தற்செயலின் கிளைகள்

The Bandits of Orgosolo 1961ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். இயக்குநர் விட்டோரியா டி சேடா இயக்கியது , பலரும் இவரது பெயரைக் கேட்ட மாத்திரம் டிசிகாவை நினைத்துக் கொள்வார்கள். அவர் வேறு இவர் வேறு. இவரும் இத்தாலிய நியோ ரியலிச இயக்குநர்களில் ஒருவரே. நிலக்காட்சியினைப் பிரதானமாகக் கொண்டு இந்தப் படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

மத்திய தரைக்கடல் கடலில் உள்ள சார்டினியா தீவின் மையத்தில் இருக்கும் நீண்ட மலைப்பகுதியில் ஆடு மேய்க்கிறவர்கள் வாழுகிறார்கள். சிறிய கிராமங்கள். அதைச் சுற்றிலும் பெரியதும் சிறியதுமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர். தூரத்து ஓக் காடுகளை ஒட்டிய மேய்ச்சல் நிலம் தேடி மேய்ப்பர்கள் மந்தையோடு செல்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் மைக்கேல் மற்றும் அவனது தம்பி பெப்பேடு இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிக் கொண்டு போகிறார்கள். கையில் தேவையான ரொட்டிகள். குடிநீர் மற்றும் பாத்திரங்களுடன் ஒரு துப்பாக்கியைத் தோளில் போட்டபடியே அவர்கள் நீண்ட தூரம் நடக்கிறார்கள். வேட்டையாடிக் கிடைத்த விலங்கைச் சுட்டு உண்பது அவர்களின் வழக்கம். அவர்களின் வாழ்க்கைக்கெனத் தனி விதிகள் இருந்தன

ஒரு நாள் மைக்கேல் மலையுச்சி ஒன்றில் இரவு முகாம் அமைத்துத் தங்குகிறான். அப்போது இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் திருடப்பட்ட பன்றிகளுடன் மூன்று கொள்ளைக்காரர்கள் அங்கே வந்து சேருகிறார்கள். அவர்கள் பன்றியைச் சுட்டுச் சாப்பிடுகிறார்கள். திருடப்பட்ட இறைச்சி தனக்கு வேண்டாம் என மைக்கேல் விலகிக் கொள்கிறான். அந்தக் கொள்ளையர்கள் அங்கே தங்கி இரவை கழிக்கிறார்கள்

மறுநாள் காலை அவர்களைத் தேடி போலீஸ் வருவதைக் கண்டதும் ஒடி ஒளிகிறார்கள். சுடப்பட்ட பன்றி தலையைக் கண்டுபிடித்துவிடுவார்களே என நினைத்த மைக்கேல் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறான். போலீஸ்காரர்கள் அந்த முகாமை சோதனை செய்கிறார்கள். கொள்ளையர்களுக்கு மைக்கேல் உதவுவதாகச் சந்தேகம் கொள்கிறார்கள். இந்த நிலையில் மலையுச்சியில் கொள்ளையர் இருப்பதை அறிந்து அவர்களைத் துரத்திப் போகிறார்கள். இரண்டு பக்கமும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது இதில் ஒரு காவலர் சுடப்பட்டு இறந்து போகிறார்

காவலர்களுக்குப் பயந்து மைக்கேல் தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு எதிர் திசையில் தப்பித்துத் தப்பியோடுகிறான்.

போலீஸ் அவனையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். மைக்கேல் செய்த உதவி அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. போலீஸ் கண்ணில் படாமல் ஆடுகளை ஒரு குகையில் கொண்டு போய் அடைக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மலையை விட்டு இறங்கி உணவு சேகரிக்கச் செல்கிறான் மைக்கேல். அவன் தம்பி ஆட்டுமந்தையுடன் காவல் இருக்கிறான்

தன்னைக் காவலர்கள் கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து தம்பியிடம் ஆட்டுமந்தையை ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவான செல்ல முடிவு செய்கிறான்.

