நடனத்திற்குப் பிறகு

ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக டால்ஸ்டாயின் நடனத்திற்கு பிறகு (After the Ball -Leo Tolstoy ) கதையைச் சொல்லலாம். இக்கதை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. காதல் ததும்பும் இக்கதையை தனது 75 வது வயதில்  டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.



கசான் பல்கலைகழகத்தில் டால்ஸ்டாய் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராணுவ அதிகாரி ஒருவரின் மகளை நடனவிருந்தில் கண்டார். பார்த்த நிமிசத்திலே அவள் மீது காதலாகி அவளையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் மீதான காதலில் ஒன்றாக கைகோர்த்து நடனமாடியிருக்கிறாள். மறுநாள் அவளைத் தேடிப்போன போது அந்தபெண்ணின் தந்தை  ராணுவ உயரதிகாரியாக இருப்பதையும் அவர் தனது வேலையாட்களை மிக மூர்க்கமாக நடத்துவதையும் கண்டிருக்கிறார். அந்தக் காட்சி அவரது காதல் உணர்வை அப்படியே ஓடுக்கிவிட்டது. தனது காதலை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று உணர்ந்து  அவளை விட்டு தானே விலகி போய்விட்டார்.  இந்த நிஜ சம்பவத்தைய டால்ஸ்டாய் ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறார்.



நடனத்திற்குப் பிறகு கதையைத் துவக்குபவர் இவான் வசிலியேவிச். மத்திய வயதில் உள்ள இவருக்கு நிறைய இளம் நண்பர்களிருக்கிறார்கள்.  அவர்களுடன் இவான் ஒரு நாள் விவாதத்தில் இருக்கிறார். அதில் ஒரு மனிதனை அவனது புறச்சூழல்நிலைகள் பெரிதும் மாற்றிவிடாது.  மாறாக அவன் சந்திக்கும் சில சந்தர்ப்பங்கள் அவனது இயல்பை முற்றிலும் மாற்றிவிடக்கூடியவை என்கிறார். அதை நண்பர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை நம்ப வைப்பதற்காக தனது இள வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அவர் விவரிக்க துவங்குகிறார்



இவான் வாலிப வயதில் இருந்த போது ஒரு நாள் நடனவிருந்திற்கு செல்கிறார்.  அந்த வயதில் இசையும் நடனமும் இளம்பெண்களும் மட்டுமே அவரது உலகமாக இருந்தது. அதில் அவர் தேர்ச்சி பெற்ற ரசனை கொண்டிருந்தார். அவரது அழகில் மயங்கி பெண்கள் அவரோடு சேர்ந்து நடனமாட ஆசை கொண்டார்கள். அந்த நடன விருந்தில் வரிங்கா என்ற இளம்பெண்ணை காண்கிறார். அவள் வெண்ணிறமான உடைகள் அணிந்து வெள்ளை கையுறைகள் மாட்டிக் கொண்டு பேரழகியாக இருக்கிறாள். அவளோடு சேர்ந்து நடனமாட வேண்டும் என்று விரும்புகிறார்



அவளும் இவானது கவர்ச்சியில் மயங்கி சேர்ந்து ஆடுகிறாள். அவர்களின் நடனமே கதையாக விரிகிறது. சொற்களின் வழியே நாம் அந்த நடனத்தின் அசைவுகளை, கால்களின் சுழற்சியை காண முடிகிறது. இசையோடு சேர்ந்து முயங்கிய அந்த நடனத்தின் படிப்படியான வேகத்தை தனது வார்த்தைகளின் வழியே டால்ஸ்டாய் சாத்தியமாக்கியிருக்கிறார்.



நடனம் ஆடுகின்றவனின் மனஉணர்ச்சியும் உடன் ஆடும் பெண்ணின் நளினமும் வாக்கியங்களின் வழியே ஒளிர்கின்றன. கதையின் பத்திகள் நடனத்தின் தனித்துணுக்குகள் போலாகின்றன. ஒன்றோடு ஒன்று இணைந்தும் விலகியும் ஒன்று சேர்கின்றன. பிரிகின்றன. 



