கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் என்று அறிமுகம் செய்து வைத்தார். சந்தோஷமாக இருந்தது.
சிறுவாணி வெளியிட்டுள்ள ஓவியரும் திரை விமர்சகருமான ஜீவா எழுதிய ஒரு பீடியுண்டோ சகாவே என்ற திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன்.

கோவையில் வசிக்கும் ஓவியர் ஜீவா சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பேனர் வரைவதில் நிகரற்றவர். பத்திரிக்கை தொடர்கள். அட்டை ஓவியங்கள், நவீன ஓவியங்கள். சுவரோவியங்கள் வரைவதில் தேர்ந்தவர்.

இந்தத் தொகுப்பில் சினிமா பேனர்கள் பற்றிய அவரது கட்டுரை சிறப்பானது. சட்டம் படித்த ஜீவா எப்படிப் பேனர் வரையத் துவங்கினார் என்பதிலிருந்து, சினிமா பேனர் வரையும் நுட்பங்கள். அதை எப்படி நிறுத்தி வைப்பார்கள். ஹாலிவுட் மற்றும் இந்தி சினிமாவிற்கு எப்படி பேனர் வரைந்தார்கள் என்பதன் சிறப்புகளையும் அவரது தந்தை வேலாயுதம் சினிமா பேனர்கள் வரையத் துவங்கிய காலம் பற்றிய நினைவுகளையும் அற்புதமாக எழுதியிருக்கிறார். இதை அப்படியே ஒரு ஆவணப்படமாக உருவாக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் சினிமா பேனர்களைப் பார்த்தே மக்கள் கதை சொல்லுவார்கள். புதுப்படப் பேனர் வைத்தவுடன் அதைக் காணுவதற்காகவே மக்கள் திரண்டு செல்லுவார்கள். மதுரையிலும் சென்னையிலும் பார்த்த அழகான சினிமா பேனர்கள் நினைவில் நிழலாடுகின்றன.
அந்தத் திரை விளம்பரக் கலையின் நுட்பங்களையும் தனித்துவத்தையும் ஜீவா உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பிளக்ஸ் பேனர்களின் வருகை அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையை எப்படி முடித்துவிட்டது என்ற கட்டுரையின் கடைசி வரி மனதைத் தொடுகிறது.
ஒரு கட்டுரையில் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஜீவா இப்படி எழுதியிருக்கிறார்
சினிமா தியேட்டர் அனுபவம் என்பது வாலிப வயதைக் கடந்தவர்களுக்கும் மத்திய வயதுக்காரர்களுக்கும் மறக்கமுடியாத கடந்த கால அனுபவம். இன்று பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. பல, தரைமட்டமாகிவிட்டன. இன்னும் பல,வேறு வடிவங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. தியேட்டர் இடைவேளையில் சோடா கலர் விற்ற காலத்திலிருந்து, மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களில்,ஏற்கனவே தந்த ஆர்டரின்படி மசாலா மணக்க உணவுப்பொருட்களை இருட்டில் பணியாளர்கள் கொண்டு வந்து நம் மடியில் வைக்கும் காலம் வரை பார்த்தாயிற்று. தியேட்டர்களில் நீண்ட வரிசையும், சைக்கிள் கியூவும், டூவீலர் டோக்கனும் எல்லாமே பழங்கதை ஆயின
கியூப் முறையில் சாட்டிலைட் மூலம் படங்கள் திரையிடல் தொடங்கியது. ஃபிலிம் என்பதே ஓர் அதிசயப்பொருள் ஆனது. பழைய கருப்பு வெள்ளைப் படங்கள் வண்ணமடிக்கப்பட்டன. ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர். பழைய படங்களை ஃபிலிமிலிருந்து டிஜிட்டலாக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். பெரும்பாலும் எம்ஜியார், சிவாஜிபடங்கள் இந்த மாற்றத்துக்குள்ளாயின. திரைப்பட விநியோகமென்ற தொழில் பெரும் பாதிப்புக்குள்ளானது. தொழில்நுட்ப மாற்றங்களால் ஃபிலிம் லேப்கள் மூடப்பட்டன. பல பிரம்மாண்ட ஸ்டுடியோக்கள் அபார்ட்மெண்டுகளாகவும் மருத்துவமனைகளாகவும் உருமாறின.
திரையுலகம் சந்தித்த மாற்றத்தை இதைவிடச் சிறப்பாக எழுதிவிடமுடியாது.
ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர் என்பது போன்ற ஜீவாவின் கிண்டல் தனித்துவமானது. இது எல்லாக் கட்டுரைகளிலும் அழகாக இழையோடுகிறது.
மலையாள திரைப்படவுலகின் முக்கியத் திரைப்படங்களையும் திரை நட்சத்திரங்களையும் பற்றிய அவரது ஞாபக சக்தி வியப்பூட்டுகிறது. அந்தக் கால மலையாளப்படங்கள் துவங்கி இன்று வெளியான பகத்பாசில் படம் வரை மலையாள சினிமாவின் தனித்துவத்தையும் அழகியலையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அரசியல் சினிமாவைப் பற்றிய அவரது பார்வை முக்கியமானது.
சர்வதேச சினிமாவைத் தொடர்ந்து பார்த்து வருபவர் என்ற முறையில் ஆங்கிலம் அயல்மொழிப்படங்களைப் பற்றிய அவரது பார்வைகளை சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஒவியர் என்பதால் அரங்க அமைப்பு மற்றும் கலை இயக்கம் குறித்து ஆழ்ந்து அவதானித்து எழுதியிருப்பது சிறப்பு.
பழைய இந்திப்படங்கள், பாடல்கள் பற்றிய அவரது நினைவுகள் நம்மையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
தேர்ந்த சினிமா ரசனை கொண்ட ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற நெருக்கத்தைத் தருகிறது இந்நூல். ஜீவாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.