தினசரி திரைப்படங்களைக் காணும் போது வெகு அரிதாகவே ஒன்றிரண்டு படங்கள் நம்மை புரட்டிப் போட்டுவிடுகின்றன. அது போன்ற படங்களைப் பார்த்து முடித்த சில நாட்களுக்கு வேறு படங்களைக் காண்பதற்கு விருப்பமேயிருக்காது. அந்த மனநிலையில் அதே படத்தை அடுத்தடுத்து நாலைந்து முறை பார்ப்பது கூட நடந்திருக்கிறது. சமீபத்தில் அப்படி நான் பார்த்து வியந்த திரைப்படம் டகாசி கிடானோவின் A Scene at the Sea சமகால ஜப்பானிய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர் டகாசி கிடானோ.( Takeshi Kitano) இந்த படம் 1991ல் வெளியாகி உள்ளது.
டகாசி கிடானோவின் படங்கள் என்றாலே போலீஸ் கதைகள் மற்றும் குற்றவுலகை பற்றிய வன்முறையான படங்கள் என்ற பொதுபிம்பத்தை மாற்றியமைத்த படம் இதுவே. இதிலிருந்து கிடானோ கலைநுட்பமான படங்களை உருவாக்கும் முக்கிய இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். ஜப்பானில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெளியான சிறந்த காதல் திரைப்படங்களில் இப்படம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு முற்றிலும் தகுதியானது இப்படம் என்பதைப் பார்த்து முடித்தபோது நானும் உணர்ந்தேன்.
சம்பிரதாயமான காதல்கதைகளைப் போன்ற நெருக்கமான நிகழ்வுகளோ, உணர்ச்சிவேகமோ இதில் கிடையாது. ஆனால் படம் முடியும் போது காதலின் துயரைப் பார்வையாளன் தனக்குள் பூரணமாக உணர முடியும். அது தான் இப்படத்தின் சிறப்பு.
படத்தின் மையமான இருப்பது கடலும் கோடைகாலமும். படத்தின் ஜப்பானியத் தலைப்பு கோடைகாலமும் மிக அமைதியான கடலும் என்றேயிருக்கிறது. அலையேறியாடும் கடல்விளையாட்டைச் (Sea surfing)சுற்றியே கதை நிகழ்கிறது.
இளைஞனான சிகூரு ஊமை மற்றும் காது கேளாதவன். அவன் குப்பை லாரி ஒன்றில் குப்பை அள்ளுபவனாக வேலை செய்கிறான். படம் அவர்கள் குப்பை அள்ளுவதற்காக வண்டியில் செல்வதில் இருந்தே துவங்குகிறது. ஒரு இடத்தில் குப்பைப் பைகளை அள்ளி வண்டியில் போடும் போது அலையேற்றலுக்கான மிதவை ஒன்று உடைந்து கிடப்பதைக் காண்கிறான். அதை ஒடிச்சென்று எடுத்து தன் வீட்டிற்குக் கொண்டுவருகிறான்.
அந்த மிதவையின் வழியே அவனுக்கு கடல் விளையாட்டிற்கான ஆர்வம் உண்டாகிறது. மிதவையைச் சரிசெய்து எடுத்துக் கொண்டு கடற்கரைக்குக் கிளம்புகிறான். அவனது தோழியாக இருப்பவள் டககோ என்ற இளம்பெண். அவளது முகபாவத்திலே குழந்தைதனமும், தனியான ஈர்ப்புமிருக்கிறது. அவளும் காது கேட்காத, வாய்பேசமுடியாதவள்.
இருவரும் கடற்கரையை நோக்கி நடந்து செல்கிறார்கள். அவர்களை வழியில் விளையாடும் பையன்கள் கேலி செய்கிறார்கள். கல்லெடுத்து எறிகிறார்கள். சிகூருவிற்கு கடல் என்பது நிசப்தமான ஒரு நீர்வெளி. அவன் கண்களால் மட்டுமே கடலைக் காண்கிறான். அதனால் அவனுக்கு கடலிடம் பயமில்லை. அவன் அதை வியப்போடு பார்த்தபடியே இருக்கிறான்.
டககோவுடன் கடலின் அருகாமைக்குச் சென்று தனது உடைகளைக் களைந்துவிட்டு மிதவையோடு அலையை நோக்கிச் செல்கிறான். அவனது உடைகளை ஒழுங்காக மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிறுமியை போல அவனை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறாள் டககோ. அந்த முகத்தில் தான் எத்தனை ஈடுபாடு. அலைகளில் ஏறமுடியாத சிகூருவை அவள் பரிகசிப்பதேயில்லை. கடலைத்தான் வருத்ததுடன் பார்க்கிறாள்.
