சித்திர செவ்வானம்

எனது பள்ளி வயதில் சினிமா பாடல்களைக் கேட்பதற்கு ரேடியோ ஒன்று தான் வழி. அதுவும் சிலோன் ரேடியாவில் அருமையான பாடல்களை ஒலிபரப்புச் செய்வார்கள். அடுத்து என்ன பாடல் வரும் என்று முன்கூட்டியே சொல்லும் போட்டி எங்களுக்குள் நடக்கும்.

அந்த நாட்களில் சித்திர செவ்வானம் சிரிக்கக்கண்டேன் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.

காற்றினிலே வரும் கீதம் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்.

இசைஞானி இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடியது.பஞ்சு அருணாசலம் எழுதியது.

இந்தப் பாடலில் வரும் தையரத்தைய்யா தையரத்தைய்யாவை பாடலுடன் சேர்ந்து வகுப்புத் தோழர்கள் கூட்டாக ஒலிப்பார்கள். அதுவும் சில நாட்கள் மாலைநேரம் வயல்வெளியின் ஊடாக நடந்து வரும் போது தொலைவில் பாடல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். நிஜமாக யாரோ தொலைவிலிருந்து பாடுவது போலவே இருக்கும். இந்தப் பாடலின் வரிகளுக்குள் காதலின் ஏக்கமும் கனவும் விரிகிறது.

பழைய சினிமா பாடல்கள் எளிதாக நம்மைக் கடந்த காலத்தின் இனிய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றுவிடுகின்றன. உண்மையில் அந்த நாட்களின் நினைவாக மிஞ்சியிருப்பது இது போன்ற பாடல்களும் சினிமாவும் மறக்கமுடியாத சில நிகழ்வுகளும் மட்டும் தான். மற்றபடி பால்யகாலம் என்பது அடிவானம் போலத் தொலைவிற்குச் சென்றுவிட்டது. பள்ளி நண்பர்களின் முகம் மறந்து போய்விட்டது. ஆசிரியர்கள் இந்த உலகிலிருந்து விடைபெற்றுப் போய்விட்டார்கள். பள்ளி ஆண்டுவிழா நாளில் சரஸ்வதி டீச்சர் நினைக்கத் தெரிந்த மனமே பாடலைப் பாடிய போது ஏன் கண்ணீர் விட்டார் என்று இப்போது தான் புரிகிறது.

சித்திர செவ்வானம் பாடலைப் பலமுறை கேட்டிருந்தாலும் காற்றினிலே வரும் கீதம் படத்தைப் பார்த்ததில்லை. சமீபத்தில் ஒரு நாள் இந்தப் பாடலின் காணொளியைப் பார்த்தேன். மனதில் பாடல் உருவாக்கிய சித்திரம் வேறாகவும் பாடல் படமாக்கப்பட்டவிதம் வேறாகவும் இருந்தது. மனதிற்குள் நாமாக இதற்கு ஒரு காட்சிக்கோர்வையை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதை எவராலும் மாற்றிவிட முடியாது.

இன்று கேட்கையிலும் பால்யத்தின் வானவில்லைப் போலவே சித்திர செவ்வானம் பாடல் ஒலிக்கிறது.

0Shares
0