
மலையேற்றதைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணா என்ற சிகரத்தில் மலையேற்றம் செய்த பிரெஞ்சு மலையேற்ற குழுவின் புத்தகத்தை வாசித்தேன். அது போலவே ஹெமிங்வேயின் கிளிமஞ்சரோ பயணம் பற்றிய புத்தகம் சுவாரஸ்யமானது. நான் மேற்குதொடர்ச்சி மலையேறி பலமுறை அலைந்திருக்கிறேன்.
அப்படி சமீபத்தில் நான் வாசித்த சீன் ஸ்வானரின் எவரெஸ்ட் மலையேற்றம் பற்றிய Keep Climbing புத்தகம் என்னை உலுக்கிவிட்டது.
சாசகம் என்பது மலையேறுவதில் இல்லை விடாத நம்பிக்கையின் மீதேறி செல்வதில் தான் இருக்கிறது என்ற ஸ்வானரின் மனப்பாங்கு என்னை வெகுநேரம் யோசிக்க வைத்தது.
பொதுவில் மலையேறுவதற்கு நல்ல உடல்வலிமை தேவை. அத்தோடு மனவுறுதியும் தொடர்ந்த பயிற்சியும் அவசியமானது. உறுதியான உடல் கொண்டவர்களே எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறுவதற்கு தயங்குகிறார்கள். பலர் பாதியில் தங்கள் மலையேற்றத்தை முடித்து கொண்டுதிரும்பிவந்துவிட்டார்கள்
ஆனால் புற்றுநோயால் அவதியுற்று இரண்டுமுறை சாவிற்கு நாள் குறிக்கபட்ட சீன் ஸ்வானர்(Sean Swarner ) தனது விடாத முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வெற்றிக்கண்டிருக்கிறார். Hodgkin`s Disease and Askin`s Disease என்ற இரண்டு அரிய வகையான புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானவர் ஸ்வானர். அமெரிக்காவின் ஒகியோவில் 1974 செப்டம்பர் 2ம் தேதி பிறந்தவர். தன் வயதில் பாதியை மருத்துவமனைகளில் கழித்தவர்.
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் சர் தாமஸ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளர் பெயரால் அழைக்கபட்டுகிறது. அவரது நிலஅளவையின் போது கண்டுபிடிக்கபட்டது என்பதற்காக அந்த பெயரை சூட்டியிருக்கிறார்கள். திபேத்தியர்கள் சீனர்களும் எவரெஸ்டினை வேறு பெயரால் தான் அழைக்கிறார்கள்.
மலையேறுகின்றவர்கள் யாவருக்கும் உள்ள பெரும்கனவு ஒருமுறையாவது எவரெஸ்டின் உச்சிக்கு சென்றுவர வேண்டும் என்பதே. ஆண்டு தோறும் பன்னாட்டு மலையேற்ற குழுவினர் இந்த சாகசத்திற்காக செல்கிறார்கள். பலர் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எட்மண்ட் ஹிலாரி இருவர் மட்டுமே நம் நினைவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வெளியே பல முக்கிய சாதனைகள் இருக்கிறார்கள்.
இவர்கள் அன்றி ஷெர்பாக்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் இமயமலைக்கு ஏறுவதை அன்றாட செயல் போல கருதுகிறார்கள். மலையேற்றத்தில் அனுபவம் உள்ள ஷெர்பாக்கள் வருசத்தில் நாலு முறை இமயமலையேறுகிறார்கள். அவர்கள் தான் எவரெஸ்ட் சாதனைக்கான வழிகாட்டிகள்.
மற்ற மலையேற்ற வீரர்களை விடவும் சீன் ஸ்வானரின் சாகசம் முற்றிலும் வேறு நோக்கங்கள் கொண்டது. தனது பதிமூன்றாவது வயதில் ஸ்வானருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அதிகபட்சம் மூன்று மாதம் உயிரோடு இருக்க கூடும் என்று நாள் குறிக்கபட்டது. அப்படியே முடங்கி போனார் ஸ்வானர். ஆனால் மனது தன் உறுதியை விடவில்லை.
தொடர்ந்த ஹீமோதெரபி சிகிட்சையின் வழியாக தலைமுடி கொட்டிப்போய் உருவம் சிதைந்து போனது. பள்ளிபடிப்பு நிறுத்தபட்டது. நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்குள் இருந்த போராடும் குணம் உன்னால் இதிலிருந்து வெளிவர முடியும் என்று உறுதியாக சொன்னது. அதன்படியே பள்ளியின் நீச்சல் குளத்தில் சென்று நீந்தும் பழக்கத்தை மேற்கொண்டார்.
