயிற்றில் நீல நிற பூ வேலைப்பாடு. முகத்தில் கறுப்புப் பட்டை சந்தன நிறப் புள்ளிகள். கால் குளம்பில் கறுப்பு வண்ணம். மூக்கும் கண்ணும் அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தன.

இப்போது தான் கடையைத் திறந்திருக்கிறார்கள். தள்ளுவண்டி ஒன்று வாசலில் நின்றிருந்தது. கடைக்குள் மஞ்சள் நிற சேலை அணிந்த பருத்த உடல் கொண்ட ஒரு பெண்ணும் சிறுவனும் தெரிந்தார்கள். வண்டிக்காரன் சிம்மாசனம் போன்ற உயரமான குஷன் நாற்காலி ஒன்றை உள்ளிருந்து எடுத்து வந்து வண்டியில் ஏற்றினான்.

வைத்தியநாதன் நிற்பதைக் கண்ட வண்டிக்காரன் அவன் கேட்காமலே சொன்னான்

“சினிமா ஷுட்டிங்க்கு போகுது“…

வைத்தியநாதன் குதிரையைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த கடைப்பெண் அவனிடம் கேட்டாள்

“குதிரை வேணுமா தம்பி. “.

வேண்டாம் எனத் தலையாட்டினான்.

“நல்ல வேலைப்பாடுள்ள குதிரை. இப்போ இதை எல்லாம் செய்ய ஆள் கிடையாது. நீங்க தான் முதல்போணி… வாங்கிட்டு போங்க“ என்றாள்

“வேணாக்கா“ என்றபடியே நின்றிருந்தான்,

“குடுக்கிற விலையைக் குடுத்துட்டு எடுத்துக்கோங்க“. என்றாள்

அவளுக்கு அவசரமான பணத்தேவை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன் போலச் சொன்னான்

“இதை வாங்கி நான் என்ன செய்றது“

“வீட்ல பிள்ளைகளுக்குக் குடுங்க“

“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே“ என்றான்

“பொறக்கப்போற பிள்ளைக்கு இப்பவே வாங்கி வச்சிக்கோங்க“ எனச் சொல்லி சிரித்தாள்

அந்தச் சிரிப்பு தான் அவனை மரக்குதிரையை வாங்க வைத்தது. பர்ஸில் இருந்து அவன் எடுத்துக் கொடுத்த பணத்தைக் கையில் வாங்கியவள் அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு “இன்னும் நூறு ரூபாய் குடுங்க“ என உரிமையாகக் கேட்டாள். வைத்தியநாதனும் மறுக்கவில்லை.

எதற்காக மரக்குதிரையை வாங்கினான் என்று புரியாமலே அதைக் கையால் தூக்கிப் பார்த்தான்.

“ஈஸியா தூக்கிட்டு போயிரலாம்“ என்று கடைக்காரப் பெண் சொன்னாள்

கையில் மரக்குதிரையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் போது வேடிக்கையாக இருந்தது. தெருநாய் ஒன்று அவனைப் பார்த்துக் குரைத்தது. ஏற முடியாத குதிரை ஒன்றை கூட்டிச் செல்வது கூச்சமாக இருந்தது. தன்னைக் கடந்து செல்கிறவர்களில் யாரேனும் அதைப் பார்க்கிறார்களா எனக் கவனித்தான். ஒருவரும் அதைக் கவனிக்கவில்லை. கேட்கவில்லை. நகரம் அப்படிபட்டது தான்.

குதிரையுடன் அறைக்குத் திரும்பிய போது குடியிருப்பில் யாரும் அதனைக் கவனிக்கவில்லை. கதவின் முன்னால் குதிரையை வைத்துவிட்டு அவசரமாகப் பூட்டைத் திறந்தான். வீட்டிற்குள் குதிரையைக் கொண்டு வந்தவுடன் அதை எங்கே வைப்பது என யோசித்தான்.

படுக்கை அறையில் குதிரையை வைத்துக் கொள்ள முடியாது. சிறிய இடம். பால்கனியில் வைத்தால் வெளியே இருந்து வேடிக்கை பார்த்து சிரிப்பார்கள். ஹாலில் டிவி இருப்பதால் வைக்க இடமில்லை. சமையலறையில் வைத்துவிடலாம் என முடிவு செய்தான்.

