நேற்று இயக்குநர் ராஜு முருகனின் ஜிப்சி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். இந்தியாவின் சமகால அரசியல் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் படமாக ஜிப்சி உருவாக்கபட்டிருக்கிறது.
இந்த ஆடியோ விழாவில் பஞ்சாபைச் சேர்ந்த பாந்த் சிங் என்ற பாடகரைப் பற்றிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. தேனிசை செல்லப்பா அவர்கள் வெளியிட நூலை நான் பெற்றுக் கொண்டேன்.
துணிவின் பாடகன் பாந்த் சிங் என்ற நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் கமலாலயன். ராஜு முருகனின் காம்ரேட் டாக்கீஸ் நூலை வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் இதன் விற்பனை உரிமையைப் பெற்றுள்ளார்கள்
ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.
இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்.
பஞ்சாப் மாநிலத்தின் மால்வா மண்டலத்திலுள்ள பூர்ஜ் ஹப்பார் கிராமத்தினைச் சேர்ந்தவர் பாந்த் சிங். பஞ்சாபி மாநிலத்தில் தலித்துகள் மாஜாபி சீக்கியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழும் பகுதிக்கு வேஹ்ரா என்று பெயர்
மாஜாபி சீக்கியரான பாந்த்சிங் வயல்வெளியில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். அவரது ஊரில் ஐம்பத்தைந்து சதவீதம் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்தார்கள். மற்றவர்கள் தலித் மக்கள்.
2002ம் ஆண்டு இவரது மகள் பல்ஜித் கவுர் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இதற்கு நீதி கேட்டுப் போராடிய பாந்த்சிங் கடுமையாக மிரட்டப்பட்டார். ஆனால் தனது விடாமுயற்சியால் பாந்த் சிங் நீதி மன்றத்தை நாடி குற்றவாளிகளைத் தண்டிக்க செய்தார்.
இது உயர்வகுப்பினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இடதுசாரி இயக்கங்களின் உதவியோடு தொடர்ந்து போராடி வென்ற பாந்த் சிங் இன்று பஞ்சாபின் போராளிப்பாடகராக அறியப்படுகிறார்.
அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து உரத்த குரலில் பாடி வரும் பாந்த் சிங்கின் கதை ஒரு துணிவுமிக்க கலைஞனின் அடையாளமாகும்.
ஜிப்சி திரைப்படத்தில் இவர் சில காட்சிகளில் நடித்துப் பாடியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான பாந்த்சிங்கின் வாழ்க்கை வரலாற்று நூலை ராஜு முருகன் உரிமை பெற்று தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்
நேற்றைய நிகழ்விற்கு வந்திருந்த பாந்த் சிங் மிகுந்த உணர்ச்சியோடு பாடி பார்வையாளர்களை நெகிழச் செய்தார்.
துணிவின் பாடகன் பாந்த் சிங்கை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்த ராஜு முருகனுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
••