அவன் நினைத்தது போலவே போலீஸ் பட்டாளம் அவனைத் தேடி வருகிறது. அவர்களிடம் ஒளிந்து தப்புகிறான்

மைக்கேலின் தம்பி ஆடுகளை மலையுச்சிக்கு ஒட்டிக் கொண்டு செல்கிறான். மலையின் மறுபுறம் போய்விட்டால் தப்பிவிடலாம் என நினைக்கிறான். ஆனால் ஆடுகள் தொடர்ந்து நடந்து கால்கள் வீங்கிய நிலையில் தடுமாறி விழுகின்றன.

போலீஸ் மைக்கேலின் தம்பியை வளைத்துக் கொள்கிறது. அவர்களிடமிருந்து தம்பியைக் காப்பாற்றி ஆடுகளுடன் மலையைக் கடந்து போக முயல்கிறான் மைக்கேல். ஆனால் எதிர்பாராத விதமான சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்பாவியான மைக்கேல் முடிவில் கொள்ளைக்காரனாக மாறுகிறான். அதிகாரத்தின் துரத்தல் அவனை இப்படித் திருடனாக மாற்றுகிறது

மைக்கேல் இரவில் கிராமத்தைத் தேடிச் செல்வதும் மலையுச்சியில் சந்திக்கும் இன்னொரு மேய்ப்பனுடன் குடிநீருக்காகச் சண்டையிடுவதும். வெண்ணெய் மற்றும் ஆட்டு ரோமங்களைச் சேகரித்து விற்பதும் அவனுக்கு உதவி செய்யும் இளம்பெண்ணின் உதவியும் மிக அழகான காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன

போலீசாரால் வேட்டையாடப்பட்டு, ஒர்கோசோலோவுக்குத் திரும்புவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு மைக்கேல் தள்ளப்படுவது சிறப்பாகச் சித்தரிக்கபட்டுள்ளது

படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. இது முடிவற்ற பழிவாங்குதல் என்பதன் அடையாளத்துடன் படம் நிறைவு பெறுகிறது. எங்கோ ஒர்கோசோலோ நடந்த நிகழ்வு என்றாலும் எனது கிராமத்தையும் அங்கே ஆடுகளை ஒட்டி வரும் கீதாரிகளுக்குள் ஏற்பட்ட மோதல்களையும் படம் நினைவுபடுத்துகிறது

விட்டோரியோ டி சேட்டா 1959 ஆம் ஆண்டில் இந்தக் கதையை ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார். அதன் வெற்றியை இதை முழுநீள படமாக மாற்றியிருக்கிறது.

விட்டோரியா டி சேட்டா கதை நிகழும் நிலப்பரப்பை ஒரு கதாபாத்திரம் போலச் சித்தரித்துள்ளார். அது தான் படத்தின் சிறப்பம்சம். அந்த மலைப்பகுதி பைபிளில் வரும் நிலவெளியை நினைவுபடுத்துகிறது.

மைக்கேலுக்கும் அவனது தம்பிக்குமான உறவு அழகானது. அவன் ஆடுகளை ஒட்டிச் செல்வதாலே தன்னைப் பெரிய மனிதனாக நினைத்துக் கொள்கிறான். அவனிடம் பயமேயில்லை. தன்னால் அண்ணனைக் காப்பாற்ற முடியும் என அவன் நம்புகிறான். பிடிபடும் காட்சியில் அவன் காவலர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், ஆடுகள் இறக்கும் போது அவன் அடையும் பதைபதைப்பும் உணர்ச்சிப்பூர்வமானது

மலையுச்சிக்கு ஆடுகளை ஒட்டிச் செல்லும் போது அந்த நிலம் விசித்திரமான தோற்றம் கொள்கிறது. கடன்பட்ட மைக்கேலின் குடும்பமும் அவனது தாயும் சில காட்சிகளே வருகிறார்கள். ஆனால் அதற்குள்ளாகவே அவன் ஏன் இப்படித் தப்பியோட விரும்புகிறான் என்பதன் காரணத்தை அழகாக விளக்கிவிடுகிறார்கள்

உண்மையான கொள்ளையர்களைக் காவலர்களால் பிடிக்கமுடியவில்லை. அந்தக் கோபம் மைக்கேல் மீது திரும்புகிறது. அவனை வேட்டையாடத் துடிக்கிறார்கள். அவனோ தன் மீது தவறில்லை என்று நிரூபிக்க முயலுகிறான். அதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை.