நீச்சல் போட்டியில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பலரும் சிரித்தார்கள். ஸ்வானர் தனக்கு வெற்றிபெற வேண்டும் என்று நோக்கமில்லை ஆனால் நீச்சல் குளத்தை தன்னாலும் முழுமையாக சுற்றிவர முடியும் என்பதை நிருபிக்க முயற்சிப்பதாக சொன்னார். அவரது உடல்நலம் நீந்துவதற்கு உறுதுணையாக இல்லை. ஆனால் விடாத மனஉறுதியில் பங்குபெற்று நீந்தி அதே தூரத்தை கடந்திருக்கிறார்.
அவரது ஆர்வம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஒட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டார். அவரது நோயின் தன்மை மெதுவாக மாறத்துவங்கியது. நோய் கட்டுக்குள் அடங்கியது. மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். பள்ளிவாழ்க்கை கடந்தது. ஒரு நாள்விளையாட்டு போட்டியின் போது பந்து அடிவயிற்றில் பட்டு வலி உண்டாக்கவே மருத்துவ பரிசோதனை செய்தார். ஆனால் அந்த பரிசோதனையில் அவரது நுரையீரலில் சிறிய பந்து அளவு கட்டியிருப்பதை கண்டுபிடித்து அது இன்னொரு புற்றுநோயின் அறிகுறி என்றனர். திரும்பும் இன்னொருவிதத்தில் புற்றுநோய் உருவாகியிருப்பது மனசோர்வையும் பயத்தையும் உருவாக்கியது.
தன் முயற்சிகள் யாவும் தோற்று போய் மருத்துவ சிகிட்சைக்கு தன்னை அர்பணித்து கொண்டார். உடல் சிதைவுற்றது. உடனிருந்து கவனிக்க குடும்பமே தயங்கியது. சில வார காலமே வாழ்வு என்ற நிலையிருந்தது. ஆனால் சிகிட்சையின் பலனாக அவர் தற்காலிக குணம் அடைந்தார். மீதமிருந்த தன் வாழ்வை ஒரு முன் உதாரணமாக கொண்டு வாழ வேண்டும் என்று முடிவு செய்த போது தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.
இதுவும் தான் ஒரு சாகசம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக தன்னை போன்ற புற்றுநோய் உள்ளவர்களாலும் கூட உலகை வியக்க வைக்கும் சாகசம் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த மலையேற்றத்தை மேற்கொள்ள விரும்பினார்.
அந்த நினைப்பு உருவான உடன் அவர் தன்னுடைய இதயத்திடம் நீ மட்டும் இறுதிவரை உறுதியாக என்னோடு இருந்தால் நான் உலகை வென்றுவிடுவேன். உன் மீதான நம்பிக்கையில் தான் என் கனவை நோக்கி பயணம் செய்ய துவங்குகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்காக கேன்சர் கிளைம்பர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு ஒன்றை நிறுவி தனது மலையேற்றத்திற்கான ஆதரவு தேடத்துவங்கியதோடு புற்றுநோய் உள்ளவர்களுக்கான உதவி செய்யும் அமைப்பாக உருவாக்கினார். இந்த தேடுதலில் அவர் மலையேற்றம் செய்வதற்கான பயிற்சி மேற்கொண்டார். அதற்கு முன்பு மலையேறி பழக்கம் இல்லாத காரணத்தாலும் அவரது நுரையீரல் பாதிக்கபட்டு இருந்த காரணத்தாலும் மிக சிரமமாக இருந்தது.
ஆனால் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக மலையேறுவதில் ஆர்வம் அதிகமானது. எவரெஸ்டில் ஏறுவதற்கான முன்பயிற்சியாக கொலரொடோவில் உள்ள மலைகளில் ஏறி தன் பயிற்சியை மேற்கொண்டார். இவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று தொடர்ந்து கேலி பேச்சு இருந்து வந்தது. ஆனால் மலையேற்றத்தில் தன்னால் எவ்வளவு உயரமும் ஏற முடியும் என்ற நம்பிக்கையோடு இமயமலையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார்
எவரெஸ்ட்டிற்கு மலையேறும் குழுவினருக்கு நிறைய சட்டதிட்டங்கள் உடல் தகுதிகள் இருந்தன. அந்த காரணங்களால் ஸ்வானர் மறுக்கபட்டார். ஆனால் தன்வாழ்நாளின் ஒரே கனவு இது என்று சொல்லி போராடி பயணம் மேற்கொள்ள துவங்கினார். ஒரு சமையற்காரன் ஒரு உதவியாளர் இரண்டு ஷெர்பாக்கள் என்று சிறிய குழு அவர்களுடையது.
