தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை

தஸ்தாயெவ்ஸ்கியின் தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஐந்து முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் யூல் பிரைனர் (Yul Brynner ) நடித்த The Brothers Karamazov 1958ல் வெளியானது. Richard Brooks இயக்கியிருப்பார். நாவலின் மையக்கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

Bratya Karamazovy (1969) என்ற ரஷ்யத் திரைப்படம் 1969ல் வெளியானது. அதுவும் முழுமையாக நாவலைச் சித்தரிக்கவில்லை. செக் மொழியிலும் பிரெஞ்சிலும் இந்நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்தத் திரைப்படமும் நாவலின் மொத்த உலகையும் சித்தரிக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானில் The Brothers Karamazov தொலைக்காட்சி தொடராக வெளியானது. ஆனால் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

Bratya Karamazovy என்ற ரஷ்யத் தொலைக்காட்சி தொடர் ஒன்பது மணி நேர அளவிற்குக் கரமசோவ் சகோதரர்கள் நாவலை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இதுவரை பார்த்த கரமசோவ் படங்களில் இதுவே மிகச்சிறந்த ஒன்று. முந்தைய கரமசோவ் படங்களை விடவும் இதில் கதாபாத்திரங்கள் மிகப்பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ரஷ்யாவிலே படமாக்கப்பட்டிருப்பதால் நிலக்காட்சிகளும் பழைய தேவாலயங்களும் ரஷ்ய கிராமப்புறங்களும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த நாவலின் மையமான ஃபியோதர் பாவ்லோவிச் கரமசோவ் மறக்கமுடியாத கதாபாத்திரம். கீழ்மையின் மொத்த உருவம் போலவே இவரைத் தஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். இவரது பிள்ளைகளான அல்யோஷா , இவான் மற்றும் டிமிட்ரி கரமசோவ் ஆகியோருக்குள் இவரது ஆளுமையின் பாதிப்பு வேறுவேறு விதமாகப் படிந்திருப்பதை உணர முடிகிறது. கோகலின் தாரஸ் புல்பாவில் வரும் தந்தையும் இவரும் நேர் எதிரான இரண்டு மனிதர்கள். ஆனால் சில விஷயங்களில் ஒன்று போலவே செயல்படுகிறவர்கள்.

ஃபியோதர் பாவ்லோவிச் கரமசோவ் கொல்லப்படுவதும் அதற்குத் தாங்களும் காரணம் எனப் பிள்ளைகள் சுயவிசாரணை செய்து கொள்வதும் நாவலின் முக்கிய அம்சம். ஏன் தந்தை கொல்லப்படுகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலில் அடகுக்கடை நடத்தும் பெண் கொல்லப்படுகிறாள். அவள் மீது ரஸ்கோல்னிகோவ்விற்கு முன்பகை கிடையாது. ஆனால் அவளைக் கொலை செய்கிறான். அக்கொலையின் வழியாகவே அவன் தனது சுயவிசாரணையைத் துவக்குகிறான். தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை ஆராய்கிறான். உலகம் குற்றத்தின் விளைநிலமாக இருப்பதைக் காணுகிறான்.

ரஸ்கோல்னிகோவ் செய்த கொலை கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான குற்றங்கள் நாவலில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அவை குற்றம் என்று கூட உலகம் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் நடத்தப்படும் விதம். குதிரை பாரம் சுமக்கமுடியாமல் விழுவது போன்றவை உலகில் பார்வையில் சாதாரண விஷயங்கள். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி அவற்றை அப்படி விட்டுவிட மறுக்கிறார்.

தந்தை கரமசோவ் ஏராளமான பகையைச் சம்பாதித்துக் கொண்டவர். ஆனால் அவரது கொலை வெளியாட்களால் நிகழ்வதில்லை. தந்தை கொல்வது என்பது வெறும் நிகழ்வில்லை. அது ஒரு அடையாளம். வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்து வரும் குற்றம்.

மிருகங்கள் தனது வளர்ந்த குட்டிகளைப் போட்டியாளராகவே கருதுகின்றன. தந்தை கரமசோவ் அப்படித்தான் நடந்து கொள்கிறார். திருமணமோ, மனைவியோ, பிள்ளைகளோ ஏன் அவருக்கு எந்த நெருக்கத்தையும் தரவில்லை. இருவருக்கு நேர் எதிராகப் பாதர் ஜோசிமா துறவியாக வாழுகிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவர் ஒரு தந்தையைப் போல நேசம் கொண்டிருக்கிறார். அன்பு காட்டுகிறார். தந்தை என்பது நடந்து கொள்ளும் முறை. ஆளுமை வெளிப்பாடு தான் போலும். உதிர உறவால் மட்டும் ஒருவர் தந்தையாகிவிட முடியாது என்று தான் தஸ்தாயெவ்ஸ்கி சொல்கிறார் போலும்

