நினைவின் கலகம்.

மறதிக்கு எதிராக நினைவின் கலகம் தான் எழுத்து என்கிறார் மிலன் குந்தேரா. இன்றைய புகலிடக்  புனைகதைகள்  பெரிதும் இந்த முனைப்பிலிருந்தே பிறக்கின்றன. மறக்கடிப்பதை வேலையாக செய்வதே அதிகாரத்தின் பெருந்தந்திரம். அதைப் புனைவின் வழியே எதிர்க்கொள்வதும் நினைவின் தூண்டுதலால் புல்லின் நிழல் அளவு நம்பிக்கையாவது ஏற்படுத்திவிட முடியும் என்று முயற்சிப்பதுமே கலையின் தொடர்ந்த செயல்பாடாக உள்ளது.



இன்றைய சிறுகதைகள் அன்றாடப் பிரச்சனைகளின் வடிகால்கள் அல்ல. மாறாக வாழ்வின் மீதான தீவிர விசாரணைகள்.  கதை ஒரு புனைவெளியாகவே, மாற்று இருப்பாகவே அடையாளப்படுத்தபடுகிறது. இதில் எது புனைவு எது யதார்த்தம் என்று பிரித்து அடையாளம் காணமுடியாதபடி நிஜமும் கற்பனையும் ஊடுகலந்திருக்கின்றது.



இறந்து போனவர்கள் தங்கள் பெயர் மற்றும் அடையாளங்களை பூமியிலே விட்டுப் போய்விடுகிறார்கள். உடல் இல்லாமல் அவை தனித்து நடமாடுகின்றன. இறந்தவர்களின் குரல்கள் வலிமையானவை.  அவை தங்களைக் கண்டு கொள்ள சொல்லி யாசிக்கின்றன. என்று ஒரான் பாமுக்  எழுதியதை நிஜமாக்கியிருக்கிறது இன்றைய இலங்கைச் சூழல். 


 
ஹஸீன் தன்னை யுத்தத்தின் குழந்தை என்றும். ஈழத்தைப் பொருத்த வரைக்கும் தனக்கும் போருக்கும் ஒரே வயது. அதை பார்த்து எந்த கணமும் பிரமித்ததில்லை. அது அன்றாட வாழ்வில் கலந்திருக்கிறது என்றும் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.



ஹஸினை நேர்கொள்ளும் போது அவரது குரலில் யுத்தம் உருவாக்கிய வலியின் சிறுசுழிப்பு கூட இருக்காது. ஹஸீனை பற்றி யோசிக்கையில் எப்போது அவரது  முகத்தில் ஒளிரும் அற்புதமான சிரிப்பே நினைவிற்கு வருகிறது. அந்தச் சிரிப்பு குழந்தையின் உதட்டில் ஒட்டிய பருக்கை போன்று தன்னியல்பானது. விளையாட்டுதனமிக்கது.



ஹஸீன் அதிகம் பேசக்கூடியவரில்லை. சில தலையாட்டல்கள், ஒற்றைவார்த்தை பதில்கள், வாசிப்பின் மீதான தீவிர ஆர்வம், தான் விரும்பிய சினிமாவை எடுத்துகாட்டி விட  முடியும் என்ற விடாப்பிடியான நம்பிக்கை. அப்படி தான் ஹஸீன் எனக்கு அறிமுகமானார். ஹஸீனின் ஒரு சிறுகதையை இரண்டு வருசங்களுக்கு முன்பு காலச்சுவடில் வாசித்தேன்.  எழுத்தின் நுட்பம் கதையில் மிக தனித்துவமாக வெளிப்பட்டிருந்தது. இப்போது ஒரு சேர தொகுப்பாக கதைகளை வாசிக்கையில் ஹஸீன் மிகுந்த நம்பிக்கைக்குரிய படைப்பாளியாக வெளிப்படுகிறார்.



தமிழகத்தை விடவும் ஈழத்துப் படைப்புலகில் இஸ்லாமிய வாழ்க்கை அசலாகவும் நெருக்கமாகவும் அதிகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஹஸீன் அந்த மரபின் தொடர்ச்சி போலவே இருக்கிறார். அவரது கதைகளில் பெரும்பான்மை ஈழத்து இஸ்லாமிய வாழ்வின் துயரச்சித்திரங்களே. அதை வாசிக்கையில் ஏனோ வைக்கம் முகமது பஷீரின் நினைவு எனக்குள் பீறிடுகிறது.



பஷீரின் கதைகள் குடும்பத்திலிருந்து வெளியேறிய மனிதனின் அவலத்தையும், அவன் நினைவில் பீறிடும் பால்யகாலத்தையுமே பெரிதும் வெளிப்படுத்த கூடியது. பஷீர் தன்னுடைய நிகரற்ற கேலியின் வழியாக அவமானத்தை, ஆறாத துயரத்தை ஒரு மலரென மாற்றி தானே நுகர்ந்து கொள்ளும் மாயத்தன்மை கொண்டிருக்கிறார். ஹஸின் கதைகள் வலியை ஒளித்து கொள்ள புனைவை நம்புகின்றன, துணைக்குச் சேர்த்து கொள்கின்றன. ஒரு வகையில் அவரது புனைபாத்திரங்களின் ஒரே புகலிடம் எழுத்தே. ஒரு கதையில் லா.ச.ராவின் த்வனியில் ஒரு பெண் எழுதிய கடிதத்தை உபைத் என்ற கதாபாத்திரம் வாசித்து காட்டுகிறது. அது தான் இந்த உந்துதலின் சாட்சி.



இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளது. இந்த கதைகளின் பொதுதன்மை அவை நினைவுகளைத் துல்லியமாகவும் அடர்த்தியாகவும் பதிவு செய்கின்றன என்பதே. குறிப்பாக ஒசைகள் மற்றும் நுண்ணிய சலனங்களை இருப்பின் அடையாளங்களாக முன்வைக்கின்றன. அவரே குறிப்பிட்டுச் சொல்வது போல வலியை மிகைப்படுத்தி சுயஇரக்கம் கொள்வதற்கான முயற்சிகள் எதுவும் அவரது கதைகளில் இல்லை.



இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும்  கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்க வெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறுஒசை கூட பதிவு செய்யப்படுகிறது. அவர் கதையை வளர்த்துக் கொண்டு போவதில்லை. மாறாக இடைவெட்டாக நினைவையும் நடப்பையும் ஒன்று கலக்கிறார். இருட்டிற்குள்ளிருந்து யாரோ உற்று கவனிப்பது போன்று கதைக்கு வெளியே அவரது இருப்பு எப்போதுமிருக்கிறது. அவர் குறுக்கிடுவதோ, விளக்கம் சொல்வதோயில்லை.



இந்தத் தொகுப்பில் இரண்டுவகை கதைகள் உள்ளன. ஒன்று நடப்புலக நிகழ்வுகள் எதையும் சாராத மாயப்புனைவுகள். அவற்றை மாயம் என்று கூட சொல்லமுடியாது. அவை மனதின் ஆழத்தில் மிதந்து கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தோஷம் ஏதோவொன்றின் பாய்ச்சல் போன்றே வெளிப்படுகிறது. மற்ற வகை சிதறுண்ட நினைவுகளை ஒன்று சேர்த்து உருவாக்கும் காதல்சித்திரங்கள். இரண்டிலும் அவர் மொழியை கையாளும் விதம் மிகுந்த கவித்துவமானது. குறைவான உரையாடல்களே கதைகளில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் வழியே மனம்  கொள்ளும் ஆதங்கம் முழுமையாக வெளிப்படுத்தபடுகிறது.



இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் விருப்பமான கதைகள் இரண்டு. எனது விழியில் அலையும் உனது கூந்தல் மற்றும் பூனை  அனைத்தும் உண்ணும். 
எனது விழியில் அலையும் உனது கூந்தலே நம் காலத்தின் காதல்கதை. இங்கே வயதோ உருவமோ காதலுக்கு தடையாக இல்லை. இது பசலை படர்ந்த ஒரு ஆண் கொள்ளும் தவிப்பின் ஊசலாட்டம். வெறுமையில் உழலும் இருப்பை காதலே அர்த்தப்படுக்கிறது. தண்ணீருக்குள் நுழையும் மேகம் போல காமம் சப்தமின்றி நுழைகிறது. அதை பயம் வெளியேற்றிவிடுகிறது. அடர்த்தியான மொழியும் நெருக்கமான கதை சொல்லும் குரலும் இக்கதையின் தனிச்சிறப்புகள்.



பூனை அனைத்தையும் உண்ணும் கதை சற்றே நீண்டது. குறுநாவலாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். நிஸ்தார் என்ற கதாபாத்திரத்தின் வழியே அவனுக்கு உபைத் என்ற பத்திரிக்கை ஆசிரியருக்கமான உறவும் அவன் சிபானி என்ற மாணவி மீது கொண்ட காதலும் விவரிக்கபடுகிறது. ஆனால் இதன் ஊடாக முஸ்லீம்கள் மீது நிகழ்த்தபட்ட வன்முறைகள் அதற்கான காரணங்கள் என்று தீவிர அரசியல் விவாதங்கள், மற்றும் மாற்று அரசியல் பிரக்ஞை சார்ந்த முனைப்புகள் இன்னொரு தளத்தில் நடைபெறுகிறது.


திரைப்படத்தின் காட்சிகள் போல துல்லியமான விவரணைகளின் வழியே கதாபாத்திரங்கள் உயிர்பெற்று நடமாடுகிறார்கள். சிபானி என்ற அந்த அழகியின் முகம் வாசிப்பின் வழியே காகிதத்தில் தோன்றி மறைகிறது. நிஸ்தாரின் இருப்பு விழித்துக் கொண்ட ஒரு மனதின் ஊசலாட்டம் அல்லது நிலை கொள்ளமை. அது ஒரு புள்ளியில் தங்கமறுத்து அலைந்து கொண்டேயிருக்கிறது.



ஹஸீன் பல கதைகளில் பிடித்தமான சினிமா பாடல்களை கேட்பது கதாபாத்திரங்களுக்கு விருப்பமான செயலாக குறிப்பிடப்படுகிறது. அவை வெறும் திரையிசை பாடல்கள் அல்ல மாறாக நினைவை தூண்டும் புள்ளிகள். மனதின் வெளிப்படுத்தபடாத ஏக்கம் இயலாமை துக்கம் இவையே மறுபடிமறுபடி பாடல்களை கேட்க வைக்கின்றன.



ஹஸீன் புதிய கதைக்களத்தையும் சொல்முறையும் உருவாக்கியிருக்கிறார். இந்த கதைகள் இன்றுள்ள தமிழ் சிறுகதைகளின் தேக்கத்தை உடைத்தெழுந்து தனித்துவமானதாக வெளிப்பட்டுள்ளது. இவ்வகையில் ஹஸின் தொடர்ந்து வாசிக்கபட வேண்டிய முக்கிய படைப்பாளியே.


••••
அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளிவர உள்ள ஹஸீனின் பூனை அனைத்தையும் உண்ணும் சிறுகதை தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை.

0Shares
0