இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரைப் படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் அமரோஸ் பெரோஸ், பேபல் உள்ளிட்ட முக்கியப் படங்களை இயக்கிய அலெஜாந்ரோ கொன்ஸாலேஸ் இன்னாரிட்டோ இயக்கியுள்ள பேர்ட்மேன் (Birdman) படம் பார்த்தேன்.
ஆஸ்கார் ஆஸ்கார் பட்டியலில் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் பரிசுகளை அள்ளிக் கொண்டு போக உள்ளது என்பது உறுதி.
இப்படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. Emmanuel Lubezki இதன் கேமிராமேன் ஒரு ஷாட் இரண்டு நிமிசம் முதல் ஒன்பது நிமிசம் வரை நீண்டு செல்லக்கூடியது. இத்தனை நேர்த்தியான லாங்ஷாட் கொண்ட , படம் எதையும் சமீபத்தில் காணவில்லை. இதைக் காணும் போது அலெக்சாண்டர் சுக்ரோவ் இயக்கிய தி ரஷ்யன் ஆர்க் படம் நினைவில் வந்து போனது.
ஒளிப்பதிவு மட்டுமில்லை, இயக்கம் ,நடிப்பு, , திரைக்கதை இசை என ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் துவக்க காட்சி மறக்கமுடியாத ஒன்று. கிராவிட்டி படத்தின் துவக்க்காட்சியில் இது போன்ற பிரமிப்பை அடைந்திருக்கிறேன்.
ஹாலிவுட் நடிகர் Riggan Thomson ஒ ரு காலத்தில், பறவை மனிதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹீரோவாக பெயர் பெற்றவர். தற்போது வாய்ப்புகள் இல்லாமல் கண்டுகொள்ளப்படாத நடிகராகயிருக்கிறார்.
அவர் ஏற்று நடித்த பறவைமனிதன் கதாபாத்திரம் அவரைக் கேலி செய்வதாக ஒரு பிரம்மை அவருக்குள்ளது. தரையை விட்டு மிதக்கவும், தூரத்திலிருந்தபடியே பார்வையாலே ஒன்றை மாற்றவிடும் சக்திகொண்டவராகவும் தன்னை நம்புகிறார்
தனது திறமைகளை நிரூபணம் செய்யப் பிராட்வே நாடகவுலகில் எழுத்து, இயக்கம், நடிப்பு எனத் தீவிரமாகச் செயல்படும் தாம்சன். ரேமண்ட் கார்வரின்”What We Talk About When We Talk About Love” சிறுகதையைத் தழுவி நாடகம் ஒன்றினை நிகழ்த்த திட்டமிடுகிறார்.
இதனை அவரது நண்பர் ஜாக் தயாரிக்கிறார், ரிக்கின் காதலி முக்கிய நடிகையாக நடிக்கிறாள், ஒத்திகையின் போது ரால்ப் என்ற நடிகரின் மீது திடீரென விளக்கு விழுந்து காயமாகிறது. தனக்கு அந்த நடிகரைப் பிடிக்கவில்லை என்பதால் மனதிற்குள் கட்டளை கொடுத்து விளக்குத் தலையில் விழுந்ததாகத் தாம்சன் நம்புகிறார்.
இதனால் ரால்ப்பிற்குப் பதிலாக மைக் என்ற நடிகரைத் தேர்வு செய்கிறார்கள், அவன் தன்னைவிடப் பெயர் வாங்கிவிடக்கூடியவன் எனப் பொறாமை கொள்கிறார் ரிக்,
மைக் இறுதிகாட்சியில் நடிக்க நிஜ துப்பாக்கி வேண்டும் எனக் கேட்கிறான். நாடக ஒத்திகையின் ஊடாக ரிக்கின் கடந்தகாலம் நினைவுகளாகவும் பிம்பங்களாகவும் பீறிடுகின்றன
கற்பனையும் மனமயக்கமும் கொண்ட ரிக்கின் குழப்பங்கள் தடுமாற்றங்கள், வெறுப்பு, கோபம் படம் முழுவதும் அசலாக வெளிப்படுத்தபட்டுள்ளது.
தன் மகளுடன் மைக ரகசியமாகப் பழகுவது அவருக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு பக்கம் நாடகவிமர்சகர் தபிதா டிக்கின்சன் ஹாலிவுட்டின் ஒய்வு பெற்ற நடிகர்கள் நடிக்கும் இது போன்ற குப்பை நாடகங்களைத் தான் கிழிகிழியெனக் கிழித்து எழுதப்போவதாகச் மிரட்டுகிறாள்.
நாடக அரங்கேற்றத்தின் போது உண்மையான துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ரிக்,
முடிவில் மகள் வந்து காணும் போது அவரைக் காணவில்லை, மறைந்துவிட்டிருக்கிறார். மகள் வானை வெறித்துப் பார்த்து சிரிக்கிறாள்.
தோல்வியுற்ற கலைஞனின் சிதைந்த மனதை வெளிப்படுத்தும் இப்படம் சாப்ளினின் லைம்லைட் (Limelight) படத்தினை நினைவுபடுத்துகிறது.
நேர்கோட்டில் பயணிக்காத திரைக்கதைகளை எழுதுவதும், இயக்குவதும் அலெஜாந்ரோ கொன்ஸாலேஸ் இன்னாரிட்டோ பாணி. இப்படமும் அது போன்ற ஒன்றே.
சிறந்த நடிகருக்கான விருது Michael Keatonக்கு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்
•••