The grocer’s son என்ற பிரெஞ்சுபடத்தை நேற்றிரவு பார்த்தேன், நீண்டநாட்களுக்குப் பிறகு புத்துணர்வு ஊட்டும் படம் ஒன்றினைக் கண்ட சந்தோஷம் மனதில் நிரம்பியது,
பலசரக்கு கடைக்காரனின் மகன் என்ற தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது, எளிமையான கதை, அதை படமாக்கியுள்ள விதம் கவித்துவமாக உள்ளது, குறிப்பாக தெற்குபிரான்சின் பசுமையான கிராமப்புறச் சாலைகள், சின்னஞ்சிறிய கிராமங்கள், பண்ணை வீடுகள் என படம் நம்மை இன்னொரு உலகிற்கே அழைத்துப் போகிறது .படத்தின் இயக்குனர் Eric Guirado புகழ்பெற்ற இளம் ஆவணப்பட இயக்குனர், அவரது முதல் முழுநீளப்படமிது,
வேனில் ஊர் ஊராகச் சென்று பலசரக்கு விற்கும் நடமாடும் பலசரக்குக் கடை நடத்தும் தனது அப்பா இதயநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதை அறிந்து அவரைப் பார்க்க வருகிறான் அன்டோன் (Antoine Sforza),
அவன் தனது சொந்த ஊரை விட்டு விலகி வெளியேறி பல ஆண்டுகாலமாகவே நகரில் வேலை செய்து வாழ்ந்துவருகிறான், இப்போது மருத்துவமனையில் அப்பா கவலைக்கிடமாக உள்ளதால் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக மீண்டும் கிராமத்திற்குச் சென்று அப்பா நடத்திய பலசரக்குக் கடையை தான் ஏற்று நடத்தத் துவங்குகிறான்
அவனுடன் கிளைரா என்ற இளம்பெண்ணும் உடன் செல்கிறாள், தெற்கு பிரான்சின் கிராமங்களைத் தேடி அவர்கள் நடமாடும் பலசரக்கு வண்டியை ஒட்டிச் செல்கிறார்கள், அகண்ட புல்வெளி, பசுமையான நிலப்பரப்பு, மிதக்கும் வெளிர்நீல மேகங்கள், முற்றிய தனிமை, கைவிடப்பட்ட முதியவ்ர்களின் மெதுவான வாழ்வு, ஒளிரும் சூரியன் எனக் காட்சிகள் விரிகின்றன
தனக்கு விருப்பமேயில்லாமல் பலசரக்கு விற்க துவங்கும் அன்டோன் மெல்ல கிராமப்புறத்தில் இந்த வண்டியின் வருகைக்காக காத்திருக்கும் வயதான மனிதர்களின் உலகைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறான்,
விற்பனை செய்து பணம்சம்பாதிப்பது என்பதைத் தாண்டி சகமனிதர்களை நேசிப்பது முக்கியமானது என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான், அவனுடன் துணையாக வந்த கிளைரா ஒரு கட்டத்தில் படிப்பிற்காக அவனை விட்டு ஸ்பெயின் போகிறாள்,
இதனால் மனம்உடைந்து போகிறான், வேதனையை மறப்பதற்காக தானும் தனியே வாழத்துவங்குகிறான், ஒரு கிழவியின் சிதலமடைந்த வீட்டில் தனியே குடியிருக்க துவங்குகிறான், பயணம் மட்டுமே அவனை உயிர்ப்பிக்கிறது, வயதானவர்களின் பொருட்டு தேவாலயத்திற்குப் போய் அவர்கள் வேண்டி கேட்டுக்கொண்டபடி பிரார்த்தனை செய்கிறான், தினமும் காலையில்அவர்களைத் தேடிச் சந்திப்பதன் வழியே இன்னொரு நாள் உயிர்வாழ்கிறோம் என்ற அவர்களின் சந்தோஷத்தை தானும் பகிர்ந்து கொள்கிறான்
இந்தப் படம் தனிமையின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்கிறது, அதே நேரம் உறவுகள் கசந்து போன வாழ்க்கையில் பயணமும் அர்ப்பணிப்பு மிக்க வேலையும் மட்டுமே மீட்சி தருவதாக உள்ளன என்பதையும் அடையாளம் காட்டுகின்றது
