நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

A Companion to Salman Rushdie என இவர் சல்மான் ருஷ்டி பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி இவரது நாவல்கள் எதையும் வாசித்ததில்லை.

இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என நேற்று வரை பத்திரிக்கைகள் கணித்த எந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை.

2005ம் ஆண்டின் புக்கர் பரிசு பட்டியலில் இவரது நாவல் இடம்பெற்றிருந்திருக்கிறது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

தான்சானியாவின் சான்சிபர் தீவில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியாகப் பணியாற்றுகிறார். இதுவரை பத்து நாவல்கள் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரை நூல் எழுதியிருக்கிறார்.

சர்வதேச அளவில் இலக்கியத்திற்கான உயரிய விருது எதையும் இதுவரை இவர் பெற்றதில்லை.

இவரது Paradise. Desertaion இரண்டு நாவல்களும் முக்கியமானவை என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. வோலே சோயின்காவிற்கு பிறகு நோபல் விருதை வென்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் குர்னா ஆவார்.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் பரிந்துரைகளிலிருந்து இருநூறு எழுத்தாளர்களின் பெயர்களை ஆரம்ப நிலையில் தேர்வு செய்கிறோம். அதிலிருந்து இருபது பெயர் கொண்ட அடுத்த கட்ட பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஐந்து பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இவர்களில் ஒருவருக்குத் தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்கிறார் எல்லன் மேட்சன்.

இவர் நோபல் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர். இது தான் வழக்கமான முறை என்றாலும் பெரும்பான்மை ஆண்டுகளில் பதிப்பகங்கள் மற்றும் இலக்கிய முகவர்களின் தலையீடு பரிசைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள்.

ஊடகப் பரபரப்புகள் அடங்கிய பிறகு இவரது நாவல்களைப் படித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

பிரெஞ்சு எழுத்தாளர் Annie Ernaux பெயர் நோபல் இறுதிப்பட்டியலில் இருந்தது. அவரது பெரும்பான்மை படைப்புகளைப் படித்திருக்கிறேன்

நோபல் பரிசு கிடைக்காத போதும் இவர் சமகாலத்தின் மிக முக்கியப் படைப்பாளி என்பேன்.

0Shares
0