சமையலறைக்குள் குதிரை நுழைவது என்பது விநோதமான உணர்வை தந்தது. எப்போதும் அவனுக்கு வீட்டிற்கு வந்துவிட்டோம் என்ற உணர்வை தருவது சமையலறை தான்.

அதுவும் சிறுவயதில் அவனது வீட்டின் சமையலறையில் அமர்ந்து தான் சாப்பிடுவான். நின்று சமைக்கும் உயரமான அடுப்புமேடை. புகைக்குள் நின்றபடியே அம்மா தேசையைச் சுட்டு கிழே அமர்ந்து சாப்பிடும் அவனது தட்டில் போடுவாள். தோசை பறந்துவரும் அந்த நிமிஷம் அழகானது.

அம்மா சமையலறையில் தான் படுத்துக் கொள்வாள். சமையலறைக்கெனத் தனி வாசனையும் நெருக்கமும் இருந்தது. சமையலறையில் தண்ணீர் குடிப்பதும் ஹாலில் தண்ணீர் குடிப்பதும் ஒன்றில்லை.

அன்றாடம் பள்ளிவிட்டு வந்தவுடன் பையை ஹாலில் இருந்த பிரம்பு நாற்காலியில் போட்டுவிட்டு நேராகச் சமையலறைக்குள் போய் உட்கார்ந்து கொள்வான். அப்போது தான் வீடு திரும்பிய உணர்வு ஏற்படும்.

அப்பா ஒரு போதும் சமையலறையில் சாப்பிட மாட்டார். அவருக்கு ஹாலில் தான் சாப்பிட வேண்டும். அதுவும் கிழக்கு பார்த்து அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். அவர் சாப்பிடுவதற்கெனத் தனியே தட்டு இருந்தது. வெண்கல டம்ளரில் தான் தண்ணீர் குடிப்பார்.

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டு அவன் பார்த்தேயில்லை. கல்யாண வீட்டிற்குப் போனால் கூட அப்பா தனியே தான் சாப்பிடுவார். அவர் சாப்பிட்டு வந்த பின்பு அம்மாவும் அவனும் அக்காவும் அடுத்தப் பந்திக்குப் போவார்கள். அப்பா மறைந்தபின்பும் அவர் மீதான வருத்தம் மறையவில்லை.

••

சமையலறைக்குள் ஒரு குதிரை நிற்பது அவனை மகிழ்ச்சி படுத்தியது. குதிரைக்கென எதையும் சமைக்க வேண்டியதில்லை. ஆனால் அது ஒரு துணை. அவன் காலையில் சப்பாத்தி அல்லது தோசை செய்து கொள்வான். மதியம் அலுவலகத்தின் அருகிலுள்ள மெஸ்ஸில் சாப்பாடு. இரவு சாலையோர தள்ளுவண்டி கடைகள். மரக்குதிரையின் வருகை அவனுக்குச் சமையலில் ஆர்வத்தை அதிகமாகியது. தொலைவில் உள்ள ஊர்களைப் பற்றி நினைக்கத் தூண்டியது. செய்திதாளில் தினமும் இந்தியாவின் எத்தனையோ ஊர்கள் இடம்பெறுகின்றன. அந்தப் பெயர்களைக் கூட முன்பு கவனமாகப் படிக்க மாட்டான். குதிரை வந்தபின்பு ஒவ்வொரு ஊர் பெயரையும் கவனமாகப் படித்தான். அந்த ஊர் எப்படியிருக்கும் என அவனாகக் கற்பனை செய்து கொண்டான்.

