தற்செயல்


கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக துருப்பிடித்த ஒரு பூட்டு கையில் தட்டுபட்டது. யாருடைய பூட்டு அது என்று தெரியவில்லை. மிகச் சிறியதாக மணலேறிப்போயிருந்தது. யார் இதை கொண்டுவந்தது. எதற்காக கொண்டு வந்திருப்பார்கள். எப்போதிலிருந்து இது கடற்கரையில் கிடக்கிறது.


யோசிக்க யோசிக்க வேடிக்கையான எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன.


இந்த பூட்டால் இரண்டு மணல்துகள்களை ஒன்று சேர்த்து பூட்டமுடியுமா? இல்லை கடல் அலையை கரை வரவிடாமல் பூட்டமுடியுமா?


கடலையும் கால்களையும் ஒன்று சேர்க்கும் பூட்டு இருக்கிறதா? இல்லை கடலின் மீதான ஆகாசத்தையும் நீரையும் இணைக்கும் பூட்டு உண்டா? உண்மையில் உலகின் புரதான பூட்டு தண்ணீர் தானோ? அது இரண்டு மணல்துகள்களை ஒன்று சேர்த்து பூட்டுகிறதே?


கண்ணில் விழுந்த காட்சிகளை கண் வெளியே அனுமதிக்காமல் பூட்டிக் கொள்கிறதா? காகிதத்தில் உள்ள சொற்கள் எந்த பூட்டால் ஒன்றிணைக்கபட்டிருக்கிறது. நுரையும் அலையும் ஏதாவது பூட்டால் இணைக்கபட்டிருக்கிறதா? சூரியனை கண்ட பூட்டு என்ன செய்திருக்கும். காற்று  பூட்டை தூக்கி செல்ல முயன்றிருக்குமா ?




சாவியை தொலைத்த பிறகு பூட்டின் உபயோகம் தான் என்ன? அது உண்மையில் விடுதலை அடைகிறதா இல்லை அர்த்தமற்று போகிறதா?


ஒரு பூ தனது வாசனையை தவிர வேறு வாசனைகள் உள்ளே நுழைந்துவிடாமல் பூட்டிக் கொண்டிருக்கிறது.


இரவு பகல் தனக்குள் நுழைந்துவிடாமல் பூட்டி கொண்டிருக்கிறது.


வேப்பம்பழம் தனக்குள்ளாக ஒரு விதையை பூட்டி வைத்திருக்கிறது.


மலை தனக்குள் மௌனத்தை பூட்டி வைத்திருக்கிறது.


நாவு தனக்குள் சொற்களை பூட்டி வைத்திருக்கிறது.


பனி தனக்குள் குளிர்ச்சியை பூட்டி வைத்திருக்கிறது.


இப்படியாக மனம் சலிப்புறும்வரை இந்த விளையாட்டு நீண்டது.


திடீரென பூட்டு அழகான இயற்கை வடிவங்களில் ஒன்றை போல உருமாறியிருந்தது. அதை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன். என்ன அற்புதமான வடிவமைப்பு. எவ்வளவு சூட்சுமம். உலகில் எண்ணிக்கையற்ற பூட்டுகள் இருக்கின்றன. அதில் சில சாவியே இல்லாத பூட்டுகள்.


உண்மையில்  நமது பயமே பூட்டாக தொங்கி கொண்டிருக்கிறது.


 
**


2


ஒரு அடுக்குமாடி வீடு ஒன்றின் கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்தேன். முப்பது தளங்களுக்கும் மேல் இருக்க கூடும். மதிய நேரம். வெயில் உச்சியில் நின்றது. காற்றோட்டமும் இல்லை. அடைத்து சாத்தபட்ட ஜன்னல்கள். ஆகாசத்தில் சலனமேயில்லை. ஒரு எறும்பு சுவரில் சென்று கொண்டிருப்பதை கண்டேன்.


அவசரமேயில்லாமல் சென்று கொண்டிருந்தது. எங்கே செல்கிறது அந்த எறும்பு. இவ்வளவு உயரம் இருக்கிறதே என்று அது யோசிக்குமா? ஏதாவது ஒரு புள்ளியில் நின்று திரும்பி பார்க்குமா.


 உச்சிக்கு சென்ற பிறகு பூமியில் உள்ள பொருட்கள் அதற்கும் எறும்பு போல தான் காட்சி தருமா? எறும்புகளுக்கு அந்த கட்டிடம் என்னவாக தெரியும்.  அந்த மதியம் எப்படி உணரப்படும். அது ஏன் தனியே அலைகிறது.


எறும்பு வெயிலை சுமந்தபடியே மேலேறிக் கொண்டிருக்கிறது. அது சூரியனை நிமிர்ந்து பார்க்கிறது. பிறகு தலையை சிலுப்பியபடியே மேலே போகிறது. எறும்பின் கால்களால் சாத்தியமாவது ஏன் மனிதரின் கால்களால் சாத்தியமாவதில்லை.  இந்த அடுக்குமாடி வீடு உள்ள இடத்தில் ஒரு குளமும் அதன் கரையில் நிறைய மரங்களும் ஒரு காலத்தில் இருந்தன என்பது எறும்பின் நினைவில் இருக்குமா? 


நீர்தாரை வழிவது போல வெயில் சுவரில் வடிகிறது. பாகு போன்ற பதம் உள்ள வெயிலது. எறும்பின் நாவு அதை ருசித்திருக்குமா?


அந்த எறும்பு என் கண்ணில் இருந்து மெல்ல மறைகிறது. எறும்பை கூட தொடர்ந்து பார்க்க முடியாத பலவீனமான புலன் தான் கண்களா? வெயில் எறும்பு போல ஊர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் எறும்பை வெயில் தின்றுவிட்டதா?


இல்லை முன்பு நான் கண்ட எறும்பு வெயில் தானா? வெறும்கட்டிடம் மட்டுமே தெரிகிறது. எந்த வீட்டையும் சட்டை செய்யாமல் நகரின் அதிஉயரத்திற்கு தனியே ஒரு எறும்பு சென்று கொண்டிருக்கிறது.


ஒரு நாளைக்கு அது எத்தனை முறை இப்படி ஏறி இறங்கும் என்று தெரியவில்லை. கவலையாக இருக்கிறது. அதே நேரம் மிகுந்த நெருக்கமும் நம்பிக்கையும் தருவதாகவும் இருக்கிறது.


*

0Shares
0