அனதோல் பிரான்ஸின் பால்தஸார் சிறுகதையைப் புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இயேசு பிறந்த போது அவரைக் காண காணிக்கையுடன் வந்த மூன்று ஞானியர்களில் ஒருவர் தான் இந்தப் பால்தஸார். மற்ற இருவர் காஸ்பர் (Caspar), மற்றும் மெல்கியர் (Melchior) ஆகும். மூவரும் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில் பயணம் செய்தவர்கள். இவர்கள் குறித்துப் பல்வேறு புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் அனதோல் பிரான்ஸின் கதை வியப்பூட்டக்கூடியது

இக்கதை பால்தஸாரின் காதலை விவரிக்கிறது. அதுவும் பால்தஸார் பித்தாக அரசி பெல்கிஸைக் காதலிக்கும் போது அவள் விலகிப் போவதையும். பால்தஸார் அவளைவிட்டு விலகிய பிறகு பெல்கிஸ் அவரைத் தேடி வருவதையும் விவரிக்கிறது. ஆசையின் இணையாத இருகோடுகளைச் சொல்லும் இக்கதையை இரண்டு நட்சத்திரங்களின் கதையாகவே உணருகிறேன்
ஒன்று வானில் ஒளிரும் நட்சத்திரம். அதை அறிந்து கொள்ளத் துவங்கும் பால்தஸாரின் நாட்கள். இரண்டாவது உயிருள்ள நட்சத்திரமான அரசி பெல்கிஸ். இரண்டின் மர்மங்களையும் கதை அழகாக விவரிக்கிறது.
பைபிளில் வரும் பால்தஸார் இயேசுவின் பிறப்பைக் கொண்டாட புனிதப் பயணத்தை மேற்கொள்கிறவர். ஞானி. ஆனால் கதையில் வரும் பால்தஸார் காதலுக்காகப் பயணத்தை மேற்கொள்கிறார். அவர் ஞானியாக மாறிய கதையை அனதோல் பிரான்ஸ் விவரிக்கிறார்.
கதையில் பால்தஸாரை விடவும் அதிகம் ஈர்த்த கதாபாத்திரம் அவரது குருவான செம்போடிஸ். வானவியல் அறிஞரான செம்போடிஸ் உலகியல் ஆசைகளிலிருந்து விடுபட்டவர். நிரந்தர அழகின் மகத்துவத்தை விவரிப்பவர்.
உண்மையான அழகு எது. மனிதன் காதலிப்பதற்காகப் படைக்கப்பட்டவனா என்ற கேள்விகள் அனதோல் பிரான்ஸின் படைப்புகளில் அடிநாதமாக ஒலிக்கிறது. துறவும் இன்பமும் அவரது படைப்பின் ஆதாரங்கள். இரண்டையும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறார். இதிகாசத்தின் சாயல் கொண்ட கதைகளை எழுதியவர் அனதோல் பிரான்ஸ்.
எத்தியோப்பிய அரசரான பால்தஸார் வணிக ஒப்பந்தம் செய்வதற்காக ஷெபா தேசத்து அரசியான பால்கிஸ் அரசியைக் காணச் செல்கிறார். அவருடன் செம்போடிஸ் என்ற மதகுருவும், மென்கரா என்ற பணியாளனும் உடன் செல்கிறார்கள். அவரது பரிவாரங்கள் எழுபத்தைந்து ஒட்டகச் சுமை வாசனைத் திரவியங்களும், யானைத் தந்தங்களும், தங்கமும் சுமந்து செல்கின்றன. பாலைவன ஓநாய்களை ரசித்தபடியே பால்தஸார் பயணம் செய்கிறார்.
பால்தஸார் இன்பத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அரசி பால்கிஸின் அழகைக் கேள்விபட்டு அவளை அடைவதற்காகவே பயணம் செய்கிறார்
இந்தப் பயண வழியில் செம்போடிஸ் அரசனுக்கு வான சாஸ்திரத்தையும், நவரத்தினங்களைப் பற்றிய இரகசியத்தையும் கற்பிக்கிறார்.
அது கதையினைச் சுவாரஸ்யப்படுத்த எழுதப்பட்ட வெறும் தகவல் அல்ல. மாறாக நட்சத்திரங்களை நிரந்தர அழகின் அடையாளமாகவும் பால்தஸார் காணச்செல்லும் அரசி பால்கிஸ் அழிந்துவிடும் அழகைக் கொண்டவளாகவும் உணரச் செய்வதற்கான முதற்பாடம்.
அவர்கள் நீண்ட பயணத்தின் பின்பு ரோஜா மணம் வீசும் ஷெபா நகரத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நந்தவனங்களைக் காணுகிறார்கள். மாதுளை மரத்தடியில் மகிழ்ச்சியாக ஒடியாடி விளையாடும் இளம்பெண்களைக் காணுகிறார்கள். அதைக் கண்ட செம்போடிஸ் சொல்கிறார் .