நடனகூடத்தின் இசை சொற்களின் வழியே நம் காதுகளில் கேட்கத் துவங்குகிறது. வெண்ணிறமான யுவதிகளின் கால்கள், செவ்வரியோடிய கண்கள், புன்னகை ததும்பும் உதடுகள். அதில் ஒளிரும் கள்ளச்சிரிப்பு. உடல்கள் கொள்ளும் வேட்கை. ஒன்றோடு ஒன்று இணைந்து விலகி நெருங்கி தளர்ந்து முயங்கிக் கொள்ளும் நடனத்தின் உச்ச நிலை. காற்றில் வரைந்த புள்ளிகள் போன்று கைவிரல்கள் நடனத்தில் அரூப புள்ளிகளை உருவாக்குகிறது. கலைக்கிறது. சிதறடிக்கிறது. திடீரென வானில் ஒளிரும் மின்னலின் வேகமும் வசீகரமும் போல பெண் உடல் தாளமுடியாத வசீகரம் கொள்கிறது.



நடனம் உடலை மீறுகிறது. உடலைக் காகிதம் போலாக்குகிறது. சிறகு இல்லாமலே பறக்க வைக்கிறது. நடனத்தில் இன்றிவேறு எப்போதும் கால்  விரல்கள் பூமியோடு இத்தனை நெருககம் கொள்வதில்லை.  டால்ஸ்டாய் என்றோ தன் இளமை பருவத்தில் கண்ட பெண்ணின் நினைவை அப்படியே பசுமை மாறாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார். அந்த விருந்தில் யார் யார் வந்திருந்தார்கள்  என்ன இசை நிகழ்த்தபட்டது. என்ன உணவு பரிமாறப்பட்டது என்ன உடைகள் அணிந்திருந்தார் என்று துல்லியமாக விவரிக்கிறார்.



வரிங்கா  மிக லாவகமாக ஆடுகிறாள். உதிர்ந்த சிறகு காற்றில் பறப்பது போன்றே இருக்கிறது. இவானை தனது நடனத்துணையாக அவள் தேர்வு கொண்டதற்கு பலரும் பொறாமை படுகிறார்கள். இவான் அவளோடு சேர்ந்து ஆடும்போது தான் கரைந்து போவதை உணர்கிறான். நடனம் அவர்கள் உடலில் இருந்து மனதிற்குள் நிரம்புகிறது. காற்று இலையை அசைப்பதை போல இசை அவர்களை அலைவுறச்செய்கிறது.



திடீரென அந்த நடன விருந்தில் வரிங்காவின் தந்தை அறிமுகமாகிறார். அவர் ஒரு ராணுவ உயர் அதிகாரி என்பது தெரிய வருகிறது, கம்பீரமும் மிடுக்குமான உருவம் . எதையும் முறைப்படி அதற்கான விதியை மீறாமல் செய்யக்கூடியவர் என்பது  அவரது செயல்களில் தெரிகிறது. தன் மகளுடன் இணைந்து நடனமாடுகிறார். அவர் உடலுக்குப் பொருந்தாத காலணிகளை அணிந்திருப்பதை இவான் காண்கிறான். ஒருவேளை தனது மகளின் ஆசைக்காக அவர் இந்த காலணியை அணிந்து வந்திருக்க கூடும் என்றும் கருதுகிறான்.



அந்த ஒற்றை வாக்கியத்தின் வழியே அப்பாவிற்கும் மகளுக்குமான உறவு முழுமையாக வெளிப்படுகிறது. நடனமாடும் வரிங்காவின் அப்பா ஒரு காலத்தில் தேர்ந்த நடனக்காரராக இருந்திருக்க வேண்டும் இன்று அவரால் சரியாக ஆட முடியவில்லை என்பது இவானிற்கு தெரிய வருகிறது. அவன் அவரது நடனத்தை ரசிக்கிறான்.  அவரது மகள் மீதான ஈர்ப்பை அது அதிகமாக்குகிறது.