அந்த மரக்குதிரை பால்ய காலத்திற்குள் திரும்பிவிட்டது போன்ற உணர்வை அளித்தது. நினைத்துச் சந்தோஷப்படும் அளவு அவனது சிறுவயதில் எதுவும் நடந்திடவில்லை. மாறாக நினைத்துப் பார்க்கவே கூடாது எனும் அளவு வறுமை, ஏமாற்றங்கள். கண்ணீர் சிந்திய நாட்களைக் கடந்து வந்திருந்தான். ஆனாலும் மாலைவெயிலின் மினுமினுப்பை போலச் சிறுவயதின் ஒன்றிரண்டு நிகழ்வுகள் நினைக்கும் போது சந்தோஷம் தந்தன. அதில் ஒன்று அம்மாவின் தோசை. அக்கா அவன் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுவது.

சாய்ந்தாடும் குதிரை என்பதால் கையால் அசைத்து அதை ஆடவைப்பான். சில நேரம் அதன் அருகில் அமர்ந்து கொண்டு அதை ஆசையாகத் தடவிக் கொண்டிருப்பான்.

கடைப்பெண் சொன்னது போல நாளை நமக்கு ஒரு பையனோ, பெண்ணோ பிறந்தால் அவர்கள் இந்தக் குதிரையில் ஏறி விளையாட்டும் என நினைத்துக் கொள்வான். அப்படி நினைக்கும் போது தனக்கு நடக்கப்போகும் கல்யாணம், மணப்பெண் எப்படியிருப்பாள் என்றெல்லாம் கற்பனை பீறிடும். அவற்றை எல்லாம் இத்தனை காலமாக அவன் மறந்திருந்தான்.

அவனது அலுவலகத்தில் மூன்று இளம்பெண்கள் வேலை செய்தார்கள். அதில் சித்ரா மட்டும் அவனை நாதன் சார் என்று அழைப்பாள். அவள் அப்படிக் கூப்பிடும் போது மிகவும் உரிமையாக அழைப்பது போலிருக்கும். அவளுடன் பேச வேண்டும். ஒன்றாகச் சாப்பிட போக வேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால் அவள் மறுத்துவிடுவாளோ எனப் பயமாகவும் இருந்தது. அதைவிடவும் அவன் வருவதற்கு முன்னால் மேலாளராக வேலை செய்த ஜீவராஜன் மீது ஒரு பெண் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தார்கள். அந்தப் பயம் அவன் மீதும் படிந்திருந்தது.

சில நாட்கள் பின்னிரவில் விழித்துக் கொண்டு சமையலறைக்குள் தண்ணீர் குடிக்கச் செல்லும் போது குதிரை அசைவற்று நிற்பதைக் காணுவான். சட்டென ஊரில் உள்ள அம்மாவின் நினைவு வந்துவிடும். எவ்வளவோ முறை அழைத்தும் கூட அவள் தன்னோடு வந்து இருக்க மறுக்கிறாள். பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழும் பெற்றோர்கள் வீட்டிற்குள்ளாக வேர்விட்டு விடுகிறார்கள். அவர்களின் மௌனம் கனத்த இரும்பை போலாகிவிடுகிறது என்று வைத்தியநாதன் உணர்ந்திருந்தான்.

ஊருக்குப் போகும் நாட்களில் கூட அம்மா அவனிடம் அதிகம் பேச மாட்டாள். எச்சிலை விழுங்கிக் கொள்வதைப் போலப் பேச்சையும் விழுங்கிக் கொண்டுவிடுவாள்.

“ஏதாவது வேணுமாம்மா“ எனக் கேட்கும் போதெல்லாம் “எனக்கு ஒண்ணும் வேணாம்“ என்று தான் சொல்லுவாள். அந்த மறுப்புப் பொருட்கள் மீதானதில்லை. சுயவெறுப்பு. கோபம். விரக்தி. யாவும் இணைந்த வெளிப்பாடு.

அவனது சிறுவயதில் இது போன்ற மரக்குதிரையில் ஆடியதில்லை. ஆனால் போட்டோ ஸ்டுடியோவில் பார்த்திருக்கிறான். இரட்டை ஜடை போட்ட சிறுமி ஒருத்தி மரக்குதிரையில் ஆடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று நியூட்டன் ஸ்டுடியோ முகப்பில் மாட்டி வைக்கபட்டிருந்தது

அந்தச் சிறுமியைப் போலத் தனது மகனோ, மகளோ போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள்.

