சுவரோவியங்கள்

DAVID DE LA MANO என்ற ஸ்பானிய ஒவியர் சுவரோவியங்கள் வரைவதில் சிறந்தவர், ஸ்பெயினின் Salamanca நகரின் முக்கிய வீதிகளில் இவர் வரைந்துள்ள  சுவரோவியங்கள் சிலவற்றை இணையத்தில் கண்டேன்.

மரபான ம்யூரல்களில் இருந்து பெரிதும் மாறுபட்ட இந்த ஒவியங்கள் அற்புதமான கலைவெளிப்பாடாக உள்ளன. நிழல்உருவங்களைப் பிரதானமாக வரையும் இவர் கறுப்பு வெள்ளையில் வரைந்துள்ள சுவரோவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

Greek pottery களில் காணப்படும் ஒவியமரபின் நீட்சியைப் போன்றுள்ளன இவரது ஒவியங்கள். இயற்கையும் மனிதர்களும் ஒன்றினையும் புள்ளியே இவரது முதன்மை கருப்பொருள். முடிவற்ற மனித இயக்கத்தை வேறுவேறு தளங்களில் காட்சிப்படுத்துகிறார், இயற்கை அவரது கோடுகளின் வழியே புத்துருவாக்கம் கொள்கிறது.

இடிந்து போன கட்டிடத்தின் சுவர்கள், கார் நிறுத்துமிடம், பள்ளிவளாகம், விளையாட்டு மைதானம், என டேவிட் வரைந்துள்ள இந்தச் சுவரோவியங்கள் வீதி ஒவியக்கலையின் முக்கியப் படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன

இரண்டு வருஷங்களின் முன்பாகச் சென்னையை அழகுபடுத்துவதாக நிறையச் சுவரோவியங்களை வரைந்தார்கள், அதில் பெரும்பான்மை கலையுணர்ச்சியற்றவை. பூங்காங்களிலும், பொதுசுவர்களிலும் உயிரோட்டமற்ற இந்த ஒவியங்கள் அழுக்கடைந்து அகோரமாகக் காட்சியளிக்கின்றன.

இதற்கு மாற்றாக டேவிட் வரைவது போல நவீன சுவரோவியங்களை வரைய முயன்றால் அது நிச்சயம்  வரவேற்பு பெறும் என்றே தோன்றுகிறது

0Shares
0