இரவெல்லாம் வரிங்காவோடு நடனமாடுகிறான் இவான். அந்த சந்தோஷம் அவனை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதே நேரம் உள்மனதில் தனது மகிழ்ச்சியை யாரோ கெடுத்துவிடுவார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
மணி மூன்றாகும் போது வரிங்கா தன் அப்பாவோடு புறப்பட்டு போகிறாள். பின்னிரவில் தனது வீட்டிற்கு திரும்புகிறான் இவான். உறங்குவதற்கு மனமில்லை. வீட்டுவேலைக்காரன் அவனை வியப்போடு பார்க்கிறான்.  வரிங்காவின் நினைவில் இருந்து விடுபடவே முடியவில்லை. அவன் கற்பனையில் நடனமாடிக் கொண்டேயிருக்கிறான். என்ன ஆனது இவானிற்கு என்று அவனது சகோதரன் வியப்படைகிறான். சகோதரன் ஒரு புத்தகப்புழு. வெளியுலகம் அறியாதவன்.



ஒரு போதும் நடனவிருந்தில் கலந்து கொள்ளாத அவனது சகோதரன் மீது இவானுக்கு திடீரென பரிதாபம் உருவாகிறது. தனது உடைகளை கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே படுக்கையில் விழுகிறான் இவான். மனது நிலை கொள்ள மறுக்கிறது. அவளது நினவு பற்றி எரிய ஆரம்பிக்கிறது. காட்டு தீ மரங்களை முறிப்பது போல அவளது நினைவு அவனது உறக்கத்தை முறித்து வெளியேற்றுகிறது. அவளை மறுபடி காண வேண்டும் என்ற வேட்கையுடன் வீட்டில் இருந்து வெளியேறி நடக்கிறான்.



வரிங்காவின் வீடு நகரை விலக்கியது. சுற்றிலும் வயல்கள் உள்ளன. அதிகாலை நேரம். காற்றில் ஈரம் நிரம்பியிருக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மனதில் காதலோடு நடக்கும்போது உலகம் மிக வசீகரமாக இருக்கிறது. குளிரும் பனியும் பற்றிய பிரக்ஞை இன்றி அவள் வீட்டை நோக்கி செல்கிறான். வரிங்கா இந்த நேரம் உறங்கி கொண்டிருப்பாள். ஆனாலும் அவள் வீட்டின் முன்பு நின்றபடியே அவளுக்காக ஏங்கி காத்திருப்பது அவனுக்கு பிடித்தமான ஒரு செயலை செய்வதுபோலவே தோன்றியது.



அப்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது.  அவள் வீட்டின் அருகாமையில் உள்ள பரேட் மைதானம் ஒன்றில்  ஒரு காட்சி தென்படுகிறது. முரசு அடித்தபடியே வரும் சப்தம் கேட்கிறது. தொலைவில் இருந்து ஒரு ஆளை அடித்து வதைத்து இழுத்து கொண்டு வருகிறார்கள் கறுப்பு உடை அணிந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள். அந்த ஆள் கைகால்களில் சங்கிலி போடப்பட்டிருக்கிறது. பற்கள் உடைபட்டு ரத்தம் பீறிடுகிறது. தன்னை விட்டுவிடும்படியாக கெஞ்குகிறான். வலியில் கத்துகிறான். அவனது உடல் அடிவாங்கி ரத்தம் சொட்டுகிறது. அவன் ஒரு தார்த்தாரியன் என்றும் கலக்காரன் என அவனை கொல்வதற்காக ராணுவம் கொண்டு போகிறது.  அதற்கு தலைமை ஏற்று நடத்துபவர் வரிங்காவின் தந்தை என்றும் சொல்கிறான் அங்கிருந்த ஒரு கொல்லன்.



பிடிபட்ட மனிதனின் வலியும் அவமானத்துடன் என் மீது கருணை காட்டுங்கள் சகோதரனே என்ற கூக்குரலும் இவானை கடுமையாக மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தன்னை ஒரு நிமிசம் அந்த ஆளின் நிலையில் பொருத்தி பார்த்து கொள்கிறான்.  அது அவனை நடுக்கம் கொள்ள வைக்கிறது. அந்த தார்த்தாரியனுக்காக வருத்தபடுகிறான்.



