தேர் சிற்பங்கள்

தேவகியின் தேர் என்றொரு சிறுகதையை ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ஊர் ஊராகச் சென்று தேரைப் புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன் தமிழகத்திலுள்ள அரிய தேர்சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவன் தேவகியின் ஊருக்கு வந்து தங்கிய போது நடந்த அனுபவத்தைக் கதை விவரிக்கிறது.

அதே போல தேர் சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள் என்ற அக்கட்டுரை சிறப்பானது. அதிலுள்ள புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். மிகவும் உயிரோட்டமாக சிற்பங்கள் படமாக்கபட்டிருக்கின்றன.

எனது கதை அப்படியே நிஜமானது போல உணர்ந்தேன். இந்தக் கதையை எழுதும் போது அப்படி ஒரு புகைப்படக்கலைஞர் இருப்பார் என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது.

நான் நிறைய கோவில் தேர்களைக் கண்டிருக்கிறேன். அழகான சிற்பங்கள் கொண்ட தேரை பொதுமக்கள் எவரும் காணமுடியாதபடி தகரம் அடித்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருவிழா அன்று தான் தேர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும். தேர்சிற்பங்களைச் செய்தவர்கள் மகத்தான கலைஞர்கள். பேரழகுடன் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள்.

தேர் பார்க்கும் அனுபவத்தை வண்ணதாசனின் நிலை கதை மிக அழகாக சித்தரிக்கிறது. வெளியாகி எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் நினைவில் ஒளிரும் கதையது.

நீலமலை என்றொரு ஒரிசா நாவல் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்தைப் பற்றியது. சுரேந்திர மொகந்தி எழுதியிருப்பார். மிகச் சிறந்த நாவல். இப்போது அந்த நாவல் அச்சில் இல்லை. ஒரு வேளை நூலகத்தில் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஒரு ரதயாத்திரையின் பின் எவ்வளவு சரித்திரம் ஒளிந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். ( Nila Saila By Surendra Mohanty )

மதுரை சித்திரை திருவிழாவிற்கும் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

தேர் திருவிழாவில் தேர் பார்ப்பதற்காக வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களும், ஊரின் கொண்டாட்டமும் மனதில் பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

அண்ணாந்து பார்க்கும் தேருக்கும் ஒரு நாள் தான் அலங்காரம். கொண்டாட்டம். மற்ற நாட்களில் கால்கள் கட்டப்பட்ட கழுதை மட்டுமே அதையொட்டி நின்றிருக்கும். சிறார்கள் சுற்றி விளையாடுவார்கள். சூரியன் உச்சியில் நின்று வேடிக்கை பார்க்கும். பௌர்ணமி இரவில் தனித்திருக்கும் தேரைக் காண அருகில் செல்வேன். அந்த நெருக்கம் சொல்லில் அடங்காதது. தேரின் சக்கரங்களை எப்போதும் வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். கண் முன்னே நமது கலைச்செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. உன்னதமான விஷயங்களை போற்றிப் பாதுகாக்க நமக்குத் தெரியவில்லை.

வீதியில் தேர் வருவதைக் காண மாடியில் நின்றிருந்தவர்கள் இன்று தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக் கொண்டால் போதும் என்கிறார்கள். ஆட்கள் வடம் பிடித்து இழுத்த காலம் போய் இயந்திரம் இழுத்துவருகிறது. தேரோட்டம் என்பது ஆயிரம் நினைவுகளின் அடையாளம்.

தேர் வரும் போது வீதிகள் அகலமாகிவிடுகின்றன. தேர் சென்றவுடன் வீதி சுருங்கிவிடுகிறது.

ஒவ்வொரு தேரும் ஆயிரம் கதைகளின் பெட்டகம். நினைவில் அதன் சக்கரங்கள் உருண்டபடியே உள்ளன.

••

0Shares
0