“தெய்வத்தை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை தான் நடனம்”
கிரேக்க சமூகத்தில் அப்படியான எண்ணமிருந்தது. சூபிகளும் நடனத்தின் வழியே கடவுளை அடைய முடியும் என்கிறார்கள்.
“இந்த இளம்பெண்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் ” என்றான் அடிமை மென்கரா. அந்தக் கால அடிமைசந்தை அப்படியானதே.
இரண்டு பதில்களும் இருவேறு பார்வைகள். ஆனால் பால்தஸார் இரண்டு பதில்களையும் பொருட்படுத்தவில்லை. அவர் அழகி பால்கிஸைக் காணுவதைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அவளைத் தேடி அரண்மனைக்குச் செல்கிறார். முதற்சந்திப்பிலே தனது மனதிலுள்ள மோகத்தைப் பிதற்றுகிறார். அவளோ வெற்றுப்பேச்சுடன் அவரைப் புறக்கணிக்கிறாள்.
பால்தஸார் அவளை அடைவதற்குத் தனது செல்வம் அத்தனையும் கொடுப்பதாகச் சொல்கிறார். ஆனால் பெல்கிஸ் எதையும் வேண்டவில்லை. அன்றிரவு அவள் அளித்த விருந்தில் பேரிச்சை மதுவை அருந்துகிறார். அப்போது நடக்கும் உரையாடலில் பெல்கிஸ் விநோதமான கோரிக்கை ஒன்றை வைக்கிறாள்
“தனக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது, மயிர் கூச்சறியும் அபாயம் எப்படியிருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாகச் சொல்கிறாள். “
இது விநோதமான கோரிக்கை. பயத்தை அனுபவிப்பதில் புதிய சுகம் இருப்பதாகப் பெல்கிஸ் நம்புகிறாள். ( இந்த எண்ணம் புதுமைப்பித்தனுக்கும் இருந்திருக்கக் கூடும். ஒருவேளை இதன் காரணமாகவே அவர் பிரேத மனிதனை மொழிபெயர்ப்புச் செய்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது)
இரவில் அவர்கள் மாறுவேஷத்தில் நகர்வலம் செல்கிறார்கள். பிச்சைக்காரனை போல உடையணிந்த பால்தஸார் எதிர்பாராத நிகழ்வினால் அபாயத்தை எதிர்கொள்கிறார். பெல்கிஸிற்காக மதுவிடுதியில் சண்டையிடுகிறார். காயம்படுகிறார். அதுவரை அவர் மீது காதல் கொள்ளாத பெல்கிஸ் அப்போது காதலிக்கத் துவங்குகிறாள். அவர்களைத் திருடர்கள் பிடித்து அடிமைகளாக விற்க முயலுகிறார்கள். மறுநாள் அரண்மனை ஆட்கள் வந்து இருவரையும் மீட்கிறார்கள்.
காயம்பட்ட பால்தஸார் தனது ஆட்களால் தூக்கிச் செல்லப்பட்டுச் சிகிட்சை அளிக்கபடுகிறார். மூன்று வாரங்கள் சிகிட்சை பெறுகிறார். பின்பு அவர் பெல்கிஸைத் தேடிச் சந்திக்கச் செல்லும் போது அவரை அறியாதவள் போல நடந்து கொள்வதுடன் அவரைத் துரத்தியும் விடுகிறாள்.
காதலிக்கும் பெண்ணால் சொல்லப்படும் பொய்யை விட மோசமானது எதுவுமில்லை என்று புலம்புகிறார் பால்தஸார். அவரால் பெல்கிஸின் நிராகரிப்பை ஏற்க முடியவில்லை.
அந்த ஏமாற்றத்துடன் தனது நாடு திரும்புகிறார். பின்பு துறவியாகி வானவியலில் ஆர்வம் கொண்டு அதிலேயே மூழ்கிப் போகிறார். அப்படித் தான் இயேசுவின் பிறப்பை பற்றி அறிந்து கொள்கிறார். அப்போது அவரைத் தேடி பெல்கிஸ் தனது பரிவாரங்களுடன் வருகிறாள். ஆனால் பால்தஸாரின் கவனம் அவளை நோக்கித் திரும்பவில்லை. மீட்பரின் பிறப்பிற்கான காணிக்கைகளுடன் பயணம் மேற் கொள்ளத் துவங்குகிறார்.
அனதோல் பிரான்ஸ் புத்தகங்களே உலகம் என்று வாழ்ந்தவர். அவர் புத்தகக் கடை நடத்தியவரின் பையன். சில காலம் நூலகராகப் பணியாற்றியிருக்கிறார். லத்தீன் மொழியில் தேர்ச்சி பெற்றவர். பிலாத்துவைப் பற்றியும் ஒரு சிறந்த சிறுகதையை எழுதியிருக்கிறார். 1921 ஆம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
.