அக்காவும் அவனும் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து கொண்டு நியூட்டன் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

அதைப் பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என அக்கா ஆசைப்பட்டாள். அம்மா விடவில்லை

“இதை யார் வந்து பார்க்க போறா“ என அக்காவை திட்டினாள்

அதைக் கேட்டு அக்கா அழுதாள்.

“எல்லா வீட்லயும் போட்டோ மாட்டி வச்சிருக்காங்கள்ளே“ என்றாள்

“எல்லா வீடும் நாமளும் ஒண்ணுல்லே“ என்று கோபத்துடன் சொன்னாள் அம்மா.

அந்த வார்த்தைகள் அவனது மனதில் ஆழமாகப் பதிந்து போய்விட்டன. அப்பா இல்லாத குடும்பத்தின் குரலது. அவர்கள் படிப்பதற்காக அம்மா யாரிடம், எப்படிக் கடன் வாங்கினாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அக்காவிற்குத் தெரியும். அவளும் அம்மாவும் சில நாட்கள் இரவில் சமையலறையில் உட்கார்ந்து ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பாள். அப்போது அம்மா அழுவாள். எதற்காக அழுகிறாள் என அவனுக்குத் தெரியாது.

அம்மாவிடமிருந்து அக்கா நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அதுவும் திருமணமான பின்பு அக்காவின் பேச்சு அப்படியே அம்மாவை போல மாறியிருந்தது. அம்மாவும் அவளும் ஒரே போன்ற புடவையைக் கட்டிக் கொண்டிருக்கும் போது சகோதரிகள் போலத் தோன்றினார்கள்.

அப்பா இருந்திருந்தாலும் மரக்குதிரையை வாங்கிக் கொடுத்திருக்க மாட்டார். அவனும் கேட்டிருக்கவே மாட்டான். நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்துப் பழகியிருந்தான்.

மரக்குதிரையைப் பார்த்தவுடன் தான் விலைக்கு வாங்கியது அப்பாவிற்கு எதிராகத் தானோ என்றும் நினைத்தான்.

அம்மாவிடம் தான் ஒரு மரக்குதிரையை விலைக்கு வாங்கியிருப்பதாகச் சொன்னால் கோவித்துக் கொள்வாள்

“காசை ஏன்டா வீணா கரியாக்குறே“ எனத் திட்டுவாள்

சிறுவயதில் வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைக் கைவிட்ட வளர்ந்தவர்கள் உலகையே விளையாட்டு பொருளாக்கி விடுகிறார்கள். மனிதனுக்கு எத்தனை வயதானாலும் விளையாட ஏதாவது ஒன்று தேவை.

மரக்குதிரையைப் பற்றிச் சித்ராவிடம் பேச வேண்டும் என்று நினைத்தான். அலுவலகத்தின் உணவு வேளையில் சித்ரா மேஜைக்குச் சென்று சிரித்தான்

“என்ன நாதன் சார். ஒரு வாரமா.. உங்க முகம் ரொம்பப் பிரைட்டா இருக்கு“

“அப்படியா மேடம் “

“நீங்க என்னைச் சித்ராண்ணே கூப்பிடலாம்“.

“நான் ஒண்ணு சொன்னா நீங்க கேலி பண்ணக்கூடாது “

“எல்லாத்தையும் கேலி பண்ண மாட்டேன் சார். சொல்லுங்க “

“நான் ஒரு மரக்குதிரை வாங்கியிருக்கேன். பழைய சாமான் கடைல கிடைச்சது“

“எப்போ“

“ஒரு வாரம் இருக்கும். வீட்ல வச்சிருக்கேன். “

“சூப்பர் சார். நான் அதைப் பார்க்க வரலாமா“ எனக்கேட்டாள்

அதை வைத்தியநாதன் எதிர்பார்க்கவில்லை.

