கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு செய்யத் தவறிய வாழ்க்கையை அதன் அடர்த்தியோடு உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இரண்டுவிதமான அந்நிய வாழ்க்கையைப் பேசுகிறது. ஒன்று பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் சென்று வாழும் இளைஞர்களின் சூழல் மற்றும் நெருக்கடிகள். ஊர் நினைவுகள். அரபு உலகில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள். அச்சமூட்டும் மனநிலை. பன்னாட்டு சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எனப் புதிய கதைவெளியினை மையமாகக் கொண்டவை
இரண்டாவது வகைத் தமிழ்நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாகச் சென்றவர்கள் கர்நாடகத்திலே தங்கி வாழும் போது அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கம். சடங்குகள் நம்பிக்கைகள். திருமண உறவுகள். மற்றும் மாறும் தலைமுறைகளின் அடையாளச்சிக்கல்கள். புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். பொருளாதாரப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள்.
மலையாளச் சிறுகதைகளில் இது போன்ற அரபு தேச வாழ்க்கை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னடத்திற்கு நிச்சயம் இது புதுவகைத் திறப்பாகவே அமைந்திருக்கும். கனகராஜ் கதையை வளர்த்தெடுக்கும் முறை அழகாக உள்ளது. நினைவுகளையும் நிகழ்வினையும் அவர் அழகாகப் பின்னிச் செல்கிறார். அதிக உரையாடல்கள் கிடையாது. காட்சிகளாக விரியும் இந்த எழுத்தின் வழியே கடந்தகாலமும் நிகழ்காலமும் அழகான இணைந்து விரிகின்றன.
முதற்கதையில் பாகிஸ்தானியர்களுடன் கார் பயணம் செல்லும் போது எதிர்கொள்ளும் நெருக்கடி மெல்ல விரிவு கொண்டு அந்நிய தேசத்தில் சூழ்நிலை கைதியாக மாறும் ஒருவனின் மனநிலையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. இன்னொரு கதையில் சலூனில் பணியாற்றும் ஒருவர் அங்கு வரும் அரபிகளை எப்படி அடையாளம் காணுகிறார் என்ற சமகால வாழ்வியலில் துவங்கிக் கடந்த காலத்தில் நாவிதராக அழைத்துவரப்பட்ட தாத்தாவின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறது. காலம் மாறிய போதும் ஒடுக்குமுறை மாறவேயில்லை. கடந்தகாலத்தின் இருட்டிற்குள் ஒருவர் கைவிளக்கேந்திச் செல்வது போலவே நிகழ்வுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பெருமாயி கிழவியை வாசிக்கையில் மாக்சிம் கார்க்கியின் கிழவி இசர்கீல் நினைவில் வந்து போகிறார். அந்த அளவு அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரமது.

இந்தக் கதைகளை வாசிக்கையில் இவை கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுவதை உணர முடிகிறது.
வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற தற்காலக் கன்னடச் சிறுகதைகளைத் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். அதில் தான் கனகராஜின் கதையை முதன்முறையாக வாசித்தேன். சிறந்த கதையது.
இந்தத் தொகுப்பில் 11 கதைகள் உள்ளன. இந்தக் கதைகளில் வெளிப்படும் மாயமும் கனவுத்தன்மையும் யதார்த்த சித்தரிப்புகளும் புதுமையானது.
: ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி கதையில் ஹிந்துஸ்தானி இசை மையமாக இருக்கிறது. ஞானச் சரஸ்வதியாகக் கொண்டாடப்படும் கிஷோரி அமோன்கர் மிகச்சிறந்த பாடகி. அவரது பாடல்களை நானும் விரும்பிக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையில் நியூயார்க் நகரில் ஒரு இளம்பெண் அவரை நினைவு கொள்ளும் விதம் அபாரமானது. தேர்ந்த கதைசொல்லியால் தான் அதை உருவாக்கமுடியும். கனகராஜ் அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்
புரிந்து கொள்ளப்படாத திருமண உறவின் கசப்புகளை மெல்லிய இழையாக இவரது கதைகளில் காணமுடிகிறது.
கனகராஜ் தற்போது தமிழிலும் எழுத ஆரம்பித்திருக்கிறார். பனிப்பாறை என்ற அவரது கதை காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளது. சிறந்த கதைகளை எழுதி வரும் அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
வாட்டர்மெலன் போலப் புதிய இளம்படைப்பாளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் சிறந்த மொழியாக்கத்தைத் தந்த கே.நல்லதம்பிக்கும் அன்பும் பாராட்டுகளும்
வாட்டர்மெலன் தமிழ்வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. கனகராஜ் பாலசுப்ரமண்யம் இன்னும் பல உயரங்களைத் தனது எழுத்தில் அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு என் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.