எதையும் சட்டப்படி செய்யும் வரிங்காவின் தந்தையின் வன்முறை அவனை ஆத்திரமூட்டுகிறது. அது வரை காதலின் வேகத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்தவனை கண்முன்னே நடைபெறும் உண்மை சம்பவம் தரையில் விழச்செய்கிறது. இனி ஒரு போதும் தான் அந்த பெண்ணை சந்திக்க கூடாது என்று முடிவு செய்கிறான். அதே வேளையில் தன் வாழ்நாளில் அரசு பணி எதிலும் சேர்ந்துவிடக்கூடாது என்ற முடிவும் எடுக்கிறான். அவனது காதல் அந்த விடிகாலையோடு முடிந்து போகிறது. அவன் அதன்பிறகு வரிங்காவை தேடிப்போகவேயில்லை.



காலத்தால் சில கதைகள் மங்கிவிடுகின்றன. சில கதைகள் காலத்தால் மெருகேற்றபட்டு ஒளிர்கின்றன. டால்ஸ்டாயின் இக்கதை அந்த வகையைச் சேர்ந்தது.  வைரக்கல் போல தனக்குள்ளிருந்த ப்ரகாசத்தை உலகின் மீது படரச் செய்கிறது. கதை சொல்லும் முறை, எழுத்துமானம், உணர்ச்சி வெளிப்பாடு யாவிலும் வெகு கச்சிதமானது. மன உணர்ச்சியின் துல்லியமும், காதலின் ஆவேசமும் கொண்ட இக்கதையை வாசிக்கையில் நவீன திரைப்படம் ஒன்றினைக்  காண்பது போலவே உள்ளது.



`War and Peace`   `Anna Karenina`    என இரண்டு சிகரங்களை போல மிக உன்னதமான நாவல்களை எழுதிய டால்ஸ்டாய் சிறுகதை என்ற வடிவத்தையே தனக்கு சவால்விடும் எழுத்துபணியாக கருதினார். அதன் சாட்சி போலவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையை எழுதிய நாட்களில் டால்ஸ்டாயின் மனதில் ரஷ்ய சமூகம் மீதான கோபமும் அவர்களின் போலித்தனங்கள் மீது தாங்கமுடியாத எரிச்சலும் நிரம்பியிருந்தது.
அவர் நீதிக்கதைகள் போன்ற வடிவத்தில் சில சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அதன் ஊடாகவே நடனத்திற்கு பிறகு கதையை எழுதியிருக்கிறார்.


இசை நடனம் இரண்டும் ரஷ்யர்களின வாழ்வின் பிரிக்க முடியாத அம்சம். டால்ஸ்டாய் இரண்டையும் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அவருக்கு பீதோவனின் இசை மிகவும் பிடித்தமானது. இசையை முக்கிய அம்சமாக கொண்டு க்ருஷயர் சொனடோ என்ற சிறுகதையை டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். அது மிகுந்த சர்ச்சைக்குள்ளான சிறுகதை.



நடனத்திற்குப் பிறகு கதையின் மையப்பொருள் நடனம். அது எப்போது துவங்கும். எப்போது முடியும் என்று முன் முடிவு செய்ய முடியாதது. நடனம்  ஒரு சுழற்சி. நிலைமாற்றம்.  மனதின் ஆசைகளே நடனமாகின்றன. வரிங்காவின் அழகு நடனத்தால் வெளிப்படுகிறது. அவள் தன்னை நடனத்தின் வழியே முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கிறாள். அவளை காதலிக்கும் இவான்  இளவயதின் தடுமாற்றங்கள் ஆசைகள் நிரம்பியவன். அரசு பணியில் சேர வேண்டும் . அழகாக பெண்ணை காதலிக்க வேண்டும் என்று ஆசைகள் அவனுக்குள் நிரம்பியிருக்கின்றன. 



அவன் பெண்களை வசீகரிப்பதற்காகவே ஆடுகிறான். வரிங்காவோடு நடனமாடும் போது அவன் இவரும் மொழியில்லாமல் பேசிக் கொள்வதை உணர்கிறான். இரண்டு உடல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன. அது ஒரு ரகசியம் என்பதை உணர்கிறான். வரிங்காவோடு முடிவில்லாமல் ஆடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இதற்காகவே நூறு முறை நடனமாடுகிறான்.