“எப்போ வேணும்னாலும் வரலாம். ஆனா உங்களாலே அந்தக் குதிரைல ஏறி ஆட முடியாது “

“சார் என்னைச் சொல்லிட்டு நீங்க கேலி பண்ணுறீங்க “ என அவள் சொல்லும் போது அவளது கண்கள் விரிந்திருந்தன. ரப்பர் பேண்ட் ஒன்றை விரலில் கொடுத்து இழுத்தபடியே சித்ரா சொன்னாள்

“முதல்ல குதிரை. அப்புறம் கல்யாணம். குழந்தை.. அதானே உங்க பிளான்“

இதே போலத் தான் கடைக்காரப் பெண்ணும் சொன்னாள். காரணமில்லாமல் எதையும் வாங்கவோ வைத்துக் கொள்ளவோ கூடாதா என்ன.

“அப்படி எல்லாம் ஐடியா இல்லை.. நீங்க எப்போ வீட்டுக்கு வர்றீங்க. சண்டே ஒகேவா. “

“பாக்குறேன். சின்னவயசிலே நானும் மரக்குதிரை வச்சிருந்தேன். அதுல என் பெயர் கூட எழுதியிருந்தேன். அந்தக் குதிரைல உட்கார்ந்து போட்டோ எடுத்துருக்கேன். “

“அப்போ ரெட்டை ஜடை போட்டு இருந்தீங்களா. பஃப் கைவச்ச சட்டை. பட்டுபாவாடை.. கரெக்டா“

“உங்களுக்கு எப்படித் தெரியும்“ என ஆச்சரியமாகக் கேட்டாள்

“அது மாதிரி ஒரு போட்டோ எங்க ஊர் ஸ்டுடியோவில பாத்துருக்கேன்“

“என்னோட போட்டோ வீடு மாறும் போது தொலைஞ்சி போச்சு. அந்தக் குதிரை ரொம்ப நாளா எங்க வீட்ல இருந்துச்சி. வெள்ளம் வந்துச்சில்லே.. அப்போ தண்ணீலே போயிருச்சி. “

“நான் வாங்கியிருக்கிறது சிவப்பு கலர் குதிரை. அழகா இருக்கு“

“எப்படி சார் அந்த ஆசை வந்துச்சி. “

“தெரியலை. வாங்கின குதிரையை என்ன பண்ணுறதுனு தெரியாம கிச்சன்ல வச்சிருக்கேன்“

“நான் வந்து பாக்குறேன். வீட்டுக்கு வந்தா என்ன ட்ரீட் குடுப்பீங்க“

“பிலால் ஹோட்டல்ல போயி சாப்பிடுவோம்“ என்றான்

“நானே சமைச்சி எடுத்துட்டு வர்றேன். உங்க வீட்ல வச்சி சாப்பிடுவோம்“ என்றாள்

அவனால் நம்ப முடியவேயில்லை. அவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருப்பதை அலுவலகத்தில் சிலர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனது இருக்கைக்குத் திரும்பிய பிறகும் வைத்தியநாதன் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தான்.

அறைக்குத் திரும்பிய பிறகு மரக்குதிரையைத் துடைத்துச் சுத்தம் செய்தான். சித்ராவிற்குப் பிடிக்கக் கூடும் என மாங்கோ ட்ரிங்ஸ் வாங்கி வைத்தான். ரூம் ஸ்பிரே அடித்து வீட்டை மணமூட்டினான். எப்படியாவது அவளிடம் தனது மனதின் ஆசைகளைப் பேசிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

ஞாயிற்றுகிழமை பனிரெண்டு மணிக்கு சித்ரா வந்திருந்தாள். ஆரஞ்சு வண்ண காட்டன் புடவை. கழுத்தில் முத்துமாலை. அலைபாயும் கூந்தல். அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் மதிய உணவு. டிவி அருகே வைத்திருந்த ஆஷ்ட்ரேவைப் பார்த்துக் கேட்டாள்

“நீங்க சிகரெட் எல்லாம் பிடிப்பீங்களா“

“எப்போவாவது“

“ஆபிஸ்ல நல்ல பையன் மாதிரி இருக்கீங்க“ எனச்சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்

அவளைக் கிச்சனுக்குள் அழைத்துச் சென்று மரக்குதிரையைக் காட்டினான். அவனைப் போல அவளும் அதை ஆடச்செய்தாள். குதிரை ஆடிக்கொண்டிருக்கும் போது கேட்டாள்

“தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கும்லே“

“பழகிருச்சி. அதான் கூட ஒரு மரக்குதிரை இருக்கே“ என்று சொல்லி சிரித்தான்

“சிரிச்சா உங்க முகம் நல்லா இருக்கும். ஆனா.. எப்பவும் கவலையா இருக்கீங்க. ஏதாவது பிராப்ளமா சார்“

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நான் எப்பவும் அப்படிதான். “

“நீங்க காலையில சாப்பிட்டீங்களா.. நான் ஒண்ணுமே சாப்பிடலை. “.

