Italian Cinema Audiences என்றொரு புத்தகம் படித்தேன். 1950 -70களில் இத்தாலியின் சினிமா பார்க்கும் பழக்கம் எப்படியிருந்தது. எது போன்ற படங்கள் வரவேற்பு பெற்றன. சினிமா தியேட்டர்கள் எவ்வளவு இருந்தன. அன்று திரைப்படம் பார்த்த அனுபவம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள். திரைப்பட விநியோகத்திலிருந்த நடைமுறைகள் இவற்றை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இத்தாலியில் நடந்த விஷயங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதை மிகச்சிறந்த மகிழ்ச்சியாக இத்தாலியர்கள் நினைத்தார்கள். சினிமா பாரடிஷோ திரைப்படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அரங்கம் என்பது கனவின் உறைவிடம். அங்கே செல்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அலங்காரங்களும் தியேட்டரில் வெளிப்படும் உற்சாகமும் நிகரற்றது
எது போன்ற திரைப்படங்கள் நகரங்களில் விரும்பி பார்க்கப்பட்டன. எது போன்ற திரைப்படங்களைக் கிராமப்புற மக்கள் விரும்பி பார்த்தார்கள் என்ற விபரம் இதில் தரப்பட்டிருக்கிறது. வரலாற்றுப் படங்களை இரண்டு இடங்களிலும் மக்கள் ரசித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். திரில்லர் வகைக் கதைகள் நகரங்களில் கொண்டாடப்பட்ட அளவிற்குக் கிராமங்களில் வரவேற்பு பெறவில்லை. இரண்டிலும் முதலிடத்தில் இருந்த்து நகைச்சுவை படங்கள். அதுவும் காதலும் நகைச்சுவையும் இணைந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன
இந்தச் சூழல் அப்படியே தமிழகத்திலும் இருந்தது. வரலாற்றுத் திரைப்படங்கள் இன்றும் விரும்பி பார்க்கப்படுகின்றன. காதலும் நகைச்சுவையும் கலந்த படங்களுக்கு இன்றும் பெரிய வரவேற்பு இருக்கிறது
தியேட்டர் கட்டணத்திற்காகப் பெண்கள் எவ்வாறு காசு சேர்த்து வைத்தார்கள். எந்தக் காட்சிகளுக்குப் பெண்கள் அதிகம் வந்தார்கள் என்ற புள்ளிவிவரம் முக்கியமானது. காலைக்காட்சிகளுக்கு என்றே தனியான பார்வையாளர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டிலும் அப்படித்தான்
அன்று இத்தாலியத் திரைப்படங்களை விடவும் ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் வசூல் செய்திருக்கின்றன புறநகர் அரங்குகளுக்கான பார்வையாளர்கள் திரையரங்கத்தில் செய்த கலாட்டா மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள். விநியோகிஸ்தர்கள். சினிமா தயாரிப்பாளர்கள் பற்றியும் துல்லியமான புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
1950களில் இத்தாலியில் பார்வையாளர்களின் ரசனையைப் பத்திரிக்கைகள் தீர்மானித்தன. சுய அனுபவத்தை எழுதுதல். கண்ணீர் கதைகள். விசித்திரமான குற்ற நிகழ்வுகள். துப்பறிதல். கடத்தல் கொலை கொள்ளை போன்ற கதைக்கருக்களை மக்கள் விரும்பி பார்த்தார்கள். இதனால் இத்தாலியப் பார்வையாளர்களின் சுவையில் பெரிய மாற்றம் உருவானது
நாட்டின் வடக்கிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் திரையரங்குகள் அதிகமிருந்தன. ஆனால் தெற்கில் அவ்வளவு திரையரங்குகள் இல்லை. இந்த உண்மை தென்மாவட்டங்களின் திரையரங்குகளோடு ஒப்பிடும் போது கிருஷ்ணகிரி தர்மபுரி பகுதிகளில் அரங்குகள் மிகவும் குறைவே.
சமூக மயமாக்கலின் ஒரு வடிவமாகப் பெண்கள் சினிமாவை அனுபவித்தவர்கள் அவர்கள் கூட்டாக வீட்டை விட்டு வெளியேறி சினிமாவிற்குச் சென்றார்கள். அது ஒரு வடிகாலாக அமைந்தது.
. திரையின் வழியே சமூக மாற்றங்களைப் புதிய நாகரீகங்களை, மோஸ்தர்களைக் கற்றுக் கொண்டார்கள். இந்தப் பிரதிபலிப்பு அவர்கள் உடையில் நடனத்தில் பேச்சில் வெளிப்பட்டது என்கிறார்கள்
Little Women என்ற படத்தில் கேத்தரின் ஹெப்பர்ன் நடித்த ‘ஜோவின் கதாபாத்திரம் பெண்களிடம் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. தானே சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்பதை ஜோவின் வழியாகப் பெண்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்த வகையில் மாற்றத்தின் அடையாளமாக அவளைக் கருதினார்கள்.
இத்தாலிய இளம் பெண்கள் மீது சினிமா மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது. குறிப்பாகப் புத்தகங்களும் சினிமாவும் தான் அவர்கள் ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
சினிமா தமிழ் சமூகம் மீது செலுத்திய பாதிப்பு பற்றி இதுபோல விரிவான ஆய்வுப்பூர்வமான நூல் எழுதப்பட வேண்டும். அதன் வழியே நாம் சமூக மாற்றங்களின் உருவாக்கத்தை எளிதாகக் காண முடியும்
••