சிகூரு நினைத்தது போல கடலில் அலையேறி விளையாடுவது அவ்வளவு எளிதாகயில்லை. தடுமாறி தண்ணீரில் விழுகிறான். பயிற்சி பெற்ற வீரர்கள் சிலர் அவனைப் பரிகாசம் செய்கிறார்கள். எந்த பரிகாசக் குரலும் அவன் காதில் விழுவதேயில்லை. அவன் அலையோடு போராடுகிறான். டககோவிற்கு கடலை விடவும் தனது தோழன் அலையில் விளையாடுகிறான் என்பதே முக்கியமாகயிருக்கிறது. அவள் அவனையே பார்த்து கொண்டிருக்கிறாள். அலைமீதேற முயன்று தோற்றுப்போய் திரும்பும் இருவரும் அமைதியாக நடக்கிறார்கள். படம் முழுவதும் மிதவையைக் கையில் பிடித்தபடி சிகூரு நடப்பதும் அவன் பின்னால் டககோ அமைதியாக பின்தொடர்ந்து நடப்பதுமான காட்சி அருமையான இசையோடு வருகிறது. அந்த நடையின் வழியாகவே அவர்களுக்குள் உள்ள அன்பும் நட்பும் வெளிப்படுத்தபட்டுவிடுகிறது. மற்றவர்களின் கேலியைப் பற்றிய கவலையின்றி சிகூரு ஒவ்வொரு நாளும் கடற்கரைக்கு வருகிறான்.
அது கோடைகாலம் என்பதால் கடல்விளையாட்டில் கலந்து கொள்ள நிறைய ஆட்கள் வருகிறார்கள். சிகூரு சரி செய்த மிதவை ஒரு நாள் முறிந்து போகிறது. புதிதாக ஒரு சர்ப் போர்டு வாங்க வேண்டும் என்று கடையில் விலை விசாரிக்கிறார்கள். டககோ தனது சேமிப்புப் பணத்தை கூட அவனுக்காக செலவிட முன்வருகிறாள். அப்படியிருந்தும் விலை அதிகமென்பதால் அதை அவர்களால் வாங்க முடியவில்லை. மாதசம்பளம் வந்தவுடன் சிகூரு முதல்வேலையாக ஒரு சர்ப் போர்டை விலைக்கு வாங்குகிறான். அதில் அவனை விட டககோ அதிக சந்தோஷமடைகிறாள். கடைக்காரன் அவனுக்காக சில பரிசுகளைத் தருகிறான்.
சிகூரு முதன்முறையாக தனது புதிய மிதவையோடு அலையில் ஆடச் செல்கிறான். அன்றைக்கு கடலில் அலை அதிகமில்லை. அவனும் டககோவும் கடலைப் பார்த்தபடியே காத்திருக்கிறார்கள். அழுக்கேறிய அந்த கடற்கரையும் கோடைகாலத்து கடலுமாக காட்சிகள் நீள்கின்றன. சிகூருவின் ஆர்வத்தை அறிந்த நீச்சல்உபகரணங்கள் விற்கும் கடையின் உரிமையாளர் அவனை இன்னொரு நகரில் உள்ள கடற்கரையில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும்படியாக உற்சாகப்படுத்துகிறார்.
அதற்காக அவனும் டககோவும் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். அந்த கடற்கரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வேகமான அலைகள் வீசும் கடற்கரையது. போட்டியில் தனது பெயர் அழைக்கபடும் போது காது கேளாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாமல் போகிறான் சிகுரு. போட்டி முடிந்து யாவரும் கலைந்து போன பிறகு அதே இடத்தில் அவனும் டககோவும் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த முகத்தில் ஏமாற்றமும் அவமதிப்பும் படிந்திருக்கிறது. அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.
சிகூருவை உற்சாகப்படுத்தி மீண்டும் அலையாடலில் ஈடுபடுத்துகிறாள் டககோ. அவர்கள் இருவருக்குள்ளும் படம் முழுவதும் ஒன்றிரண்டு சைகை உரையாடல்கள் மட்டுமே இருக்கின்றன. மற்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதாலும், தொட்டு உணர்வதாலுமே அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.
