கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன.
நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு வெண்ணிற இரவுகள் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைத்தது. மற்ற நாவல்களை, குறுநாவல்களை, சிறுகதைகளை ஆங்கிலம் வழியாகவே வாசித்தேன்.
இன்று என்னிடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா நூல்களும் இருக்கின்றன. இதில் The Brothers Karamazov நாவல் ஐந்து வேறுபட்ட மொழிபெயர்ப்புகளாக வைத்திருக்கிறேன். நான் தஸ்தாயெவ்ஸ்கியை விரும்பி வாசிப்பவன். இலக்கியத்தின் நுட்பங்களை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய A Writer’s Diary இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளது. இது எழுத்துக் கலை சார்ந்த டயரிக் குறிப்புகள் அல்ல. தனது சமகாலப் பிரச்சனைகள், நிகழ்வுகள் குறித்துத் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்புகள். இந்த நாட்குறிப்புகள் மாத இதழாக வெளிவந்து பின்பு இது தனி நூலாகத் தொகுக்கப்பட்டது.
நாட்குறிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு மாத இதழை வெளியிட வேண்டும் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆசை கொண்டிருந்தார். இதற்காகவே ஒரு இதழை உருவாக்கினார். அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்புகளுடன் வாசகர்களின் எதிர்வினையும் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. புதுமையான இதழாக இதைக் கொண்டாடிய வாசகர்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்புகளை விரும்பிப் படித்தார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை, சிறுகதைகளைப் போல இதை வாசிக்க முடியாது. சற்று கடினமான நூல். குறிப்பாகத் தஸ்தாயெவ்ஸ்கியின் சமகால எழுத்தாளர்கள். ரஷ்யப் பண்பாட்டு சூழல். அரசியல், மற்றும் அவரது காலத்தைய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே இதில் உள்ள பல கட்டுரைகளைப் புரிந்து கொள்ள முடியும்
இந்நூலில் தஸ்தாயெவ்ஸ்கி தனது நாவல்களில் வெளிப்படுத்தாத எண்ணங்களை, சமூகப் பிரச்சனைகள் சார்ந்த விவாதங்களை, புரிதல்களை முன்வைக்கிறார் என்பதால் இந்த நாட்குறிப்புகள் தீவிரவாசகனுக்கு அவரது ஆளுமையின் வீச்சை புரிந்து கொள்ளச் செய்கின்றன.
யூதப் பிரச்சனை, ரஷ்ய அரசியல் நிலவரம், ஸ்லாவ்களின் நிலைப்பாடுகள். மதம் குறித்த எண்ணங்கள், கலையின் நோக்கம் மற்றும் செயல்பாடு, நீதி மன்ற செயல்பாடுகள், தற்கொலை நிகழ்வுகள். சக்கரவர்த்திப் பீட்டரின் நிலச்சீர்த்திருத்தங்கள் குறித்த கண்ணோட்டம், ரஷ்யக் கட்டிடக்கலை, ரஷ்ய ஓவியர்களின் தனித்துவம். விவசாயிகளின் வாழ்க்கை முறை, புனைகதை, விமர்சன கட்டுரை எனப் பல்வகையான விஷயங்களைத் தொட்டு தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.
தஸ்தாயெவ்ஸ்கியிடம் காணப்படும் யூதவெறுப்பும் எதிர்ப்பும் இந்த நாட்குறிப்பில் வெளிப்படையாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
1450 பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளிலும் இருந்து தேர்வு செய்து 600 பக்கங்களை ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்பு என சா.தேவதாஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கெட்டி அட்டை பைண்டிங்கில் ரஷ்யப்புத்தகங்கள் போலவே சிறப்பாக வெளியிட்டுள்ளது நூல் வனம் பதிப்பகம்.
ரஷ்ய இலக்கியங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் மணிகண்டன். அவரது நூல் வனம் குழந்தைகளுக்கான நூல்களைச் சிறப்பாக வெளியிட்டு வருகிறது. முக்கியமான ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற மணிகண்டனின் கனவே இந்நூல் வடிவம் கொண்டிருக்கிறது
A Writer’s Diary நூலை மொழிபெயர்ப்புச் செய்வது மிகவும் கடினம். காரணம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய காலகட்டத்தின் சமூக அரசியல் சூழ்நிலை தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிற நிகழ்வுகள். கலைஞர்கள். ஆளுமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். மேலும் தஸ்தாயெவ்ஸ்கி எதை முக்கியப்படுத்துகிறார் என்பதை ஆழ்ந்து உள் வாங்கியிருக்க வேண்டும். சா.தேவதாஸ் ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொண்டதோடு மிகவும் சிரத்தையடுத்து மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
குறிப்பாக இந்த நூலுக்காகத் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி விரிவான முன்னுரையைத் தேவதாஸ் எழுதியிருக்கிறார். அது எந்த அளவு தீவிரமாகத் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.
1873 முதல் 1881 வரை எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள் ரஷ்யாவிற்கு வெளியே அதிகம் கொண்டாடப்படவில்லை. மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே இந்நூல் பேசப்பட்டது. ஆனால் Northwestern University சார்பில் புதிய ஆங்கில மொழியாக்கம் வெளியான பிறகு தஸ்தாயெவ்ஸ்கியை தொடர்ந்து வாசிப்பவர்களும் விமர்சகர்களும் இந்நாட்குறிப்புகளை சிலாகித்துப் பேச ஆரம்பித்தார்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்து சொந்த மொழிக்குப் பதிலாக அந்நிய மொழியைப் பேசுவது முட்டாள்தனமானதாகும். இதன் மூலம் அசலான சிந்தனைகள் உருவாகாதபடி நம் தலையை நாசப்படுத்திக் கொள்கிறோம் எனத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அவை சத்தியமான வார்த்தைகள்.
இன்னொரு இடத்தில் தற்கொலை செய்து இறந்து போன தையற்காரியைப் பற்றி எழுதும் போது அவள் இந்தப் பூமியில் வாழ முடியாதபடி செய்த தவறு என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்.
நவம்பர் மாத இதழில் நாட்குறிப்பிற்குப் பதிலாக ஒரு கதையை எழுதுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. அதைக் கதையொன்றோ, நினைவுக்குறிப்பு என்றோ வரையறை செய்யமுடியாது என்று முன்வார்த்தைகள் கூறியே துவங்குகிறார். அக்கதைச்சுருக்கம் அவரது புகழ்பெற்ற அடக்கமான பெண் ( The Meek one ) என்ற சிறுகதையின் முன்வரைவு போலவே இருக்கிறது
சிறுவர்கள் வாழ்விலிருந்து ஒரு கதை என்ற ஒரு பகுதி இந்நூலில் இருக்கிறது. அதில் வரும் சிறுமி எத்தனை வெளிப்படையாக பேசுகிறாள். அவளது கதாபாத்திரம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. இந்நூலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதியது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ஓவியத்தைச் சிறப்பாக வரைந்துள்ள ஓவியர் மணிவண்ணனுக்கும், நூலை நேர்த்தியாக அச்சிட்டுள்ள நூல் வனம் மணிகண்டனுக்கும், சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள தேவதாஸிற்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
••
தாஸ்தோயெவ்ஸ்கி
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
தமிழில்: சா.தேவதாஸ்
600 பக்கங்கள் | ராயல் சைஸ்
கெட்டி அட்டை பைண்டிங் | விலை ரூ. 700
நூல்வனம் பதிப்பகம்
ராமாபுரம், சென்னை – 89