எல்லா நடனமும் ஏதோவொரு புள்ளியில் முடிந்துவிடக்கூடியதே. சில வேளை அது சட்டென நிகழ்ந்துவிடுகிறது. சில நேரம் அது படிப்படியாக நடைபெறுகிறது. காதலும் அப்படியே. இவான் வரிங்கா மீது கொள்ளும் காதல் துவங்கும் போது வேகமாகிறது. பின் அதிவேகமாகிறது. வீட்டிற்கு போன போதும் அது அடங்குவதில்லை. ஆனால் அந்த மனவேகத்தை கண்முன்னே ஒரு மனிதன் அவமதிக்கபட்டு சாவை நோக்கி இழுத்து கொண்டு செல்லப்படும் அதிர்ச்சி தடுத்து நிறுத்துகிறது. கற்பனையில் பறந்த சிறகுகள் முறிகின்றன. அவன் தன் யதார்த்தத்தை உணர்கிறான்.



சிறுகதை துவங்கும் போது ஒரு விவாத்தில் துவங்கி முடியும் போது இன்னொரு விவாதத்தில் முடிகிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கு நடுவில் ஒரு நடனவிருந்தும் அதில் ஏற்பட்ட காதலும் விவரிக்கபடுகிறது. கதை மூன்று முக்கிய புள்ளிகளை கொண்டிருக்கிறது. ஒன்று இவான் வரிங்காவோடு கொள்ளும் ஈர்ப்பு. இரண்டு வரிங்காவிற்கும் அவள் அப்பாவிற்குமான உறவு. அவரது நடனம். மூன்றாவது பிடிபட்டு அடித்து இழுத்துவரப்படும் தார்த்தாரியன். இந்த மூன்று புள்ளிகளுக்கும் நெருக்கமாக தொடர்பு உள்ளது. ஒன்றையொன்று இடைவெட்டுகின்றன. தார்த்தாரியன் பிடிபட்டு கொண்டுவரப்படும் காட்சி வாசக மனதில் ஏற்படும் அதிர்ச்சி மிக முக்கியமானது. 



அந்த வரிகளை எப்போது வாசிக்கும் போதும் கோயாவின் புகழ்பெற்ற ஒவியமான The Third of May 1808  நினைவில் வந்து போகிறது. அது துப்பாக்கிமுனையில் சுடப்பட்ட நிற்கும் கலக்காரனின் தோற்றத்தை சித்தரிக்கிறது. அதுவும் விடிகாலை காட்சி தான். ஒரு பக்கம் துப்பாக்கிவீரர்கள் சுடுவதற்கு தயராக நிற்கிறார்கள். மறுபக்கம் சில உடல்கள் செத்து விழுந்துகிடக்கின்றன. பிடிபட்ட கலக்காரர்கள் சுட்டு கொல்லப்படுவதற்காக நிறுத்தபட்டிருக்கிறார்கள். சாவை எதிர்நோக்கியுள்ள ஒருவன் முகம் இருண்டு போயிருக்கிறது. அவன் கைகளை விரித்திருக்கிறான். அவனது ஆடைகள் ஒளிர்கின்றன. ஆனால் பயம் முகத்தில் பீறிடுகிறது.



இந்த காட்சியை காண முடியாமல் ஒருவன் கைகளால் முகத்தை பொத்திக் கொண்டு அழுகிறான் சாவைத் தங்களால் தடுக்க முடியாதே என்று புலம்பும் சில உருவங்கள் பின்புலத்தில் தெரிகின்றன. செத்துகிடந்த மனிதனின் வாய் எதையோ சொல்ல முயன்று உறைந்து போயிருக்கிறது. பின்புலத்தில் விடிகாலை மென்னொளி எங்கும் பரவியிருக்கிறது. துப்பாக்கிவீரர்களின் முகங்கள் தெளிவாக தெரியவில்லை. யாவரும் ஒன்று போலவே இருக்கிறார்கள். சாவை எதிர்நோக்கி மண்டியிட்ட மனிதனின் முகத்தோற்றம் டால்ஸ்டாயின் கதையை வாசிக்கையில் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. சொற்களின் துணையில்லாமலே வலியை உருவாக்கிவிடும்  கோயாவின் கலைத்திறன் தான் சொற்களின் வழியே காட்சிகளை உருவாக்கி காட்டும் டால்ஸ்டாயிடமும் இருக்கிறது.