சோபாக்ளிசின் ஒடிபஸ் நாடகத்தில் . ஒடிபஸ் பிறந்தவுடனே அவன் தனது தந்தையைக் கொன்று தாயை மணம் முடிப்பான் என்று தெய்வவாக்குச் சொல்கிறது. ஒடிபஸ் தனது தந்தை யாரென அறியாமலே அவரைக் கொல்கிறான். தாயைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்தப் பாவத்திற்காக அவனது தேசம் பாதிக்கப்படும் போது யார் குற்றவாளி என அவனே தேடுகிறான். தன் குற்றங்களை அறிந்து கொள்ளாமல் குற்றவாளியைத் தேடும் ஒடிபஸ் முடிவில் உண்மையை அறிந்து கொள்கிறான். தனது தவறுகளுக்குத் தண்டனையாகத் தானே கண்களைப் பறித்துக் கொண்டுவிடுகிறான்

கரமசோவ் சகோதர்கள் நாவிலில் ஒடிபஸின் சாயலை காணமுடிகிறது.. குற்றத்திற்கும் தனக்குமான உறவை அறியாமல் குற்றவாளியைத் தேடும் உண்மை இதிலும் வெளிப்படத்தானே செய்கிறது.

அல்யோஷாவின் வழியாகவே தஸ்தாயெவ்ஸ்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் துறவி ஜொசிமா இந்தத் தொடரில் மிகச் சரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவர் பேசும் பாணியும் நடத்தையும் நாவலின் வரிகள் உயிர்பெற்று வருவதைப் போலவே உள்ளது.

இந்த நாவலைப் பற்றிய விமர்சனக் கட்டுரை ஒன்றில் கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

மனித மேன்மைகளும் கீழ்மைகள் என்று சொல்லப்படும் குணங்களும் எதிரெதிர் நிலைகளில் அல்லாமல் ஒன்றாக ஒரு நபரிடமே பயணிக்க முடியும், இருட்டிலிருந்தே ஒளி பரிணமிக்க முடியும், அந்த இரண்டு நிலைகளையும் மனிதன் பாகுபாடு இல்லாமல் அங்கீகரிப்பதின் மூலமே, அதைப் புரிந்து தழுவிக்கொள்வதின் வழியாகவே மீட்சி சாத்தியம் என்பதையே தஸ்தயவேஸ்கியின் எழுத்துக் காட்டுகிறது. அதனால் தான் தீமையின் சகல தீற்றல்களைக் கொண்ட தந்தை கரமசோவை இன்னும் பரிணமிக்காத குழந்தையாக, நம்மை ஏற்றுக் கொள்ள வைக்க முடிகிறது.

தந்தை கரமசோவிலிருந்து தான் சைபீரியாவுக்குச் சென்று சித்தார்த்தனாக மாற வாய்ப்புள்ள திமித்ரியும், செய்யாத குற்றத்திலும் தன் பொறுப்பைக் காணும் இவானும், களங்கமேயற்ற அல்யோஷாவும் பிறக்க முடியும். அதனால் தான் நாவலின் முடிவில் நாவலாசிரியர், ‘வாழ்க கரமசோவ்’ என்று சொல்லும் போது நாமும் வாழ்க என்று சொல்ல முடிகிறது..

அல்யோஷா குழந்தைகளுக்குச் சொல்லும் உபதேசத்தில், குழந்தைப்பருவத்தில் நமக்கு நிகழ்கிற ஒரேயொரு நல்ல நிகழ்ச்சியின் நினைவு நமக்கு இருந்தால் போதும், அது நாம் எத்தனை தீயவராக வருங்காலத்தில் மாறினாலும் நம்மைக் கடைத்தேற்றி விடும் என்கிறான். அது தஸ்தயவெஸ்கியின் நம்பிக்கையாக இருக்கக்கூடும். குழந்தைகளின் மரணங்களும் அவர்கள் படும் துயரங்களும் கடவுளுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் தஸ்தயேவ்ஸ்கிக்கு வலுவாக இருக்கிறது.

சிறுவன் இல்யூஷாவின் இறுதி ஊர்வலத்தில் அவன் மீது இடப்பட்ட ஒரு மலர் உதிரும்போது, “அந்த மலருக்கு அந்தகதி, ஏன் நேர்ந்ததென்று கடவுளுக்கே வெளிச்சம்!” என்ற ஆசிரியக் கூற்று வருகிறது. இதைத் தஸ்தயவெஸ்கியின் கேள்வியாகவும் நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம்

இந்தப் புரிதல் தஸ்தாயெவ்ஸ்கியையும் கரமசோவையும் சரியாக உள்வாங்கிக் கொண்டதன் அடையாளம்.

தி பிரதர்ஸ் கரமசோவ் தொலைக்காட்சி தொடர் இணையத்தில் ஆங்கிலச் சப்டைட்டில் உடன் காணக்கிடைக்கிறது.

0Shares
0