டககோ எப்போதும் அவனுக்காக கடற்கரையில் காத்துக் கொண்டேயிருக்கிறாள். அவர்களின் காதல் நேரடியாக வெளிப்படுத்தபடுவதில்லை. ஆனால் உணரச்செய்யப்படுகிறது. சிகூரு கடலில் தொடர்ந்து பயிற்சி எடுத்து தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். அப்போது ஒரு நாள் கடற்கரையில் ஒரு கோமாளி போன்ற ஆள் தனது காதலியோடு வந்து அலையில் மிதக்க முயற்சிக்கிறான். அவன் மனைவி சிகூருவின் அருகாமையில் அமர்ந்து கொண்டு அவனுக்கு காது கேட்காது என்பதை அறியாமல் ஏதோ பேசுகிறாள்.
தன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணோடு சிகூரு நெருக்கமாக இருப்பதை கண்ட டககோ வேதனைப்பட்டு அவனை விட்டு ஒதுங்கிப் போகிறாள். அந்தப் பிரிவு அவனை நிலை குலையச் செய்கிறது. டககோ வீட்டின் முன்போய்நின்றபடியே அவளுக்காகக் காத்துகிடக்கிறான். அவள் இல்லாமல் தனியே கடற்கரைக்கு பயிற்சி செய்யப் போகிறான். அவளை எங்கே காணவில்லை என்று கேட்பவர்களுக்கு பதில் தராமல் நடக்கிறான். கோடை அவன் பின்னாடி வந்தபடியேயிருக்கிறது.
மனதில் டககோவின் நினைவுகள் கொப்பளித்தபடியே இருக்கின்றன. முடிவில் ஒரு நாள் அவள் சிகுருவின் அன்பை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர்கிறாள். இன்னொரு போட்டி நடக்க இருப்பதாக தகவல் அறிந்து அதற்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான்.
அந்த கடற்கரைக்கு இருவரும் பயணம் செய்து போகிறார்கள். அங்கே போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறுகிறான். டககோ மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். தனது வாழ்வில் முதன்முறையாக ஒன்றை சாதித்த பெருமிதம் அவன் முகத்தில் இருக்கிறது. முடிவில் கோடைகாலம் முடிகிறது. டககோ அவனை விட்டுப் பிரிந்து போக இருக்கிறாள். அந்த பிரிவை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சிகூருவோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை மிதவையில் ஒட்டி கடலில் மிதக்கவிடுகிறாள். இருவரும் கடலைப் பார்த்தபடியே நிற்பதோடு படம் நிறைவுபெறுகிறது
படம் முழுவதும் இசையும் காட்சிபடுத்துதலும் கதாபாத்திரங்களின் மனவுணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் உடற்குறைபாடு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் மீது பரிதாபம் உருவாக்கும் எந்த முயற்சியும் இயக்குனர் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இயல்பாக தினசரி வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். வார்த்தைகள் தேவைப்படாத காதல் அது என்பதால் அவர்களது சிறுசிறு செயல்களின் வழியே அந்த நட்பும் அன்பும் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.
டககோ சதா தனது இடுக்கிய கண்களால் அவனைப் பார்ப்பதும் , மிதவையை பேருந்தில் ஏற்ற முடியாது என்று சொன்னதால் பஸ் பின்னாடி சிகூரு ஒடி வரும் காட்சியில் கடைசி நிறுத்தம் வரை காலி பேருந்தில் நின்று கொண்டே வரும் டககோவின் செயலும், அவன் மீது கோபம் தீர்ந்து மீண்டும் அவனைச் சந்திக்கும் காட்சியில் அவளது முகத்தில்ஒளிரும் புன்னகையும், படம் முழுவதுமுள்ள அவளது ஒட்டமும் என காதலின் கவித்துமான காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன.
நேரடியான, எளிமையான திரைக்கதை, மிகக்குறைவான கதாபாத்திரங்கள். பின்புலமாக ஜப்பானிய கோடைகால நிகழ்வுகள், கடலாடும் விளையாட்டுகள் என்று கிடானோ தனது கதைக்களத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களின் நிகழ்வுகளுக்கு இணையாக குப்பைலாரி ஒட்டுபவரின் அன்பு, கோமாளி போல இருவர் கடற்கரையில் அலைவிளையாட்டில் செய்யும் வேடிக்கைகள், மற்ற விளையாட்டு வீரர்களின் குதுôகலம், அவர்களின் காதலிகளின் உற்சாகம், என்று சிறுசிறு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்து உருவாக்கபட்டிருப்பது இதன் தனித்துவம்.
காதலைச் சொல்வதற்கு எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லை என்பதற்கு இப்படம் இன்னுமொரு உதாரணம். கிடானோவை ஜப்பானிய சினிமா கொண்டாடுவதற்கு இந்த ஒரு படம் போதும் என்றே தோன்றுகிறது.
**