அகோரா 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்

இப்படத்தில் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்பெற்ற நூலகம் அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதற்காக நூலகத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அறிவின் சேகரமாகவும் அறிவியலின் ஊற்றுக்கண்ணாகவும் அது செயல்படுகிறது என்பதால் தான்.
நூலகத்தைக் காப்பாற்றுவதற்காக அதன் மாணவர்கள் போராடுவதும் நூலக வளாகம் அடித்து நொறுக்கப்பட்டு ஏடுகள் தீக்கரையாவதைப் பார்த்தபடியே ஹைபேஷியா தப்பியோடுவதும் மனதை உலுக்கக்கூடிய காட்சிகள்
இப்படம் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வானியலாளரும் தத்துவஞானியுமான ஹைபேஷியாவினை முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அலெக்சாண்ட்ரியாவின் அன்றைய பெருமைகளையும் மதமோதல்களையும் விளக்குகிறது.
ஹைபேஷியா வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தியோன் கணிதவியலாளர். அவர் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் காப்பாளராக இருந்தவர், அவரது முதன்மையான பணி “உலகின் அனைத்து அறிவையும் சேகரிப்பதாகும்”

செராபிய நூலகத்திலிருந்த அரிய ஏடுகளை ஆராய்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர்கள் வந்து போனார்கள்.. கி.பி 391 இல் இந்நூலகம் அழிக்கப்பட்டது, அந்த நிகழ்வை மையமாகக் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது
தியோன் தத்துவம், கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றை ஹைபேஷியாவிற்கு கற்றுக் கொடுத்தார். தந்தையின் பள்ளியிலே ஆசிரியராக பணியாற்றினார்.
ஹைபேஷியா மாணவர்களுக்குக் கோள்களின் இயக்கம் பற்றி விவரிக்கும் காட்சி மிக அழகானது.

ஆண்கள் மட்டுமே கல்வி பயிலும் சூழலில் நிகரற்ற பெண் அறிஞராக ஹைபேஷியா செயல்படும் விதம் மற்றும் அவளது கனவுகளைப் படம் பேசுகிறது.
அகோரா படத்தைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் Nick Gillam-Smith இயக்கிய Alexandria: The Greatest City என்ற ஆவணப்படத்தைப் பார்த்தால் போதும். அந்த அடிப்படைகள் தெரியாவிட்டால் படத்தின் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது கடினம்
அலெக்சாண்ட்ரியா ஆவணப்படம் பேகன்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே நடந்த மோதல், அதன் காரணமாக அறிவுத்துறையில் ஏற்பட்ட நெருக்கடி என வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசுகிறது ,அதில் அலெக்சாண்டரை கடவுளின் அவதாரமாகக் கொண்டாடிய எகிப்திய மக்களையும் பற்றியும் இந்த நகரம் உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் விரிவாகக் காட்டுகிறார்கள். குறிப்பாக நிலவறையினுள் உள்ள கட்டுமானங்களையும் தொல் படிவங்களையும் சிறப்பாக விளக்குகிறார்கள். அதில் அலெக்சாண்ட்ரியாவின் அரிய நூலகம் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. இந்த நகரம் அலெக்சாண்டரின் கனவு. ஆம். அவர் கனவில் ஒரு ஞானி தோன்றி இப்படி ஒரு நகரை உருவாக்கும்படி சொன்னார் என்கிறார்கள்.
ஹைபேஷியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று வியந்து கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவரது காலத்தில் அவை மதவிரோத செயல்பாடாக கருதப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆளானார்.

சூரியன் மற்றும் கோள்களின் இயக்கம் பற்றி ஆய்வு செய்த ஹைபேஷியாவை சூனியக்காரியாக அறிவித்து அவள் மீது மக்கள் கல்லெறிகிறார்கள். அவள் வேட்டையாடப்படுகிறாள்.
வரலாற்று நிகழ்வின் மீது உருவாக்கபட்ட புனைகதை என்பதால் இதில் காதல், துரோகம். அடிமையின் வாழ்க்கை என ஊடுஇழைகள் சேர்ந்து திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அலெக்சாண்ட்ரியா நகரின் அன்றைய தோற்றமும் வாழ்க்கையும் அரங்க அமைப்பு மற்றும் வரைகலை காட்சிகள் மூலம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.