ஆறுமுறை எவரெஸ்ட் மலையேற்ற குழுவை வழிநடத்திய Mingmar Tsering Sherpa என்ற ஷெர்பாவின் தலைமையில் அவர்கள் குழு புறப்பட்டது.
ஸ்வானரின் உடலுக்குள் புற்றுநோய் வலுவாகி அவரை வலியும்வேதனையும் கொள்ள செய்தது. மூச்சு பயிற்சி செய்வதற்கான சிறப்பு பலூனை ஊதி ஊதி தன்னை தயார் செய்து கொண்டார். கடுமையான குளிர் மற்றும் உடல்சோர்வை அவரது அசதிக்கு உள்ளாக்கியது. ஆனால் அவரது மனவுறுதி கலையவேயில்லை.
இந்த பயணம் தனக்கு வாழ்க்கை கொடுத்துள்ள கருணை. ஒவ்வொரு நாளும் தான் வாழ்வது ஆச்சரியமான நிகழ்வு. ஆகவே அதை எப்படியாவது தன் கனவை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்ற முடிவோடு மலையேறத் துவங்கினார். உடல்வலி நோவை பொருட்படுத்தாமல் அவர்கள் முகாம் அமைத்து தங்கி தங்கி மலையேறினார்கள்.
பனிப்பொழிவு அவர்களை தடுத்தது. சில இடங்களில் ஸ்வானரின் உடல்நிலை நலிவடைந்தது. ஆனால் பயணம் கைவிடப்படவில்லை. தன்னால் எவரெஸ்டின் உச்சியை தொட முடியும் என்று உறுதியாக நம்பினார் ஸ்வானர். முடிவில் 2002ம் ஆண்டு மே 16ம் நாள் எவரெஸ்டின் உச்சியை சென்று அடைந்தார்
அந்த நாள் தன் வாழ்வின் மறக்கமுடியாத நாள் என்ற பெருமையோடு தன்னோடு கொண்டு சென்றிருந்த கேன்சர் கிளைம்பர்ஸ் கொடியை அசைத்து புற்றுநோய் சாதனைகள் செய்வதற்கு தடையல்ல என்று உலகிற்கு காட்டினார்.
எவரெஸ்டின் உச்சியில் நின்ற போது தன் பதிமூன்றாம் வயதில் இன்னும் மூன்று மாதங்களில் இறந்து போய்விடுவேன் என்று மருத்துவர்கள் சொன்னது அவருக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் அங்கிருந்தபடியே தன் விடாத நம்பிக்கையே இன்று தன்னை வெற்றி கொள்ள செய்திருக்கிறது என்று உரக்க கத்தியிருக்கிறார்.
எவரெஸ்டின் குளிரும் உலகின் உயரத்தில் தான் இருக்கிறோம் என்ற பெருமிதமும் தாண்டி அவருக்கு கிழே இறங்கி போய் உலகிற்கு தன் வெற்றியை சொல்ல வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கியிருந்திருக்கிறது. தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம் மலைப்பயணங்களின் வழியே தான் நிருபணம் செய்தது எந்த நோயும் நமக்கு ஒரு தடையல்ல. வாழ்விற்கு தேவை விடாத நம்பிக்கையும், மனவுறுதியும், கடுமையான உழைப்புமே என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பயணம் அவரை தொடர்ந்து உலகின் முக்கிய சிகரங்களில் ஏறுவதற்கு உந்துதலாக இருந்திருக்கிறது. தனிநபர் மனவுறுதிக்கான சாதனையாளர் என்ற உயரிய விருது அவருக்கு 2007ம் ஆண்டு வழங்கபட்டிருக்கிறது. இன்று புற்றுநோய்க்கு உள்ளானவர்களும் சாதனைகள் செய்து வாழமுடியும் என்பதற்கு முன்உதாரணமாக உள்ளார் ஸ்வனார்.
எவரெஸ்டின் பனிப்பொழிவின் காரணமாக ஸ்வானர் கடந்து சென்ற பாதையில் அவரது காலடிதடங்கள் இல்லாமல் போயிருக்ககூடும் ஆனால் மனித மனதில் அவர் கடந்து சென்ற பயணத்தின் சுவடுகள் எப்போதும் அதன் ஈரம் மாறாமல் அப்படியே இருக்கும் என்பதே உண்மை.
**