நன்றி

நேற்று (13.04.24) எனது பிறந்த நாள். காலை முதலே நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்கள்.

(புகைப்படம் / வசந்தகுமார்)

ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வாழ்த்துச் சொன்னார்கள். தங்கைகளின் வாழ்த்து அதைத் தொடர்ந்து வந்தது. கவிஞர் தேவதச்சன் வாழ்த்துச் சொல்லியதோடு பிறந்தநாளை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார்.

மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவர் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. ஆனால் அவர்கள் இளமையின் குருவி எங்கிருந்தோ சப்தமிடுவதைக் கேட்பதாக உணருவார்கள்.

நானும் இப்போது அந்த குருவியின் சப்தத்தை கேட்கத் துவங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். எங்கள் உரையாடல் நீண்டு போனது.

ஒவ்வொரு நாளும் விழித்து எழுந்தவுடன் சிறுவனாக என்னை உணருவேன். பகலும் இரவும் கொஞ்சம் கொஞ்சமாக எனது வயதை உருவாக்குகிறது. பள்ளிவயதில் பிறந்த நாள் எப்போது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டேயிருப்பேன். காரணம் புத்தாடை கிடைக்கும். இப்போது அந்த உற்சாகமில்லை. வயது என்பதே ஒரு புத்தாடை தான். இந்த ஆண்டு முழுவதும் நான் அந்த வயதை அணிந்து கொண்டிருப்பேன் என்றேன்.

கவிஞர் தேவதச்சன், ஆசான் எஸ். ஏ. பெருமாள் இருவரும் என்னை உருவாக்கியவர்கள். அவர்களின் ஆசியைப் பெற்றது மகிழ்ச்சி தந்தது.

அயல்நாட்டிலிருந்து வாசகர்கள் பலரும் தொடர்பு கொண்டு வாழ்த்துச் சொன்னார்கள். தூத்துக்குடியில் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் பொன்.மாரியப்பன். ஜெயபால். முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பதை அறிந்தேன். பொன்.மாரியப்பன் எனது நூல்களை வாங்கி பலருக்கும் பரிசளித்திருக்கிறார். எனது சொந்த ஊரான மல்லாங்கிணரிலும் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். வேறுவேறு ஊர்களில் எனது கதைகளை வாசித்து பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி. தூத்துக்குடி நண்பர்களுக்கு எனது தீராத அன்பும் நன்றியும்.

சமூக ஊடகங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்பிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. உங்கள் அன்பும் ஆசியுமே என்னை இயக்குகிறது.

மாலை தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகத்தில் சிறிய கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன், வாசுமுருகவேல். ஆனந்த், மணிகண்டன், ஹரிஹரன், அன்புக்கரன்,கபிலா காமராஜ்,சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

0Shares
0