காதல் ஒரு மனிதனை எவ்வளவு தடுமாற்றம்கொள்ள வைக்கிறது என்று விவரிக்கும் டால்ஸ்டாய் குளத்தின் சலனத்தை வீசி எறியப்படும் ஒரு கல் நீரின் சமன்கலைத்துவிடுவûதை போல சூழலை ஒரு நிகழ்வு உருமாற்றிவிடக்கூடிய வல்லமை கொண்டது என்பதை  அழுத்தமாக  அடையாளம் காட்டுகிறார்.



நடனவிருந்தும் அதில் ஏற்படும் காதலும் ரஷ்ய சமூகத்தின் அன்றைய உயர்குடி கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகளாக பதிவாகின்றன. அதே நேரம் கதையின் அடிநாதம் போல அன்றுள்ள அரசிற்கு எதிராக புரட்சியாளர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் எளிய அடிதட்டு மக்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் மிகுந்த உக்கிரம் கொண்டுள்ளது என்பதும் விவரிக்கபடுகிறது. அத்துடன் பல்கலை கழக மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள துவங்கியது இப்படி தான் உருவானது என்றும் கோடுகாட்டுகிறார்.



பிரெஞ்ச் உயர்குடி கலாச்சாரம் மீதான மோகம் ரஷ்யாவை எவ்வளவு ஆட்டி வைத்தது என்பதற்கு இந்த கதையில் வரும் நடன விருந்தே சாட்சி. சாம்பெயின் மட்டுமே குடிப்பவன் என்று தன்னை இவான் அறிமுகப்படுத்திக் கொள்வதும் நடன இசை, நடன முறைகள்,. உடைகள், ஒப்பனை, உணவு என யாவிலும் பிரான்சின் தாக்கம் மேலதிகமாகவே இருந்தது என்பதை டால்ஸ்டாய் நுட்பமாக பதிவு செய்கிறார்.



அதே நேரம் இவான் தன்னுடன் விவாதித்து கொண்டிருக்கும் இளைஞர்களை விமர்சனமும் செய்கிறார். அந்த காலத்தில் ஆணும் பெண்ணும் உடலை வெளியே காட்டிக் கொள்வதிலோ, ஒருவர் மீது மற்றவர் உடல் இச்சை கொள்வதிலோ அதிக விருப்பம் காட்டவில்லை. சொல்லப்போனால் உடலை நிறைய ஆடைகள் அணிவித்து மறைத்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டினோம். உடல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வதில், பிணைவதில் மனம் நாட்டம் கொள்ளவில்லை. எங்கள் காதலை உந்தியது உடல்கள் அல்ல. மனது மட்டுமே என்கிறார். இது மாறிவரும் ரஷ்ய இளையோர் சமூகத்தின் மீதான முந்தைய தலைமுறையின் குற்றசாட்டாகவும் கருதலாம். அல்லது அப்படி தன்னை சித்தரித்து கொள்வதன் வழியே தனது இச்சைகளை அவர் மறைத்து  கொள்ள முயற்சிக்கிறார் என்றும் அர்த்தப்படுத்தி கொள்ளலாம்.



சிறுகதையின் சொல்முறையும் . கதாபாத்திரங்களை பற்றிய சித்தரிப்பும், அவர்களின் உள்ளோடும் துல்லியமான மன உணர்ச்சியும் கதையின் போக்கினை திசைமாற்றம் செய்யும் ஒரு சம்பவமும் அதிலிருந்து உருவாகும் கதையின் முடிவும் சிறுகதையின் உச்சபட்ச சாதனைகளை அடையாளம் காட்டுகிறது.



