நிகழாத சந்திப்பு

புதிய குறுங்கதை

அவன் லேடிமெக்பெத்தை எலக்ட்ரிக் ட்ரைனில் வைத்துச் சந்தித்தான்.

அவள் லேடி மெக்பெத் தானா.

ஏனோ அவளைப் பார்த்த மாத்திரம் அவள் தான் மெக்பெத்தின் மனைவி. அரசனைக் கொலை செய்யத்தூண்டிய பெண் என்று தோன்றியது

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை அவன் பலமுறை படித்திருக்கிறான். லேடி மெக்பெத்தின் உண்மையான பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஏன் ஷேக்ஸ்பியர் அவளுக்குப் பெயர் வைக்கவில்லை.

லேடி மெக்பெத் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணுகிறவள். ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது போலவே அவள் மெக்பெத்தை இயக்குகிறாள். அதுவும் டங்கனைக் கொல்வதற்கு அவனை தயார் செய்வது ஒரு கிளிக்கு பேசக் கற்றுக் கொடுப்பது போன்று இனிமையாக செயலாக அவளுக்குத் தோன்றுகிறது..

சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போலத் தான் மெக்பெத் நடந்து கொள்கிறான். அவள் எதற்காகக் கொலைவாளை வாங்குகிறாள். ஏன் அந்தக் கொலைக்குப் பிறகு உறக்கமற்றுப் போகிறாள். தூக்கத்திலே நடக்கிறாள்.

தூக்கத்தைப் பறிகொடுத்த பெண்கள் எல்லோரும் லேடிமெக்பெத் தானா.

மின்சார ரயிலில் எதிரில் நிற்கும் பெண்ணும் குற்றவுணர்வின் ஆழத்தில் உறைந்தவள் போலிருந்தாள். கலையாத தூக்கம் கொண்ட முகம். அவளது கண்கள் லேசாகத் திறந்து கொள்ளும் போது வெளியுலகைக் காண விருப்பமேயில்லை. அந்தப் பெண்ணின் கைகளில் சிறியதொரு கைப்பை. அதற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கைப்பிடி.

அது கத்தியின் கைப்பிடி தானா.. இல்லை உடைந்த கரண்டியா..

லேடிமெக்பெத்தை இப்படி ரயிலில் சந்திப்பான் என அவன் ஒரு போதும் நினைத்ததில்லை.

சில பெண்கள் குடும்ப வாழ்க்கையினால் லேடிமெக்பெத்தாக உருமாறி விடுகிறார்கள்.

உண்மையில் சிறுமியாக இருந்த போது லேடி மெக்பெத் இவ்வளவு கள்ளமும் வெறுப்பும் இல்லாமல் தானே வளர்ந்திருப்பாள்.

காலை நேரத்து மின்சார ரயிலில் வழக்கத்தை விடக் கூட்டம் இரண்டு மடங்கு இருப்பது வழக்கம்.

அவசரமாக வேலைக்குச் செல்லும் முகங்கள். அதில் தெரியும் பதற்றம். நேற்றைய கோபங்கள். எரிச்சல்கள். இன்றைய ஆசைகள். அபூர்வமாக ஏதோ ஒரு பெண் அன்றைய நாளை அழகாக்குவது போல நேற்றின் சுவடே இல்லாமல் மலர்ச்சியாக வந்து சேருவாள். நறுமணம் போல அவளது வருகை அந்த ரயில் பெட்டியை சந்தோஷப்படுத்தும்.

இன்று அப்படி எவரையும் காண முடியவில்லை.

லேடிமெக்பெத் கறுப்பு நிற சால்வார் கமீஸ் அணிந்திருந்தாள். முப்பது வயதைக் கடந்திருக்கும்.

ஷேக்ஸ்பியர் காலத்தில் முப்பது வயது என்பது இளமையின் கடைசிப்படிக்கட்டு. பனிரெண்டு வயதிலே ஒரு பெண்ணின் கனவுகள் மலரத்துவங்கிவிடும். பதினாறு வயது தான் அவளது இளமையின் அடையாளம். அந்த வயதில் திருமணமாகிவிடும். லேடிமெக்பெத்தும் பதின்வயதிலே திருமணம் செய்து கொண்டிருப்பாள்.

மணவாழ்வில் வெறுமை உச்சமடையும் போது அது ஒரு ஆயுதமாகிவிடுகிறது. மெக்பெத்தின் கொலைவாள் என்பது அவள் மனைவியின் வெறுமையின் வடிவம் தானே.

மின்சார ரயிலில் நின்றிருந்த அந்தப் பெண் சோம்பல் முறித்துக் கொண்டாள். சுற்றிலும் பார்வையை ஒட்டினாள். இறுக்கமான முகத்துடன் இந்த உலகம் தனக்கானதில்லை என்பது போல வெறித்த படியே நின்றிருந்தாள்.

இரக்கத்தையும் அன்பையும் வேண்டாம் என்று உதறிச் சென்றது தான் லேடிமெக்பெத் செய்த தவறா.

அது தான் அவளது கொடுங்கனவாக உரு மாறிவிட்டதா..

அவள் தன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்

‘All the perfumes of Arabia will not sweeten this little hand’.

அவள் தனக்கும் ஏதாவது உத்தரவு தருவாள் என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவள் கவனித்தவள் போல ஏறிட்டாள்.. சப்தமில்லாமல் அவள் உதடுகள் எதையே சொன்னது போலிருந்தது.

என்ன உத்தரவு அது.

தந்தையைப் போல நேசிக்கும் ஒருவரை ஏன் மெக்பெத் கொன்றான். அது மனைவியின் ஆசையை நிறைவேற்ற மட்டும் தானா. டங்கனின் மனைவி உயிரோடு இருந்து உடன் வந்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா.

எதிரே நிற்கும் கறுப்பு உடை அணிந்த பெண் வசீகரமாகவும் பயமாகவும் இருந்தாள்..

அவன் மெக்பெத் இல்லை. ஆனால் அவள் லேடி மெக்பெத்.

அவன் சற்றே பயத்துடன் மின்சார ரயிலின் வேகத்தில் துண்டிக்கப்படும் புறக்காட்சிகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான்

அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றபோது லேடிமெக்பெத் தூக்கத்தில் நடப்பவள் போலவே இறங்கி நடந்து போனாள்.

ரயில் புறப்பட்டபிறகு கவனித்தான். அவள் நின்றிருந்த இடத்தில் ஒரு கத்தி விழுந்து கிடந்தது. அது அவள் கைப்பையிலிருந்தது தானா..

அவன்  கொல்ல வேண்டிய டங்கன் யார்

மனதிற்குள்ளாக அவரைத் தேடத்துவங்கினான்

•••

0Shares
0