பசுமையான கிராமச்சாலையில் பலசரக்கு வண்டி வருகிறது, வீடுகளில் ஆட்களேயில்லை, கிராமசாலைகளில் சிறுவர்களைக் காணமுடிவதேயில்லை, ஆடு, கோழிகளை வைத்து கொண்டு நகரை விட்டு ஒதுங்கிவாழும் ஒரு முதியவர் மெதுவாக வண்டியை நோக்கி வந்து பட்டாணி வாங்குகிறார், அவரது நடை, பேச்சு, முகத்தோற்றம் எல்லாமே சலிப்பேறியிருக்கிறது, அன்டோன் அவரோடு இனிமையாக பேசி நட்பு கொள்கிறான், அந்த நட்பு அழகான ஒன்று, இருவரும் ஒரு கட்டத்தில் தோழர்கள் போலாகிவிடுகிறார்கள்
கிராமப்புறம் என்பது வயதானவர்கள் மட்டுமே வாழும் உலகம், அங்கே இளம்பெண்களோ, குழந்தைகளோ கிடையாது, மீதமிருக்கும் காலத்தை ஒட்டிக் கொள்ள முதியவர்களுக்கு வெளியாட்களின் வருகை தேவைப்படுகிறது, அவ்வகையில் தனது வருகை வெளியுலகோடு அவர்கள் கொள்ளும் உறவு என்பதை அவன் சரியாகப் புரிந்து கொள்கிறான்
படத்தில் அன்டோனின் அம்மாவாக வருபவர் அதிகம் பேசுவதில்லை, ஆனால் கண்ஜாடையிலே தனது மனவேதனையை வெளிப்படுத்திவிடுகிறார், குறிப்பாக முதன்முறையாக மகனின் அறைக்கு வரும் அம்மாவை இருக்கையில் உட்கார சொல்கிறான் மகன், அறை ஒரே அலங்கோலமாக இருக்கிறது, மகன் இப்படி அறையை வைத்திருக்கிறானோ என்று அந்த தாய் மகனை ஏறிட்டு ஒரு பார்வை மட்டுமே பார்க்கிறாள், அதில் அவளது ஆதங்கம் முழுமையாக வெளிப்படுகிறது
அன்டோன் கிளைரா இருவரது காதலும் நட்பும், அவர்கள் பலசரக்கு வண்டியில் செய்யும் குறும்புகளும் ரசிக்கும்படியானவை, கிளைரா ஒருத்தி தான் படத்தில் நினைத்ததை செய்யும் வெளிப்படையான பெண்ணாக இருக்கிறாள், மற்ற கதாபாத்திரங்கள் யாவரும் தனது எண்ணங்களை மறைத்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள்,
குறிப்பாக அன்டோனுக்கும் அவனது சகோதரன் பிரான்சுவாவிற்கும் உள்ள உறவு, தற்கொலை செய்ய இருந்தவனைக் காப்பாற்றி மீட்டபிறகு அவர்கள் உறவில் ஏற்படும் மாற்றம் என சகோதரஉறவு மிக இயல்பாக, நிஜமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
அன்டோன் ஆரம்பத்தில் இருந்தே அப்பாவை வெறுக்கிறான், அந்த வெறுப்பு குடும்பத்தின் மீதான வெறுப்பாக மாறுகிறது, ஆனால் அப்பா வீட்டில் கறாரான மனிதராகவும் வெளியில் பலராலும் நேசிக்கபடும் மனிதராகவும் உள்ள வேறுபாட்டினையும், அதற்கான காரணத்தை அன்டோன் புரிந்து கொள்கிறான், முடிவில் அப்பாவை அழைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்துப் பேசும் ஒரு காட்சியில் அந்த கசப்பு மறைந்து போய் அப்பாவின் அன்பு மிகவும் தூய்மையானது, அதைத் தான் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிகிறான்.
அற்புதமான துள்ளல் இசையும், தேர்ந்த ஒளிப்பதிவும் படத்தின் ஆதாரபலம், அன்டோனாக நடத்துள்ள Nicolas Cazalé. புகழ்பெற்ற பயணத்திரைப்படமான Le Grand Voyage யில் மகனாக நடித்தவர், இப்படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது அர்ப்பணிப்புமிக்க செயல்களின் வழியே தான் சாத்தியம் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு
•••