இக்கதையில் குறிப்பிடப்படும் நடனம் ஙஹக்ஷ்ன்ழ்ந்ஹ அது ஒரு போலந்தின் நாட்டுப்புற துள்ளல் இசையோடு கூடியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா எங்கும் நடனக்கூடங்களில் மசூர்கா ஆடுவது பிரபலமாக இருந்தது. இந்த இசைவகைமையில் பிரெடெரிக் சோபின் போன்ற இசைமேதைகள் கோர்வைகள் எழுதியிருக்கிறார்கள்.பியானோ தனிஇசையில் உருவான மசூர்கா ரஷ்யாவில் பிரலமாக இருந்தது.டால்ஸ்டாய் இந்த நடனம் குறித்து தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.அன்னா கரீனனாவிலும்  இதே மசூர்கா இடம் பெறுகிறது. துர்கனேவ் தனது தந்தையும் தனையர்களும் நாவலில் மசூர்கா நடனஇசை பற்றி மிகுந்த ரசனையோடு  எழுதியிருக்கிறார். சிறுவயதில் தன்னால் திறமையாக மசூர்கா ஆட முடியவில்லை என்ற ஏக்கம் இருந்ததை டால்ஸ்டாயின் பால்ய நினைவுகள்  என்ற நூல் குறிப்பிடுகிறது.



நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள்  உருவான காலத்தில் அதை டால்ஸ்டாய்  எதிர்கொண்ட விதம் அலாதியானது. சினிமா அறிமுகமான போது அவர் படமாக்கபட்டிருக்கிறார். கிராமபோன் கண்டுபிடிக்கபட்டவுடன் அதில் இசைத்தட்டினை போட்டு அதிலிருந்து பீறிடும் இசையில் மயங்கி நடனமாடியவர் டால்ஸ்டாய். ஒவ்வொரு முறை இசைத்தட்டு சுழலும் போதும் எல்லோரும் நடனமாடுங்கள் என்று உற்சாகமாக குரல் தந்தவர் அவர்.



எடிசன் எலக்ட்ரிக் பென் என்று மின்சாரத்தில் எழுதும் ஒரு பேனாவை உருவாக்கியிருந்தார். அதை டால்ஸ்டாய்ககு பரிசாக அளித்தார்கள். எலக்ட்ரிக் பேனாவால் தான் எழுதப் போவதை காணும்படி தன்னுடைய வீட்டையே ஒன்று திரட்டினார். ஆனால் அந்த பேனா வேலை செய்யவில்லை. இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் சிறுவனை போல மனம் உடைந்து போனார் டால்ஸ்டாய்.



விஞ்ஞானத்தின் வழியே கலைகள் மறுமலர்ச்சி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதன் வெளிப்பாடு இந்த கதையின் ஊடாகவும் காணப்படுகிறது. டால்ஸ்டாயை வழிநடத்தியது அவரது மெய்தேடல். அதிலிருந்து உருவான அன்பின் மீதான பற்று. அந்த வழிகாட்டலில் பெண்கள் மீதான பற்று மனிதனை கீழ்மையில் கொண்டுவிடும் என்ற அடிநாதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது பைபளில் இருந்து டால்ஸ்டாய் உருவாக்கி கொண்டது. அந்த சாராம்சம் இக்கதையிலும் வெளிப்படுகிறது.



கதை முழுவதும் இசை ஊடாடிக் கொண்டேயிருக்கிறது. ஒரு இரவும் விடிகாலையும் வலிமையாக எழுத்தில் தோன்றி மறைகிறது. எழுதி தேர்ந்த கை என்பதை ஒவ்வொரு வரிகளும் மெய்ப்பிக்கின்றன. டால்ஸ்டாயின்  எழுத்து மனித மனதை எவ்வளவு நுட்பமாக ஆராய்ந்திருக்கிறது என்பதை இக்கதை என்றென்றும் நிருபித்தபடியே உள்ளது.



**
பின்குறிப்பு



இக்கதை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ருஷ்ய சிறுகதைகள் என்ற  தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. வெளியிட்டவர் ராதுகா பதிப்பகம். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் கிடைக்ககூடும்.



ஆங்கிலத்தில் இக்கதையை வாசிக்க தேவையான இணைப்பு.


https://www.readbookonline.net/readOnLine/956/

0Shares
0