“அப்போ சாப்பிட்டிருவோம்“

“கிச்சன்ல உட்கார்ந்து சாப்பிடலாமா“

அது தான் அவன் ஆசைப்பட்டதும். மகிழ்ச்சியோடு தலையாட்டினான். அவள் வீட்டிலிருந்து வாழை இலை கூடக் கொண்டுவந்திருந்தாள். அவள் சமைத்துக் கொண்டுவந்திருந்ததை இருவரும் ருசித்துச் சாப்பிட்டார்கள். அவன் சாப்பிடுவதை அவள் வேடிக்கை பார்த்தபடியும் இருந்தாள்..

ஒரு வாய் சோற்றை அள்ளியபடியே சித்ரா கேட்டாள்

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சார்“

“சொல்லுங்க சித்ரா“

“என்னை லட்சுமிநகர் பிராஞ்சுக்கு மாற்ற முடியுமா “.

“ஏன் இங்கே என்ன பிரச்சனை“

“நான் லவ் பண்ற சுதாகர் அந்த ஏரியால இருக்கார். நாங்க கல்யாணம் பண்ணிகிடலாம்னு இருக்கோம். வீட்ல ஒகே சொல்லிட்டாங்க. அங்கே வேலை மாறிட்டா.. ஈஸியா இருக்கும். “

தண்ணீர் டம்ளரை எடுத்துக் குடித்தான் வைத்தியநாதன்

“சுதாகர் என்ன பண்ணுறார். “

“ஷேர் மார்க்கெட்.. சின்னதா ஆபீஸ் வச்சிருக்கார். “

“நான் ஹெட் ஆபீஸ்ல பேசி பாக்குறேன் சித்ரா. “

“நானே அந்தப் பிராஞ்சில கேட்டேன். வேகன்சி இல்லைனு சொல்லிட்டாங்க. ஆனா நீங்க நினைச்சா முடியும் சார். எனக்காக இதைச் செய்யமாட்டீங்களா “

“டிரான்ஸ்பர் வாங்கிடலாம்“ என்று உறுதியாகச் சொன்னான்.

“தேங்ஸ் சார்“ என்றாள்.

இதைக் கேட்பதற்காகத் தான் வீட்டுக்கு வந்திருக்கிறாள். மரக்குதிரை என்பது வெறும் சாக்கு. எவ்வளவு எளிதாகத் தன்னைக் கையாண்டிருக்கிறாள்.

“எப்போ கல்யாணம்“ எனக்கேட்டான்

“ஏன் சார். இந்த மரக்குதிரையைக் கிப்டா குடுக்கப் போறீங்களா“ எனக்கேட்டாள்

“ஆமாம்“ எனத் தலையாட்டினான். அதைக்கேட்டு சித்ராவும் சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்.

அவள் விடைபெற்றுச் சென்றபிறகு அறையில் வெளிச்சமேயில்லாதது போல உணர்ந்தான். நாவறட்சியாக இருந்தது, அவள் அளித்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமையலறைக்குச் சென்று மரக்குதிரையின் அருகில் உட்கார்ந்து கொண்டான். அம்மாவைப் போலச் சமையலறையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. இரவாகும் வரை அங்கேயே படுத்துகிடந்தான். இருட்டியபிறகும் விளக்கைப் போடவில்லை. இருட்டு வீடெங்கும் நிரம்பியது.

அந்த வீட்டில் இரண்டு மரக்குதிரைகள் இருப்பதைப் போல அப்போது உணர்ந்தான்.

••

0Shares
0