மைக்கேல் இரவில் ரகசியமாகக் கிராமத்திற்குள் வரும் காட்சி எத்தனை அழகாக உள்ளது. அவனைப் பின்கட்டிற்குக் கூட்டிப் போய்ப் பேசுகிறார்கள். காவலர்கள் அறியாமல் அந்தப் பெண் தனியே செல்லுவதும் வழியில் காவலர்கள் அவளை எதிர்கொள்வதும் துல்லியமான விவரிப்புகள்.

வேட்டையில் தான் படம் துவங்குகிறது. இன்னொரு வேட்டையோடு படம் நிறைவு பெறுகிறது.

இந்தப்படம் Lonely Are the Brave என்ற கிர்க் டக்ளஸ் படத்தை நினைவுபடுத்தியது. அதிலும் இது போலக் காவல்துறையிடமிருந்து தப்பி மெக்சிகோ எல்லையிலுள்ள பாறைகள் நிறைந்த மலைப்பகுதி ஒன்றுக்கு ஜாக் பர்ன்ஸ் சென்றுவிடுவான் அவனைக் காவலர்கள் துரத்தி வருவார்கள். மலையுச்சியில் மறைந்தபடியே அவர்களை எதிர்கொள்ளுவான். நண்பனைக் காப்பாற்ற அவன் செய்த உதவி முடிவில் அவனையே காவு வாங்குவதாகக் கதை அமைந்திருக்கும். அதே பாணியில் தான் The Bandits of Orgosolo வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படத்தினைப் போலக் கிர்க் டக்ளஸ் படத்தில் நிலக்காட்சிகள் கவித்துவமாக உருவாக்கப்படவில்லை.

மைக்கேல் தனது முடிவுகளைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதேயில்லை. அது தான் மேய்ப்பர் வாழ்க்கையில் அவன் கற்றுக் கொண்ட பாடம். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் போதும் அவன் தம்பியை, குடும்பத்தைக் காப்பாற்றவே முயலுகிறான். முடிவில் அவன் வாழ்க்கை திசைமாறுவதும் இதன் பொருட்டே.

மைக்கேல் தன் தம்பியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது இனி தனது வாழ்க்கை இயல்பிற்குத் திரும்பாது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறான். வாழ்க்கை நெருக்கடி முடிவில் அவன் விரும்பாத செயலை செய்ய வைக்கிறது.

இனி அவன் தேடப்படும் குற்றவாளி மட்டுமே. அவனது எளிய வாழ்க்கை, அன்பான குடும்பம் எல்லாமும் அவனை விட்டுப் பறிபோய்விட்டது. அந்தத் துயரைப் பார்வையாளர்கள் முழுமையாக உணருகிறார்கள். அதன் காரணமாக முடிவில் அவனது செயல் குற்றமாகக் கருதப்படுவதில்லை.

ஏன் ஒருவனின் இயல்பு வாழ்க்கை அவன் செய்த உதவியால் பாதிக்கபடுகிறது. கொள்ளையர்கள் என்று அறிந்த போதும் அவன் உதவி செய்கிறான். காரணம் அவர்களுக்கு வரி கொடுக்கமுடியாமல் கொள்ளையர்களாக உருமாறியவர்கள் என்ற உண்மையை அறிந்திருப்பதே. அவன் காட்டிய அன்பு அவனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.

படத்தில் மைக்கேல் குற்றவாளியாக்கபடுகிறான். அதை அனைவரும் அறிந்தேயிருக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து எப்படி மீளுவது என்று எவருக்கும் தெரியவில்லை. மைக்கேல் தானே முடிவை எடுக்கிறான்.

வணிக ரீதியான திரைப்படமாக இருந்தால் இந்த மொத்த படமும் கதாநாயகனின் பிளாஷ்பேக்காக உருவாக்கபட்டிருக்கும். அப்படி செய்யாமல் இதை மட்டுமே தனித்த திரைப்படமாக்கியது தான் இயக்குநரின் கலைத்தன்மையின் அடையாளம்.

••

0Shares
0