நகுலன் வீட்டில் யாருமில்லை

Fables and Parables எனப்படும் குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. இந்த கதை வகைமையின் சிறப்பு அடையாளங்களாக ஜென் கதைகள், முல்லா கதைகள், சூபி கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை பேசுகின்றன.



உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான போர்ஹே, இதாலோ கால்வினோ, யாசுனாரி கவபட்டா, ஹென்ரிச் ப்யூல், காப்கா,  மார்க்வெஸ்,  டொனால்டு பார்த்தல்மே,  போன்றவர்கள் இந்த குறுங்கதை மரபை புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீதி போதிக்கவும் போதனைக்கும் பயன்படுத்தபட்ட குறுங்கதை மரபை இவர்கள் தங்கள் புனைவால் உயர்தளங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அவர்களின் குறுங்கதைகள் தந்த உத்வேகத்திலிருந்து Sudden fiction, Flash fiction, three word Story என புதிய கதைவடிவங்கள் மேற்குலகில் உருவாகியுள்ளன.



தமிழ் கதை சொல்லல் மரபிலிருந்து என் குறுங்கதைகள் உருவாகியிருக்கின்றன. இந்த தொகுப்பில் 50 குறுங்கதைகள் வெளியாகி உள்ளன.



பால்யத்திலிருந்து நான் கேட்டு வளர்ந்த கதைகளில் இருந்த நரிகளும் குள்ளர்களும் கழுதை காது கொண்ட ராஜாக்களும், அண்டரண்டா பட்சிகளும், மாயஅரக்கர்களும், தவளை இளவரசிகளும் கற்பனையான ஜீவராசிகளும்,  எழுதும் கதை மரபில் இடமில்லாமல் ஒடுங்கி போய் விட்டார்கள். கதை உலகின் புராதன குடிகளான அவர்களுக்கு மீள் உயிர்ப்பு தேவைப்படுகிறது.


குறுங்கதைகளின் மீது எப்போதுமே எனக்கு விருப்பமுண்டு. எனது முந்தைய சிறுகதை தொகுதிகளில் நிறைய குறுங்கதைகள் உள்ளன. இவை கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதியவை. இதில் ஒன்றிரண்டை தவிர மற்றவை முதல்முறையாக இந்த புத்தகத்தில் தான் அச்சேறுகின்றன.
**
இந்த நூலை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளரும் என் முன்னோடி இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் வெளியிடுகிறார். இதை பற்றி பின்நவீனத்துவ விமர்சகரும் கவிஞருமான எஸ். சண்முகம் பேசுகிறார்


**


நூல் வெளியீடு. டிசம்பர். 13. மாலை 5.30 மணி. பிலிம்சேம்பர். அண்ணாசாலை. சென்னை.


நகுலன் வீட்டில் யாருமில்லை


பக்கம்: 136     விலை: 80

0Shares
0